படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
தினம் ஒரு புத்தகம்
படிப்பது சுகமே
.இறையன்பு
ஆசிரியத் தோழமையால் நான் படிப்பதற்காக வழங்கப்பட்ட புத்தகங்களில் ஒன்று
எப்படி படிப்பது, எப்படி தேர்வுக்கு தயார் செய்து கொள்ளுவது, எப்படி தேர்வு எழுதுவது என்பதை முறைப்படி எளிமையாக விளக்கமாக சுவையாக தந்துள்ளது இந்நூல்.
நூலிலிருந்து
சொன்னதைத் திருப்பிச் சொல்கின்ற கல்வியும்
மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் வீட்டுப்பாடமும்
அட்சரம் பிறழாமல் அப்படியே எழுதுகிற தேர்வும், நீண்ட காலம் தாக்குபிடிக்க முடியாமல் ஆட்டம் காண்கின்றன.
சுயசிந்தனையும், விசாலமான தேடுதலையும் தூண்டுகின்ற கல்வி முறைதான் சமூகத்திற்கும் வாழ்விற்கும் வளம் சேர்க்கும்.
தேர்வு என்கின்ற அசுரக் காற்றில் பள்ளி, பெற்றோர், ஆசிரியர் என்று அனைத்து அம்சங்களும் ஆட்டம் காண்கின்றன.
குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்படும் போதே மிரட்டலுடன் அனுப்பப்படுகின்றன. கல்வி பாரமாக அவர்கள் மீது விழுகிறது. அவர்கள் சுமக்க முடியாமல் திண்டாடுகிறார்கள்.
வாசிப்பு என்பது உள்ளுக்குள் நடக்கும் இனிய பரிமாற்றமாக இருக்கவேண்டும்.
படிப்பும், கற்றுக் கொள்வதும் சுவாரசியமான விஷயங்கள். அவை வாழ்நாள் முழுவதும் நீடிக்கின்றன என்கின்ற உணர்வை மாணவனுக்கு ஏற்பட வைப்பதுதான் சிறந்த கல்வி நிறுவனம்.
பெற்றோர்களுக்கு
உங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிடுவதை இப்போதிலிருந்து நிறுத்தி விடுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு தேர்வு என்றால் நீங்கள் படபடப்பதை நிறுத்துங்கள். முடிந்தால் உங்கள் குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். அது போதும். அதுவே போதும்.
பள்ளிக்கூடம் என்பது பரவசம் தருகின்ற இடமாக மாற வேண்டும்.
பாடம் என்பது சுய தேடலாக அமைய வேண்டும்.
கற்பது என்பது மூன்று வகைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதாக அமையவேண்டும்.
மனநிலையில் மாற்றம்
அறிவு நிலையில் உயர்வு
திறன் மேம்பாடு
படிப்பது மகிழ்ச்சியானது
ஆத்மாவுக்கு உணவு
உயிரை நீட்டிக்கும் உன்னதம்
விழிப்புணர்வும் வெற்றியும் ஒரே சாதனத்தின் இரண்டு பரிமாணங்கள்
வாழ்வில் குறுக்கு வழிகள் இல்லை. குறுக்கு வழிகள் எல்லாம் நேர்வழி காட்டிலும் நீளமானவை.
ஒழுக்கமும், சமூக அக்கறையும் இயைந்த கல்வியே உண்மையான கல்வி.
மனிதாபிமானம், தேடல், பொறுப்புணர்வு ஆகியவற்றை வளர்த்துக் கொள்கிற பண்பு தான் கல்விக்கான உண்மையான இலக்கணம்.
வெற்றியிலும் தள்ளாடாத, உயர்விலும் கர்வப்படாத, மனப்பான்மையை நோக்கிய உயரிய பயணமாக வாழ்க்கை அமைய வழிகாட்டும் நூல் இது.
தோழமையுடன்
சீனி.சந்திரசேகரன்
கருத்துகள்
கருத்துரையிடுக