சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !

சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி ! பக்கங்கள் : 20 விலை : ரூ.15 •••••• நூலின் தலைப்பு சிறுவர்களே! சிறுவர்களே! என்று இருப்பதால் ஆண்பாலுக்கு மட்டுமல்ல, பெண்பாலுக்கும் தான். இருபாலருக்கும் தான் என்று நூலின் தொடக்கத்திலேயே எழுதி உள்ளார்கள். பெறுமவற்றுள் யாமறிய தில்லை அறிவறிந்த மக்கட்பே நல்ல பிற! என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி அதற்கான விளக்கமும் அருமை. மக்களைப் பெற்றால் மட்டும் பெற்றவர் என்றார் அல்லர். அம்மக்கள் அறிய வேண்டியவற்றை எல்லாம் அறிந்த மக்களாக இருக்க வேண்டும். ஆற்றல் இருக்கும், திறமை இருக்கும், தேர்ச்சி இருக்கும், அப்படிப்பட்ட மக்களைப் பெற்றால் பெற்றவர்கள் ஆகி விடுவார்களா? அவர்கள் பழிச்செயல் எண்ணாத, தீயவை எண்ணாத, பண்பால் உயர்ந்த மக்களாக இருப்பவர்களைப் பெற்றால் தான் பெற்றவர்கள் எனப்படுவார்கள் என்று மூன்றாம் அடுக்கு மாளிகைமேல் பெற்றோர்களை உயர்த்துகிறார். நவீனமயமான இயந்திரமயமான இன்றைய உலகில் பல பெற்றோர்கள் குழந்தைகளின் தேவையைப் பூர்த்தி செய்கிறார்கள். ஆனால் உண்மையான தேவையான நல்ஒழுக்கம் போதிப்பதையும் பண்பை எடுத்து இயம்பவும் தவறி விடுகின்றனர். பொறுமையும் நேரமும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் வாய்ப்பதில்லை. அறிவு, ஆற்றல், திறமை இவைகளை எல்லாம் விட தலைசிறந்தது ஒழுக்கம், பண்பு என்பதை வலியுறுத்தி வடித்த திருக்குறள் விளக்கம் அருமை. சிறுவர்களே! சிறுவர்களே! என்று தலைப்பிட்ட போதும் பெரியவர்களான பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தும் விதமாக எழுதியிருப்பது சிறப்பு. நூலாசிரியர் தமிழறிஞர் இளங்குமரனார் அவர்களுக்கு பாராட்டுகள். சிறுவர்கள் சாதி, மதம் பார்ப்பதில்லை. அப்படி பார்க்காதீர்கள். எல்லோரும் சமம். எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள் என்று அன்பை பயிற்றுவித்துள்ளார். நூலிலிருந்து பதச்சோறாக சில கருத்துக்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ! “சமயம் இறை நம்பிக்கை சார்ந்தது - கோயிலுக்குள் இருக்கட்டும். தெருவுக்குள் வேண்டா, கட்சிக்கு வேண்டா, ஏனெனில் தெருவும், தேர்தலும், ஆட்சியும் மக்களுக்கெல்லாம் பொதுவானது”, அரசியல் கட்சிகளுக்கு மதம் தேவை இல்லை. மதத்தில் அரசியல் புகுத்தக் கூடாது என்பதை அன்றே தமிழறிஞர் இளங்குமரனார் அவர்கள் ஆணித்தரமாக குறிப்பிட்டுள்ளார். நாட்டில், அரசியலில் மதத்தை கலப்பதால் தான் பல பிரச்சனைகள் உருவாகி வருகின்றன. வன்முறைகளும் வளர்ந்து வருகின்றன. கோயில்களில் கருவறையில் தமிழ் ஒலிக்க வேண்டும். தமிழகக் கோயில்களில் தமிழுக்கு இடம் தர மறுப்பது மடமை, கொடுமை என்றும் சாடி உள்ளார். கோயில்களில் தமிழும் ஒலிக்க வகை செய்திட வேண்டி உள்ளார். “சிறுவர்களே, சிறுவர்களே, உங்கள் வாழ்வைக் கட்சியில் இணைத்து விடாதீர்கள், உங்கள் உலகம், எதிர்கால உலகம், போட்டி உலகம் இல்லை! கலக உலகம் இல்லை! உங்களுக்குள் வள்ளுவர். வள்ளலார், காந்தியார், தாகூர், ஐன்சுதீனார், நியூட்டனார், எடிசனார் உள்ளனர். உங்களுக்குள் மங்கையர்க்கரசியார், காக்கைபாடினியார், ஆண்டாளார், திரேசா அன்னையார், மேரி கியூரியார், வேலுநாச்சியார், சான்சிராணியார் என அனேகர் உளர். சிறுவர்கள் ஆண்பால், பெண்பால் இருவருக்கும் உங்களுக்குள் பலர் உள்ளனர் என எடுத்து இயம்பி தேசத்தலைவர்களும், புலவர்களும் அறிவியல் அறிஞர்களும் உள்ளனர் என நினைவூட்டி தன்னம்பிக்கை விதை விதைத்து உள்ளார். சிறுவர்களை இந்த நூலைப் படிக்க வேண்டும். ஒழுக்கமுள்ள பண்பாளர்களாக வளர்வதற்கு உதவிடும் நூல். தமிழ் எழுத்துக்கள் எப்படி உருவாகின? காரணம் என்ன? என மிகச் சிறப்பாக எழுதி உள்ளார். உயிர்எழுத்து, மெய்எழுத்து, உயிர்மெய் எழுத்து வரலாற்றை எழுதி உள்ளார். எழுத்துக்களை இளங்குமரனார் போல ஆராய்ந்து சொன்னவர்கள் யாருமில்லை எனலாம். சொல்லி இருக்கலாம் பலர். ஆனால் இவர் போல காரண காரியங்களோடு எழுத்துக்களின் வரலாறு எழுதி இருப்பது தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது. பொருள்கள் இருவகை, அவை இயற்கைப் பொருள், செயற்கைப் பொருள். அவையாவன என எல்லாவற்றையும் எழுதி குழந்தைகளுக்கு எளிதில் புரியும்வண்ணம் விளக்கி உள்ளார்கள். இயற்கையின் சீற்றங்கள் பற்றியும் எடுத்து இயம்பி உள்ளார். காலில்லார்க்குக் கையே காலாகிறது கையில்லார்க்குக் காலே கையாகிறது வலக்கை வலு பழக்கம் இல்லார்க்கு இடக்கையே வலு பழக்கமும் ஆகிறது புறக்கண் இல்லார்க்கு அகக்கண் ஆயிரமடங்காய ஒளி செய்கிறது! செவிக்குறையுடையார் செயல்வீறுகள் அளவிட முடியாதவர், கண்ணும் காதும் பேச்சும் இல்லார். பெருங்குறைப் பிறவி யாமில்லை என்பதை மெய்ப்பித்து உலகப்புகழ் பெற்றுள்ளனர். மாற்றுத் திறனாளிகள் குறைகளை சுட்டிக்காட்டாமல் அவர்களின் நிறைகளை சுட்டி நேர்மறை சிந்தனையுடன் விளக்கி அவர்களில் பலர் சாதித்து உள்ளனர். நீங்களும் சாதித்து புகழ் சேர்க்க வேண்டும என்று சிறுவர்களுக்கு வலியுறுத்தியது சிறப்பு. இந்த நூல் சிறுவர்களே! சிறுவர்களே! என்று இருப்பதால் இது சிறுவர்கள் படிக்க வேண்டிய நூல் என்று பெரியவர்கள் தவிர்த்திடாமல் அவர்களும் படித்துப் பயன்பெற வேண்டும். அறக்கருத்துக்களை அறிவியல் கருத்துக்களை தமிழறிஞர் இரா. இளங்குமரனார் மிக எளிமையாக விளக்கி உள்ளார்.

கருத்துகள்