ை டியர் பூதம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி! இயக்கம் : இராகவன் ; இசை : இமான் ; நடிப்பு : பிரபுதேவா! வசனம் தேவா.!

மை டியர் பூதம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி! இயக்கம் : இராகவன் ; இசை : இமான் ; நடிப்பு : பிரபுதேவா! வசனம் தேவா.! ****** ‘மஞ்சப்பை’ என்ற வெற்றிப்படத்தை வழங்கிய மதுரைக்காரர் இயக்குனர் இராகவன் இயக்கி இருக்கும் நல்ல படம். இந்தப் படத்தை பார்ப்பவர்கள் இனி “திக்குவாய்” குறை உள்ளவர்களை பார்த்து சிரிக்கவோ கேலி செய்யவோ மாட்டார்கள் என்று அறுதியிட்டுக் கூறலாம். படத்தின் மையக்கரு இது தான். “திக்குவாய் உடல்குறை அல்ல, மனக்குறை, அவர்கள் பேசுவதை கவனித்தால் போதும் நன்றாகப் பேசி விடுவார்கள், திக்குவாய் என்பதற்காக பேச்சைக் கேட்காமல் மறுதலிக்காமல் இருங்கள்” என்பதை அறிவுறுத்தும் நூல். கடவுள், பேய், பூதம் இவற்றில் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாளன் நான். ஆனால் படத்தை ரசித்துப் பார்த்தேன். பூதம் என்பது கற்பனை தான். உண்மை இல்லை. இருந்தபோதும் பூதம் என்ற வடிவின் மூலம் திக்குவாயாக நடித்துள்ள சிறுவன் (திருநாவுக்கரசு)அஸ்வத் சிறப்பாக நடித்துள்ளான். சிறந்த நடிகர் விருதும் வழங்கலாம் சிறுவனுக்கு. சிறுவன் தான் படத்தின் கதாநாயகன். பூதமாக நடித்துள்ள நடனமன்னன் பிரபுதேவா, இவர் இயக்குனர், நடன இயக்குனர், நடிகர் என்பதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, பிம்பம் பற்றிய கவலைகளை விடுத்து, மொட்டை அடித்துக்கொண்டு பூதமாக நடித்தது சிறப்பு. நல்ல மனம். சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் அனைவரும் பார்க்க வேண்டிய படம். திக்குவாய்காரர்களின் மனவலியை, வேதனையை, சோகத்தை பூதம் என்ற நகைச்சுவை கலந்து உணர்த்தி உள்ளார். பிரபுதேவா பூதமாக வந்தாலும், பூதமற்ற இயல்பான தோற்றத்தில் ஒரு பாட்டுக்கு சிறப்பாக புதுமையாக நடனமாடி பிரபுதேவா நடன ரசிகர்களி திருப்திபடுத்தி உள்ளார். திருநாவுக்கரசு பள்ளியில் திக்குவாயை சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்து காயப்படுத்துகின்றனர். ஆசிரியரும் அவன் வாசிக்க முற்படும்போதெல்லாம் வாசிக்க வேண்டாம் என்று காயப்படுத்துகிறார். இந்த அவமானங்களே மனக்குறையாகி திக்குவாய் தன்மையை அதிகப்படுத்துகின்றது. அவர்கள் பேசுவதற்கு பொறுமையாக செவிமடுத்தாலே அவர்கள் நன்றாக பேசத் தொடங்கி விடுவார்கள் என்ற உளவியல் உண்மையை உணர்த்தும் நல்ல படம். திருநாவுக்கரசு மாறுவேட போட்டியில் நன்றாகப் பேசி முதல் பரிசு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தது கண்டு, தவறு செய்த ஆசிரியர் மனம் திருந்தி, திருநாவுக்கரசுக்காக அம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறார். அம்மாவிடம் திருநாவுக்கரசு, ‘நீ கூட என் பேச்சை பொறுமையாக கேட்கவில்லை அம்மா’ என்று கதறும்போது படம் பார்க்கும் நாமும் அழுது விடுகிறோம். திக்குவாய்காரர்களின் மனக்குமுறலை திக்காமல் பேசி உள்ள நல்ல படம். படமல்ல நம் அனைவருக்கும் பாடம். தலைமைச் செயலாளர் ஆவதற்கு முன்பு திரு. வெ.இறையன்பு நடித்துள்ள படம். அல்ல அல்ல இறையன்பாகவே வந்து போகும் படம். பொதுவாக பல கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் சென்று சிறப்புரை வழங்கி வந்தவர். இந்த படத்திலும் ஒரு பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வந்து, மாணவர்களின் மாறுவேடப் போட்டியை கண்டுகளிக்கிறார். உலகப்பொதுமறை படைத்த திருவள்ளுவர் வேடத்தில் வரும் மாணவனைப் பார்த்து கைதட்டுகிறார். திருநாவுக்கரசு மாறுவேடமிட்டு, சரஸ்வதியை வணங்கி, அழுது பேச்சு தா என்று வேண்டி, அம்மா அப்பா என்று பேசி, கண்கலங்க வைத்து கைதட்டல் வாங்குகிறான். இறையன்பு அவர்கள், திருநாவுக்கரசு திக்குவாய் என்பதை கேள்விபட்டு அவனுக்கு முதல் பரிசு வழங்கி சிறப்புரையாற்றுகின்றார். ‘திக்குவாய் என்பது உடல் குறை அல்ல - மனக்குறை தான்’ என விளக்கமளித்து திருநாவுக்கரசுக்கு தன்னம்பிக்கை ஊட்டுகிறார். அதன் பிறகே திருநாவுக்கரசுக்குள் மாற்றம் நிகழ்ந்து சாதிக்க முயல்கிறான்.100பூக்களின் பெயரை திக்காமல் இறுதித்தில் சொல்கிறான். இறையன்பு அவர்கள் 5 நிமிடங்கள் வந்தாலும் மனதில் நிற்கிறார். அவராகவே வந்து இருப்பது தனிச்சிறப்பு. மிகப்பெரிய மனிதரை மிகச்சரியாக படத்தில் சேர்த்த இயக்குனர் இராகவனுக்கு பாராட்டுகள். மருத்துவர் சிவராமன் அவர்களும் மனதில் நிற்கிறார். மருத்துவ விளக்கம் தருகிறார். இனிய நண்பர் முனைவர் சந்திரன் இரண்டு காட்சியில் இரண்டு நிமிடங்கள் தான் வருகிறார், மனதில் நிற்கிறார். பூதத்தின் மேஜிக் வித்தை குழந்தைகள் ரசிக்கும்படி உள்ளது. திருநாவுக்கரசுக்கு ஆடைகள் மாற்றுவது, பந்து வரவழைத்துக் கொடுப்பது, சக வில்லன் மாணவர்களை மடக்குவது, கேலி செய்கிற பலசரக்குக் கடைகாரரை திருத்துவது என பூதத்தின் பங்களிப்பு ரசிக்கும்படி உள்ளது. பொழுதுபோக்குத் திரைப்படத்தில் சமுதாயப் பழுது நீக்கும் விதமாக விழிப்புணர்வு கருத்துக்கள் விதைத்த இயக்குனர் இராகவனுக்கு பாராட்டு. கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு மிகவும் சிரமப்பட்டு உள்ளனர். காட்சிப்படுத்திய விதம் சிறப்பு. இமான் சிறப்பாக இசை அமைத்துள்ளார். பாடல்கள் நன்று. யுகபாரதி நன்றாக எழுதி உள்ளார். ஆபாசக் காட்சிகள் இல்லை. வெட்டுக்குத்து வன்முறை இன்றி துப்பாக்கிச் சத்தங்கள் இன்றி நல்ல திரைப்படத்தை வழங்கி உள்ள ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டுகள். ******

கருத்துகள்