ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி திருவள்ளுவர் தவச்சாலை, திருவளர்குடி (அல்லூர்), திருச்சிராப்பள்ளி மாவட்டம்-620 101 பக்கங்கள் : 28 விலை : ரூ. 20 •••••• ஆட்சியர்களே! ஆட்சியர்களே! என்ற தலைப்பிலான அளவில் சிறிய நூல், ஆட்சியாளர்கள் அனைவருக்கும் புத்தி புகட்டும் விதமாக அறநெறி, தமிழ்நெறி அறிவுறுத்தும் விதமாக உரத்த சிந்தனையுடன். நெஞ்சுரத்துடன் தமிழறிஞர் இரா, இளங்குமரனார் எழுதியுள்ள இந்த நூல் மிகச்சிறந்த ஆவணமாகும். ஆட்சியாளர்கள், ஆட்சித்தலைவர்கள் படித்தால் திருந்துவார்கள், மனம் மாறுவார்கள். (1) நாட்டுநல வித்து, (2) ஆட்சியர்களே! ஆட்சியர்களே! (3) சாதிக்கட்சியரே! சாதிக்கட்சியரே! (4) மதத்தலைவர்களே! மதத்தலைவர்களே! (5) உழைப்பவர்களே! உழைப்பவர்களே! (6) வேதியரே! வேதியரே! வாழிய நீவிர்! (7) முறைமன்ற நடுவர்களே! முறைமன்ற நடுவர்களே! (8) ஆங்கிலவழிக் கொடைவள்ளல்களே! ஆங்கிலவழிக் கொடைவள்ளல்களே! (9) பெற்றோர்களே! பெற்றோர்களே! (10) மாணவர்களே! மாணவர்களே! என பத்து தலைப்பிலான சிறிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. இரண்டு முறை எழுதி இருப்பதால் தலைப்பே கவனம் ஈர்ப்பதாக உள்ளது. சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பினர்களுக்கும் மனிதநேயம் கற்பிக்கும் விதமாக சாதி, மத, வெறி மாய்க்கும் விதமாக அறிவுரை அல்ல, அல்ல, அறவுரை வழங்கி உள்ளார். சமூகத்தில் உள்ள சீர்கேடுகளை களைய என்ன செய்ய வேண்டும் என்பதற்கு தீர்வுகளும் எழுதி உள்ளார். பொக்சிசம் போன்றது இந்நூல். நூலிலிருந்து பதச்சோறாக சில வரிகள் மட்டும் உங்கள் சிந்தனைக்கு இதோ! தேர்தல் செம்மையே ஆட்சி அடிப்படைச் செம்மை என்றால் தேர்தலில் கொள்ளப்படும் கரவு, ஊழல், வன்முறை, வெறி என்பவை ஆட்சி அரியணையில் ஏறும்போது எப்படி இருக்கும். மதுக்குடி, இலவசம், கையூட்டு, காட்சிப்படம், கட்சிவெறி, சாதிசமய வெறிகள் என்பவற்றால் சிந்தனையையும், உழைப்பையும், பண்பாட்டையும் கெடுப்பவர்கள் கட்சிக்கு வந்தால் ஆட்சி எப்படி இருக்கும்? செம்மையான உழவுத்தொழில் போல அரசியலிலும் செம்மை நிலவ வேண்டும், தேர்தலில் ஊழல் நடப்பது முறையன்று என்று வலியுறுத்தி உள்ளார். வாக்களிக்க பணம் தந்ததாக புகார் வந்து தேர்தல் ஆணையமே தேர்தலை நிறுத்தி வைத்த மோசமான நிகழ்வு தமிழகத்தில் நடந்தது, தமிழகத்திற்கு தலைகுனிவு தான். தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும். மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும். மதுவால் விளையும் வன்முறையும் ஒழிய வேண்டும் என்று சமூக பொறுப்பணர்வுடன் நல்ல பல கருத்துக்களை நூல் முழுவதும் எடுத்து இயம்பி உள்ளார். கேள்விகள் கேட்டு விடையாகவும் சுவைபட எழுதி உள்ளார், பாருங்கள். அரசு என்பது என்ன? எதற்காக அரசு? ஆளும் நாட்டின் மண்ணை, மண்ணின் மக்களை, மண்ணின் மொழியைக் காப்பது தானே அரசு! நெஞ்சிலே கைவைத்துச் சொல்லுங்கள், நாங்கள் செய்வது இறையாட்சியாம், ஆட்சி தான் என்று நெஞ்சமென ஒன்று இருந்தால் தானே கைவைத்துச் சொல்வீர்கள்! ஆட்சிக்கட்டில் ஏறும்போதே அதனைக் கழற்றி வைத்துவிட்டுத் தானே அமர்ந்தீர்கள்! தற்போது தமிழகத்தில் மனசாட்சியோடு ஓரளவிற்கு நல்லாட்சியே நடந்து வருகிறது, ஆனால் அய்யா கேட்டுள்ள கேள்விகள் ஒன்றிய அரசுக்குப் பொருந்துவதாக உள்ளன. மனசாட்சியின்றி, விலைவாசி ஏறுவதைக் கண்டுகொள்ளாமல் ஏழைகள் மேலும் ஏழையாவதையும் தனக்கு வேண்டிய சில பணக்காரர்கள் மட்டும் மேலும் கோடீசுவர்ர்கள் ஆவதற்கு உதவி, வேடிக்கைப் பார்த்து வருபவர்களுக்கு கேட்கப்பட கேள்விகளோவே தோன்றியது. மீனின் சாதி, பறவைச் சாதி, விலங்கின் சாதி என மற்றை உயிர்ப்பிரிவுகளுக்குத் தானே இருந்தன, மாந்தருக்குள் குடி உண்டு, குலம் உண்டு, இனம் உண்டு, ஒன்றன் விரிவு ஒன்று. ஒரு குடும்பத்தார், ஒரு குடிப் பலகுடியர், ஒரு குலம், பல குலத்தார் ஓர் இனம். “குலமும் ஒன்றே, குடியும் ஒன்றே! இனமும் ஒன்றே! அவரவர் பழக்கத்திற்குத் தக்கப் பழகிய தொழில் செய்தனர். ஆனால் தொழில் பிரிவு உயர்வு, தாழ்வு கொண்டது அன்று” என் சாதி பெரிது, உன் சாதி பெரிது என முட்டி மோதிக் கொள்ளும் - கொல்லும் சாதி வெறியர்களுக்கு புத்தி புகட்டும் விதமாக எல்லோரும் ஒரு குலம், எல்லோரும் ஓர் இனம் என்று திருமூலர் கூறிய கருத்தை, அறிஞர் அண்ணா வழிமொழிந்த கருத்தை நினைவூட்டும் விதமாக விளக்கி உள்ளார். சாதிச் சண்டைகள் இடுவது உயர்திணையான மனித இனத்திற்கு அழகு அல்ல என்பதை வலியுறுத்தி மாந்தநேயம் கற்பித்து உள்ளார். “மதங்கள், சமயங்கள், மார்க்கங்கள் எனத் தோன்றாப் பழங்காலம் பெருமை மிக்கது. அந்நிலையில் வாழவே சமயச் சான்றோர் வழிகாட்டினர். ஆனால் அருவிநீர் அகப்பட்ட கழிவுகளை எல்லாம் திரட்டியது போல் மாந்தர் சிறுமைத்தனத்தைச் சமய மதங்களில் ஏந்திக் கடவுள் பெயரால் செய்யக்கூடாக் கேடுகள் செய்கின்றனர் என்பது உண்மை விளக்கமாம்.” பழங்காலத்தில் பெருமையோடு கொடிகட்டி வாழ்ந்த தமிழனுக்கு மதம், கடவுள் இல்லை என்ற உண்மையை உணர்த்தி உள்ளார். கீழடியில் கிடைத்த பொருட்களில் ஒன்று கூட கடவுள் மத குறியீடுகள் எதுவும் கிடைக்கவில்லை. முதல் மனிதன் தமிழன் வாழ்ந்தபோது சாதி, மதம், கடவுள் இல்லை என்பதே உண்மை. மதத்தின் பெயரில் நடக்கும் மடமைகளைச் சாடி உள்ளார். “இந்திக்காரனைப் பாருங்கள் – வங்கத்தானைப் பாருங்கள் – அவ்வளவு வேண்டா – ஆந்திரன் – கருநாடகத்தான் – மலையாளத்தான் ஆகியோரையாவது பாருங்கள், உங்களைப் போல் பள்ளிக்குள் நுழையும் போதே சமுதாயக்கொலை புரியும் சண்டாளர்கள் உண்டோ? அரசுப்பள்ளிகளில் மட்டும் வாழ்ந்த தமிழ்வழிக்கல்வி அருகி அங்கும் ஆங்கில வழிக்கல்வி பரவி விட்டது. தமிழர்களிடையே ஆங்கில வழிக் கல்வியில் பிள்ளைகளைப் படிக்க வைப்பதே பெருமை என்று கருதுகின்றனர். ஒருவித மனநோயாகப் பரவிவிட்டது. ஆரம்பக்கல்வி என்பது தாய்மொழிக் கல்வியாக தமிழ்வழிக் கல்வியாக இருந்தால் தான் குழந்தைகள் அறிவாளி ஆகும் என்பதை வலியுறுத்தியது சிறப்பு.

கருத்துகள்