தீண்டாதே தீயவை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார். ஆசிரியர் கவிதை உறவு.

தீண்டாதே தீயவை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார். ஆசிரியர் கவிதை உறவு. வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளுதெரு, தி.நகர், சென்னை – 17. தொலைபேசி : 044 2434 2810. பக்கம் : 60, விலை : ரூ.50. ‘கவிதை உறவு’ – ஜுன் 2022 மாத இதழ் ****** அளவிற் சிறிய நூல் தான். ஆனால் எடுத்துக்கொண்ட விஷயம் பெரியது. ‘எதைச் செய்ய வேண்டும்’, ‘எதைச் செய்யக்கூடாது’ என்பது தான் நல்ல வாழ்க்கையை உறுதிப்படுத்துகிற நெறி. ‘செய்யக் கூடாததைச் செய்வதும், ‘செய்ய வேண்டுவதை செய்யாததும் தீமை பயக்கும்’ என்பதைக் குறள் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. ‘தீயவற்றைத் தொடாதே’ என்பது கவிஞர் இரா. இரவி எழுப்புகிற குறுகத் தரித்த குறள். ‘தீண்டாதே தீயவை’ எனும் இந்நூலில் குடியின் கொடுமையைத் தான் முழுமையாக வலியுறுத்தி உள்ளார். ‘குடிப்பது வீட்டுக்கும் கேடு ; நாட்டுக்கும் கேடு’ என்று மதுப்போத்தல்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், குடிப்பதால் நாட்டுக்கு (அரசுக்கு) நன்மை, வருமானம் வருவதால். ஆனால் வீட்டுக்கு அது கேடு என்பதைச் சொல்ல முடிகிறதே தவிர நம்மால் வலியுறுத்த முடியவில்லை. இந்த இடத்தில் தான் கவிஞன் சவுக்கை கையில் ஏந்துகிறான். ஏனெனில், சமூகப் பிரக்ஞை அவனிடம் தான் அதிகமிருக்கிறது. ‘குடிக்காதே’ என்று கூறுவதை விடவும் குடியினால் ஏற்படும் பாதிப்பைச் சொல்லும் போது அதன் கொடுமை நம்மவர்களுக்குப் புரியும். கவிஞர் இரா. இரவி அவர்கள் இச்சமூகக் கடமையை இந்நூலின் வாயிலாய் நிறைவேற்றி உள்ளார் எனலாம். “ஆற்றலை அழிக்கும் மது ; ஆண்மையைக் குறைக்கும் மது ; மதியை மயக்கிடும் மது ; மானம் கெட வைக்கும் மது” என்று, ‘மது உடலைக் கெடுத்து உயிரைக் கெடுத்து மானம் கெட வைக்கும் அது’ என்பதை அடித்துச் சொல்வது சிறப்பு. போதை ஏறியவர்களுக்கு என்ன தான் தகுதி, சிறப்பு இருந்தாலும் தெருக்கோடியில் விழுந்து கிடக்கும் போது போவதென்ன மானம் தானே? மதுவும் புகையும் அஞ்சப்பட வேண்டியவை, ஏனெனில் அது தீயினும் தீயது. இதைத்தான் கவிஞர் இரவி “புகையில் வளையம், உனக்கான மலர் வளையம் – சிகரெட்” என்கிறார். முதற்கவிதையிலேயே அவர் மது என்னவெல்லாம் செய்யும் என்று ஒரு நீண்ட பட்டியலைத் தந்திருப்பது சிறப்பு. “ஆறிலிருந்து ஐந்திற்கு மாற்றும் மது”, ‘மனிதர்களை மாக்களாக்கும்’ என்ற இந்த எச்சரிக்கையை மதுப்போத்தல்களில் அச்சிட அரசுக்கும் பரிந்துரைக்கலாம். “தீங்கிலும் தீங்கு மது, தீண்டாதே என்றும் மது” என்று மதுவை முற்றிலுமாக மறக்கக் கேட்பது அருமை. இதைப் படிப்பதால் மட்டுமல்ல ; வாழ்க்கையில் கடைப்பிடித்தால், யார் தான் போதையில் விழுவர்? மதுவில் மட்டுமல்ல குளிர்பானத்திலும் தீமையுள்ளது என்று ஒரு கவிதையில் அறிவியல் செய்தி ஒன்றை கவிஞர் பகிர்ந்து கொண்டுள்ளார். குளிர்பானத்தில் மனிதப்பல் ஒன்றைப் போட்டு வைத்தால் பத்தே நாள்களில் கரைந்து போய்விடும் என்கிற பகீர் செய்தியைக் கேள்விப்படும் எவர்தான் குளிர்பானம் கேட்பர்? இன்பத்தைக் கொண்டாட, வெற்றியைக் கொண்டாட, மகிழ்ச்சியைக் கொண்டாட மது என்பது நாகரிகமாகப் போய்விட்ட்து. இன்பத்தைக் கொண்டாடுவதிருக்கட்டும், அதற்காக மதுவென்னும் துன்பம் எதற்கென்கிற இரவி நியாயமாகத் தான் எழுதியிருக்கிறார். “இன்பத்தைக் கொண்டாட துன்பம் எதற்கடா மது” என்பது சரியான சாட்டையடி. “இமயமாக உயர வேண்டியவன் படுபாதாளத்தில் விழும் இடம் மதுக்கடை” என்றும் மதுவின் கொடுமையை கடுமையாக விமர்சித்திருக்கிறார். குடியை நிறுத்த சிகிச்சை மேற்கொள்வது இருக்கட்டும். இச்சிறிய நூலில் மதுவிலிருந்து நம்மைக் காப்பாற்றும் தடுப்பூசி இருக்கிறது. இந்நூல் இரவி அவர்களை சமூக மருத்துவராக்கி உள்ளது. பாராட்டுகள்

கருத்துகள்