தீண்டாதே தீயவை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : திருமதி இர. ஜெயப்பிரியங்கா, M.A.,M.Ed.,

தீண்டாதே தீயவை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : திருமதி இர. ஜெயப்பிரியங்கா, M.A.,M.Ed., வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளுதெரு, தி.நகர், சென்னை – 17. தொலைபேசி : 044 2434 2810. பக்கம் : 60, விலை : ரூ.50. ****** நூலாசிரியரின் 25ஆவது நூல் இது. மது, புகையிலை, சூதாட்டம் ஆகிய மூன்றின் சாடல் நூலின் சாரம். இந்நூலுக்கு கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் மற்றும் கலைமாமனி முனைவர் கு. ஞானசம்பந்தன் ஆகிய இருவரும் தம் அமுத தமிழில் கரும்பு பிழிந்த சாறான தம் அணிந்துரை அளித்து நூலுக்கு மேலும் அழகூட்டுகின்றனர். நூலாசிரியர் அவர்கள் தமிழ்நாடு சுற்றுலா துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். மதுரையின் சிறந்த ஆளுமைகளுள் ஒருவர். தம் படைப்பாற்றல் மூலம் இணையவழி உலகம் முழுவதும் வாசகர்களை பெற்றவர். இவரின் 25-ஆவது நூல் இது. “மது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு; குடிப்பழக்கம் முழுவதும் கெடுக்கும்” – என்பது ஆன்றோர் வாக்கு. இந்நூல் முழுவதும் குடிப்பழக்கம், புகையிலை, சூதாட்டத்தின் தீமை பற்றி கூறுகின்றது. மதுவின் தீமை இதனை வள்ளுவரும், “கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல்.” (குறள் : 925) அதாவது ஒருவன் மதுவை விலை கொடுத்து வாங்கி மயக்கத்தில் கிடப்பது. அறிவற்ற சிறுவரும், அறிவு திரிந்த பித்தரும் போன்ற முறையற்ற செயலாகும் என்கிறார். மதுவைப் பற்றி நூலும் “குடும்பத்தைப் பிரிக்கும் மது குழந்தைகள் வெறுக்கும் மது!” “முன்னேற்றத்தின் தடை மது! முயற்சியை முறிக்கும் மது!” இணைய உலகில் மோசடி கும்பல் சூதாட்டத்திற்கு மனிதர்களை தம்வசம் இழுக்க பார்க்கிறது. இதனை நூல் சாடும் விதமாக, “இணையவழி சூதாட்டம் விளையாடி இன்று பல குடும்பங்கள் அழிந்துவிட்டது.” “கோடி கோடியாக கொள்ளையடிக்கின்ற நிறுவனங்கள் கோமாளித்தனமாக சூதாடுவதை உடன் நிறுத்திடுக!” என்கிறது. இன்றைய இளைய தலைமுறையினருக்கு அறிவுரை புகட்ட வந்த இனிய நூல் தீண்டாதே தீயவை!

கருத்துகள்