நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி-604 408, பக்கங்கள் : 80 விலை : ரூ. 90 •••••• ஹைக்கூவில் தொடர்ந்து இயங்கி வரும் இனிய நண்பர். சக கவிஞர்களுக்கு அணிந்துரை நல்கி ஊக்குவிக்கும் மு. முருகேஸ், கவிஞர் அய். தமிழ்மணி, கவிஞர் அ. உமர் பாரூக்,நூலாசிரியரின் கணவர் க. முஹம்மது ஹனிபா ரிஜ்வான் ஆகியோர் அணிந்துரை வழங்கி சிறப்பித்து உள்ளனர். நூல் ஆசிரியர் கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் அவர்களின் முதல் ஹைக்கூ கவிதை நூலான “விரலிடுக்கில் வெளிச்சம்” என்ற நூலின் மூலம் இலக்கிய உலகில் வெளிச்சம் பெற்றவர். கம்பம் இலாஹி தொடக்கப்பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றிக்கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருகிறார். பாராட்டுகள். பிள்ளையில்லா வீடு துள்ளி விளையாடுகிறது முதியவர் மடியில் நாய்க்குட்டி! புகழ்பெற்ற சொலவடைகளை மாற்றி ஹைக்கூ எழுதுவதும் சிறந்த யுத்தி தான். ‘பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்டானாம்‘ என்பதை மாற்றி சிந்தித்து வடித்த ஹைக்கூ நன்று. தீயாய் வறுமை அலைபேசியின்றி இணையவழிக்கல்வி தொடரும் தற்கொலைகள் கொடிது கொடிது வறுமை கொடிது, கொரோனா தொற்றுக் காலத்தில் நடந்த இணையவழிக்கல்விக்காக திறன்பேசி அலைபேசி வாங்கிட வசதி இல்லாத காரணத்தால் வறுமையின் காரணமாக பல தற்கொலைகள் நடந்தது. மறக்கமுடியாத கொடுமைகள் அவை. அதனை நினைவூட்டிய ஹைக்கூ. காய்கறிக் கழிவு கொண்டு உணவு சமைக்கிறாள் பொம்மைக்காக மகள்! இந்த ஹைக்கூ படித்தவுடன் சிறு குழந்தையாக இருந்தபோது பொம்மைகள் வைத்து அடுப்பு வைத்து காய்கறி நறுக்கிப் போட்டு விளையாண்ட விளையாட்டு அல்லது பார்த்த விளையாட்டு நினைவுக்கு வநது விடுகின்றது. பெட்டிக்கடை மிட்டாய் இன்றும் இனிக்கிறது தொடக்கப்பள்ளி நினைவு! இந்த ஹைக்கூ படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் தொடக்கப்பள்ளி காலத்தில் பள்ளியின் வாயிலில் விற்கும் மிட்டாய் வாங்கி சுவைத்த நினைவு மலரும் நினைவுகளாக மலர்கின்றன. அழும் குழந்தை வறண்ட மார்பில் வியர்வை வாசம்! ஏழைத்தாயின் வறுமையை உணர்த்திடும் ஹைக்கூ. குறைந்த சொற்களைக் கொண்டு வலிய கருத்துக்களை விதைக்கும் ஆற்றல் ஹைக்கூ கவிதைக்கு உண்டு என்பதை உணர்த்திடும் ஹைக்கூ.நெகிழ்ச்சி.ஏழ்மையின் சோகம்.கொடுமை. திருமண நிகழ்வு வெளியில் சிரித்து தனக்குள் அழும் முதிர்கன்னி! தங்கம் விலை ஏறிக்கொண்டே போவதால் ஏழைப் பெண்களின் திருமணமும் தள்ளிக்கொண்டே போகின்றன. வரதட்சணை ஒழிந்த பாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் முதிர்கன்னிகள் பெருகி வருகின்றனர். அவர்களின் ஏக்கப் பெருமூச்சு உணர்த்தும் ஹைக்கூ நன்று. முதிர்கன்னிகள் மட்டுமல்ல, முதிர்காளைகளும் பெருகி வருகின்றனர். காரணம் வரதட்சணை தான். திருவிழாக் கூட்டம் மூச்சு முட்டி நசுங்கும் குழந்தை கையில் பலூன்! காட்சிப்படுத்தும் ஹைக்கூ நன்று. நம் மனசு முன் திருவிழாவும், குழந்தையும், பலூனும் நினைவிற்கு வந்து விடுகின்றன. நசுங்கும் மட்டுமல்ல, சிலசமயம் பலூன் உடைந்தும் விடும். குழந்தையும் மனசு உடைந்து அழும். குழலினிது யாழினிது தான் உற்றுக்கேள் பறையும் இனிது! உண்மை தான். பறை இசைக்கு ஈடான இசை வேறில்லை. அனைவரையும் வசீகரிக்கும், ஈர்க்கும் வனப்பான இசை தான் பறை இசை. வெளிநாட்டிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளும் பறை இசை கேட்டு வியந்து விடுகிறார்கள். பிரமாண்டமான இசை தான் பறை. யாழ், குழல் தோற்றுப்போகும் உண்மை தான். திருவள்ளுவரின் திருக்குறளையும் நினைவூட்டும் ஹைக்கூ நன்று. அறுந்த செருப்பு சரிசெய்கிறது ஊக்கு மாதக் கடைசி! நூலாசிரியர் கிராமத்து பள்ளி ஆசிரியை என்பதால் வறுமையில் வாடிடும் மக்களின் நிலையை உற்றுநோக்கியவர் என்பதால் படைப்புக்கு பல பொருட்கள் கிடைக்கின்றன. மாதக்கடைசி என்பதால் செருப்பு தைக்கக்கூட பணம் இல்லாமல் ஊக்கு மாட்டி நடக்கும் ஏழைகள் இன்றும் நமது கிராமங்களில் இருக்கின்றனர். நம் நாட்டில் வறுமை இன்னும் ஒழியவில்லை. ஒழிப்பதாகச் சொன்னவர்கள் ஒழிக்கவில்லை என்பதே உண்மை. பரீட்சை காலம் இரவெல்லாம் தலைகீழாய் முகத்தின் மேல் புத்தகம்! இரவில் விழித்திருந்து பரீட்சைக்கு படிக்கும் மாணவ-மாணவியர் தூக்க அசதியில் அப்படியே புத்தகத்தை வைத்தபடியே தூங்கி விடுவர். அதனை உற்றுநோக்கி வடித்த ஹைக்கூ சிறப்பு. விருந்தினர் வருகை வழக்கத்தை விடக் கூடியது பாலில் நீரளவு! வறுமையில் வாடுவோருக்கும் நடுத்தரக் குடும்பத்தினருக்கும் திடீரென விருந்தினர் வந்து விட்டால் உடன் சென்று பால் வாங்க முடியாது. எனவே இருக்கும் பாலில் வழக்கத்தை விட கூடுதலான தண்ணீர் கலப்பதை காட்சிப்படுத்தி உள்ளார். மாலை நேரக் கடற்கரை ரசிக்க மனம் வரவில்லை சுண்டல் விற்கும் சிறுவன்! கடலையும் கடலலையும் ரசிப்பது சுகமான அனுபவம் தான். இதற்காகவே கடற்கரைக்கு பலரும் வந்து போவார்கள். ரசிப்பார்கள். மகிழ்வார்கள். ஆனால் வறுமையின் காரணமாக கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறுவனுக்கு கடலை ரசிக்க மனமும் நேரமும் இருப்பதில்லை என்பது உண்மை. நூலாசிரியர் கவிதாயினி ஆசிரியை ராஜிலா ரிஜ்வான் அவர்கள் முகலிலும் பல்வேறு இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகின்றார். பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள் . பள்ளி, வீடு என்று சராசரி ஆசிரியராக இல்லாமல் இலக்கிய ரசனையோடு படைப்பதற்கு பாராட்டுகள். ***

கருத்துகள்