பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாள் 12.7.1975 பாடல்களில் வாழ்கிறான் முத்துக்குமார் ! கவிஞர் இரா .இரவி !

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாள் 12.7.1975 பாடல்களில் வாழ்கிறான் முத்துக்குமார் ! கவிஞர் இரா .இரவி ! முத்தான பாடல்கள் புனைந்த முத்துக்குமார் முக்காலமும் வாழ்வான் அழிவில்லை அவனுக்கு ! மகாகவி பாரதி கவிதையின் நாயகன் அவன் மண்ணில் வாழ்ந்த காலம் முப்பத்திஒன்பது ! பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாதியில் இருபத்தி ஒன்பதில் இயற்கை எய்தினான் ! முத்தாய்ப்பான பாடல்கள் திரைப்படங்களுக்கு எழுதிய முத்துக்குமார் வாழ்ந்த காலம் நாற்பத்தி ஒன்று ! பனிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி பனிரெண்டு ஆண்டும் தினமும் மலர்வித்தான் குறிஞ்சி ! ஆயிரத்து ஐநூறுக்கு மேல் பாடல்கள் எழுதி அளப்பரிய உயரம் சிகரம் தொட்டு மகிழ்ந்தான் ! 'ஆனந்த யாழை மீட்டுகிறாய் 'என்ற பாடல் ஒலியில் அற்புதக் கவிஞன் முத்துக்குமார் வாழ்கிறான் ! 'அழகே அழகே' பாடல் ஒலிக்கும் இடங்களில் அன்பான கவிஞன் முத்துக்குமார் வாழ்கிறான் ! இரண்டு தேசிய விருதுகளை இளமையில் பெற்று இமாலய சாதனை புரிந்தவன் முத்துக்குமார் ! 'தேவதையை கண்டேன் 'பாடலின் மூலம் தேவதையை காண வைத்த யுககவிஞன் ! 'தெய்வங்கள் எல்லாம் தோற்றுப்போகும் ' பாடலில் தந்தையின் அன்பை உயர்த்திப் பிடித்தவன் ! தாயில்லாப் பிள்ளை தறிக்கெட்டுப் போகும் தரணியில் உள்ள பழமொழியை தகர்த்திட்டவன் ! 'சுற்றும் விழி சுடரே 'என்ற பாடலின் மூலம் சுகமான காதல் நினைவை மலர்வித்தவன் ! காதலர்களின் அலைபேசி ஒலிப்புப் பாடல் கவிஞன் முத்துக்குமாரின் பாடல்களே அதிகம் ! 'மழை அழகா வெயில் அழகா ' பாடலின் மூலம் மழைக்கு இணையாக வெயிலையும் உயர்த்தியவன் ! குழல் யாழ் என திருவள்ளுவன் வாக்குப்படி குடும்ப வாழ்வில் இரண்டு குழந்தைக்கு தந்தையானவன் ! ஜீவலட்சுமியின் ஜீவனாக வாழ்ந்தவன் ஜீவன் இழந்து ஜீவலட்சுமியை சோகத்தில் நடைப்பிணமாக்கினான் ! தமிழ் மீது இருந்த பற்றில் சிறுபகுதியை தன் உடல் மீது வைத்து இருக்கலாம் முத்துக்குமார் ! பல்வேறு உதவிகள் பலருக்கும் செய்திருந்தபோதும் பழகியவர்களிடம் எந்த உதவியும் கேட்காதவன் ! கொடிய தீயுக்கும் உன் பாடல் கேட்க ஆசை வந்து கோரிக்கை வைத்ததோ இயற்கையிடம் ! சாவே உனக்கு ஒரு சாவு வராதா ? என சபித்திடத் தோன்றுகிறது எந்தன் மனம் ! இறப்பே உனக்கு ஒரு இறப்பு வராதா ? என ஏங்கித் தவிக்கிறது எல்லோர் மனமும் ! பாரதி பட்டுக்கோட்டை கவியரசு கண்ணதாசன் பாடல்கள் போல முத்துக்குமார் பாடல்களும் நிலைக்கும் ! . கவியரசு கண்ணதாசன் எழுதிய மரணமில்லை வரிகள் கவிஞர் முத்துக்குமாருக்கும் முற்றிலும் பொருந்தும் ! வலிமையான பாடல்கள் எழுதி எளிமையாக வாழ்ந்தவன் வாழ்ந்த காலம் முடிந்தாலும் பாடல்களால் வாழ்வான் ! உடலால் உலகை விட்டு மறைந்து விட்டபோதும் பாடல்களால் என்றும் வாழ்வான் முத்துக்குமார் !

கருத்துகள்