புதுகைத் தென்றல் மாத இதழ் ஆசிரியர் புதுகை மு . தருமராசன் அவர்களுக்கு 80வது அகவை தொடக்க நாள் இனிய நாள் வாழ்த்துக்கள் !அன்புடன் கவிஞர் இரா .இரவி ! பிறந்த நாளை முன்னிட்டு மறு பதிவு !

புதுகைத் தென்றல் மாத இதழ் ஆசிரியர் புதுகை மு . தருமராசன் அவர்களுக்கு 80வது அகவை தொடக்க நாள் இனிய நாள் வாழ்த்துக்கள் !அன்புடன் கவிஞர் இரா .இரவி ! பிறந்த நாளை முன்னிட்டு மறு பதிவு ! தி.க.சி. எனும் ஆளுமை ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன், புதுகை மு. தருமராசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை – 17. விலை : ரூ.200, பக்கம் 304, தொலைபேசி : 044 2432810. ***** ஒரு எழுத்தாளர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்த எளிமையின் சின்னம், நல்லதை போற்றிய அன்னம் இலக்கிய ஞானி தி.க.சி. என்ற மாமனிதர் பற்றிய ஆவணமாக நூல் வந்துள்ளது. நூலாசிரியர்களான தமிழ்த்தேனீ இரா. மோகன், புதுகைத் தென்றல் இதழாசிரியர் புதுகை மு. தருமராசன் இருவரும் பாராட்டுக்குரியவர்கள். இருவரின் கடின உழைப்பை உணர முடிந்தது. தி.க.சி. பற்றி வந்தவற்றை எல்லாம் தொகுத்து, பகுத்து, வகுத்து நூலாக்கி உள்ளார்கள். பதிப்புலகில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் வானதி பதிப்பகத்திற்கும் பாராட்டுக்கள். மிக நேர்த்தியான அட்டை வடிவமைப்பு உள்அச்சு யாவும் திறம்பட பதிப்பித்து உள்ளனர். சிறந்த எழுத்தாளர் பொன்னீலன் தொடங்கி பேராசிரியர் தொ. பரமசிவன் வரை பல்வேறு எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேராசிரியர்கள் தி.க.சி. எனும் ஆளுமை பற்றி பகிர்ந்து கொண்ட மலரும் நினைவுகளின் தொகுப்பு. இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய மிகச் சிறந்த மனிதர் தி.க.சி. இந்த நூல் வாங்கிப் படித்துப் பயன் பெற வேண்டும். அஞ்சல் அட்டை கடிதங்கள் வழக்கொழிந்து வரும் காலம் இது. ஆனால் அஞ்சல் அட்டை மூலமே இலக்கியம் வளர்த்த இனியவர். தி.க.சி. தினமணி நாளிதழில் மிகச்சிறந்த கட்டுரைகள் எழுதுவதோடு நின்று விடாமல், பெரிய எழுத்தாளர் என்ற பிம்பம் பற்றி எல்லாம் கவலை எதுவும் கொள்ளாமல் அஞ்சல் அட்டை மூலம் வாசகர் கடிதமும் எழுதி வந்த எளிமையாளர், இனிமையாளர் தி.க.சி. இந்த நூல் முழுவதும் தி.க.சி., தி.க.சி., தி.க.சி. அது தவிர வேறு இல்லை என்று சொல்லுமளவிற்கு முழுவதும் தி.க.சி. பற்றியது. மிகச்சிறந்த மனிதர் தி.க.சி. அவர்களுக்கு தமிழ்த்தேனீ இரா. மோகன், புதுகை மு. தருமராசன், வானதி இராமனாதன் மூன்று பேரும் சேர்ந்து தொடுத்து வழங்கி உள்ள புகழ்மாலை. வரலாற்று ஆவணமாக உள்ள நூல். இனிவரும் தலைமுறையினரும் தி.க.சி. என்ற இவர் பற்றி அறிந்து கொள்ள உதவிடும் அற்புத நூல். தி.க.சி. பற்றி வந்தவற்றை எல்லாம் தொகுக்க வேண்டும் என்று பொறி தட்டி வந்தப் பொறி இன்று ஒளிவிளக்காக ஒளிர்ந்துள்ளது. பாராட்டுக்கள். தி.க.சி. பற்றி நூலில் ஏராளமாக தகவல் உள்ளன. தகவல் களஞ்சியமாக உள்ளது. இலக்கிய ஞானிகளான வல்லிக்கண்ணனும், தி.க.சி. என்ற இரண்டு இமயங்களும் நட்பிற்கு இலக்கணம் வகுத்தவர்கள். அவர்கள் இருவர் போல இனி யார் வாழ்வார் இங்கு என்று சொல்லுமளவிற்கு வாழ்ந்தவர்கள். இந்த நூலில் தி.க.சி. பற்றி எழுத வந்த பலரும் அவரது வழிகாட்டி நண்பர் வல்லிக்கண்ணன் பற்றியும் எழுதியது சிறப்பு. அனைத்தும் முக்கியமானவையாக உள்ளன. எதை எழுதுவது, எதை விடுப்பது என்ற முடிவுக்கு வர முடியாமல்பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு. “சாய்ந்து விட்ட ஆலமரம்!” – சி. மகேந்திரன் ! “வல்லிக்கண்ணன் தம்மை எழுத்துலகுக்குச் சுண்டு விரல் பிடித்து, அழைத்து வந்த விதம் பற்றி வியந்து தி.க.சி. விவரிக்கிறார். அப்பொழுது பிரசண்ட விகடன் என்னும் இதழ் மாதம் இருமுறை வெளிவந்து கொண்டிருந்தது. இதில் எனது முதல் படைப்பு வெளிவந்து, பெரும் அதிர்ச்சியை எனக்குக் கொடுத்தது. இந்த படைப்பைப் பிரசண்ட விகடனுக்கு நான் அனுப்பவில்லை. யார் அனுப்பியிருப்பார்கள்? குழம்பிப் போனேன். வல்லிக்கண்ணன் எனக்குத் தெரியாமலேயே அனுப்பியிருக்கிறார். பத்திரிகைகளில் மட்டுமல்ல என்னுடைய படைப்புகள் அனைத்தும் நூல் வடிவம் பெறுவதற்கு ஆணிவேராக விளங்கியவரும் அவரே. சொல்லப் போனால் தன் நூல் வெளிவருவதைக் காட்டிலும், எனது நூல் வெளிவருவதைக்கண்டு பெருமகிழ்வு கொள்பவர் வல்லிக்கண்ணன்” என்று நெஞ்சு உருகக் குறிப்பிட்டுள்ளார் தி.க.சி. இதுபோன்ற பிறர் நலம் பேணும் மனிதர்கள் இன்றைக்கு இருக்கிறார்களா? ஆம் இருக்கிறார்கள். எனது “புத்தகம் போற்றுதும்” நூல் வெளிவர முழுமுதல் காரணமாக இருந்தவர் இந்த நூலாசிரியர் தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்கள் தான். நூல் வெளியீட்டு விழாவில் இந்த நூல் குறித்து நீதியரசர் ஆர். மகாதேவன் அவர்களும், பேராசிரியர் இராஜா கோவிந்தசாமி அவர்களும் பாராட்டிய போது என்னை விட கூடுதலாக மனமகிழ்ச்சி அடைந்தவரும் அவரே. இந்த நூல் படிக்கும் போது மலரும் நினைவுகளாக இந்த நிகழ்வுகளும் நினைவிற்கு வர நெகிழ்ந்து போனேன். கனிந்த மானுடன் ! விக்கிரமாதித்தன், ‘தாமரை’ நூறு இதழ்கள் தி.க.சி.யின் ஆக்கத்தில் தான் வந்தன. அவருடைய ஆகப் பெரிய கொடையும் சாதனையும் இது தான். “நிறைவாழ்வு தான். இந்தக்காலத்தில் பாயில் படுக்காமல் நோயில் விழாமல் மரணம் அடைவதும் பாக்கியம் தான்”. தி.க.சி. பாக்கியவான், கனிந்த பழம் உதிர்ந்து விட்டது. இப்படி பலரும் அவர் பற்றிய மலரும் நினைவுகளை நூல் முழுவதும் பகிர்ந்து உள்ளனர். தி.க.சி. என்றொரு ஆலமரம் ! வண்ணநிலவன் ! தி.க.சி. என்ன எழுதினாலும் அதில் துடிப்பும் ஜீவனுமிருக்கும் கடிதங்களில் கூட இதைக் காணலாம். ‘திறனாய்வுத் தென்றல் தி.க.சி.! திருப்பூர் கிருஷ்ணன் ! ‘தனி ஒருவராக இருந்து ஓர் இயக்கம் போல் பணியாற்றிய இன்னொருவரைத் தமிழ் இலக்கிய உலகம் இனி என்று காணப் போகிறது’. இந்த நூலில் கட்டுரை எழுதிய எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களே மதுரைக்கு வந்து இந்த நூல் வெளியீட்டு விழா சிறப்புரையாற்றியது சிறப்பு. தி.க.சி.-யின் நாட்குறிப்புகள் – பேராசிரியர் தொ.பரமசிவன் ! தி.க.சி. எழுதிய டைரி அவரைப் பற்றியோ அவர் குடும்பத்தைப் பற்றியோ இல்லை. நண்பர்களைப் பற்றியும் அவர் படித்த நூல்களைப் பற்றியும் மட்டுமே உள்ளது. நாட்குறிப்புகள் உணர்த்தும் தி.க.சி.-யின் ஆளுமைப்பண்புகள் ! பேராசிரியர் இரா. மோகன். ”தி.க.சி.-யைப் பொறுத்த வரையில் வாசிப்பு என்பது ஒரு பழக்கம்-வழக்கம்-வாடிக்கை என்பவற்றிற்கு எல்லாம் மேலாக வாழ்க்கை” புதுகை மு. தருமராசன் அவர்கள் மதுரைக்கு வரும் போதெல்லாம் தி.க.சி.யை சென்று பார்த்து வருவார்கள். தந்தை மகன் போல பாசமாகப் பழகியவர். இன்று இரு நண்பர்கள் இணைந்தால் மதுக்கடை செல்லும் காலம் இது. இன்று இரண்டு நண்பர்கள் இணைந்து ஒரு நூலை வழங்கி இருப்பதற்கு பாராட்டுக்கள்.

கருத்துகள்