தீண்டாதே தீயவை !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
வாழ்த்துரை : ப.திருமலை, மூத்த பத்திரிகையாளர் !
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளுதெரு, தி.நகர்,
சென்னை – 17.
தொலைபேசி : 044 2434 2810. பக்கம் : 60, விலை : ரூ.50.
******.
பாடமாக வைக்க வேண்டிய நூல்...
‘தீயவை தீண்டாதே’ என்பது, கவிஞர் இரா.இரவி அவர்களின் 25ஆவது கவிதைத் தொகுப்பு நூல். இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு நானும் சென்றிருந்தேன். கவிஞர் இரவி அவர்களின் கவிதை நூல்களை வாசிப்பதில் எனக்கு எப்போதுமே அலாதி இன்பம். காரணம், அவை எளிமையாகவும், சமூக அக்கறையுடனும் இருக்கும்.
கவிதை ஒரு படிப்பினையைக் கொடுக்க வேண்டும். கவிதையைப் படிக்கும் போதே மனதில் அது தாக்கத்தினை ஏற்படுத்திட வேண்டும். மேலும் கவிதை படிக்கும்போதே அந்தச் சூழலுக்கு, வாசிப்போரை இழுத்துச் செல்ல வேண்டும். கவிதை என்பது எழுதுவதில் இல்லை, ஈர்ப்பதில் இருக்கிறது.
ஒரு கவிதை எப்படி இருக்கவேண்டும் என அறிய விரும்பினால் கவிஞர் இரவியின் கவிதை நூல்களை வாசித்துத் தெரிந்து கொள்ளலாம். எளிய சொற்களால் வாக்கியங்கள் வரையப்பட்டிருக்க்கும். அனைவருக்கும் புரியும்வண்ணம் எடுத்துக்காட்டுகள் இருக்கும். சொல்லப்படும் சூழலும், வார்த்தைகளும் நமக்குப் பரிச்சயமானவையாக இருக்கும். எனவே, அந்தக் கவிதை நம்மோடு ஒட்டிக்கொள்ளும். அல்லது நாம் அந்தக் கவிதையோடு உலாவருவதும் உரையாடுவதும் எளிதாக்கும்.
இந்தக் கவிதை நூல் குறித்து, வெளியீட்டு நிகழ்ச்சியில் இருவர் விளக்கமாகப் பேசினார்கள். அதுதவிரக் கவிதை நூலினை வாங்கிப் பார்த்தபோது எனது இனிய நண்பர் கலைமாமணி பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் மற்றும் பிரபல எழுத்தாளர் பண்பாளர் கலைமாமணி ஏர்வாடியார் ஆகியோரின் அணிந்துரைகளும் இடம் பெற்றிருந்தன. அர்த்தத்தினை அழகாகச் சொல்லியிருந்தார்கள். அவர்களுக்கு மேல் இந்த எளியேன் என்ன சொல்லிவிடப் போகிறேன்? எனவே கவிதைகளுக்குள் நான் பயணிக்கவில்லை. கவிஞர் இரா. இரவி அவர்கள் எழுதியிருக்கும் கவிதைத் தலைப்புகளின் பொருண்மை முக்கியத்துவத்தைப் பற்றி எழுத முயல்கிறேன்.
முக்கியமாக மது, புகையிலை, சூதாட்டம், செயற்கை குளிர்பானங்கள் என நான்கு சமூக அவலங்களை இந்த நூலில் கவிதை வாயிலாகப் பேசியிருக்கிறார். இந்த நான்கு விஷயங்களும் இன்றைக்கு பேசப்பட வேண்டியவை. கவிஞர் என்பவர் காதலையும், கற்பனையையும் சார்ந்திராமல் சமூகத்தையும் தன் பேனாவில் பேசும் போது அது இன்னும் அர்த்தமுள்ளதாகிறது என்பதனை உணர முடிகிறது. கவிஞர் இரவி அதனைச் செவ்வனே செய்திருக்கிறார்.
மது
மது குடித்தவுடன், சிறிது நேரத்தில் உற்சாகம் பீறிடுகிறது. தற்காலிக மகிழ்ச்சி எட்டிப்பார்க்கிறது. ஆனால் நாளடைவில் எல்லா நோய்களையும் பரிசாக அளித்துச் சிறிது சிறிதாக நம்மை அழிக்கிறது. உடல் நலத்தைக் கெடுப்பதோடு உள்ளத் தூய்மையையும் போக்கிவிடுகிறது. மகிழ்ச்சிக்காகக் குடிக்க ஆரம்பித்தவர்கள் பிறது மதுவிற்கு அடிமையாகி விடுவதோடு குடும்பத்தையும் துயரத்தில் ஆழ்த்தி விடுகின்றார்கள் என்கிறார் கவிஞர் இரவி அவர்கள்.
மது குடிப்பதினால் கல்லீரல் பாதிக்கப்பட்டுக் கல்லீரல் இறுக்க நோய் (Cirrhosis) ஏற்படுகிறது. பின்னர்க் கல்லீரல் புற்றுநோய் ஏற்படு-வதற்கும் காரணமாகிறது. மது வயிற்றுக்குள் செல்லும்போது குடல் பாதிக்கப்பட்டு இரைப்பை சுழற்சி (Gastritis) ஏற்பட்டுக் குடலில் புண் ஏற்படுகிறது. வாய், தொண்டை, உணவுக் குழாய்களில் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கிறது. தோளிலும் காலிலும் தசை நார் இழப்பு ஏற்படுகிறது. கோர்ஸா காஃப்ஸ் சின்ட்ரோம் (Korsakoff’s Syndrome) என்ற மூளை பாதிப்பு நோய் ஏற்பட வழிவகுக்கிறது.
உயிர்ச்சத்து ‘பி’ குறைவால் வெர்னிக் சின்ட்ரோம் என்ற நோய் ஏற்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மது அருந்துபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை குறைவதால் தொற்று நோய்கள் வந்தால் எளிதில் விலகாது. குடிப்பவர்களில் 38 பேரில் ஒருவருக்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்படுகிறது. 180 பேரில் ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார். மதுவுக்கு அடிமை என்பது உடல் ரீதியான பிரச்சனை மட்டுமல்ல, மன ரீதியான, சமூக ரீதியான பிரச்சனையாகும்.
உலகப்புகழ் பெற்ற மருத்துவ ஆய்விதழான “லான்செட்” இதழானது, “மது சிறிது குடித்தாலும் அதாவது ஒரு நாளில் ஒருமுறை மட்டும் குடித்தாலும் அதன் அபாயம் சில நாட்கள் நீடிக்கும்” என்கிறது. உலகம் முழுவதும் மூன்றில் ஒருவர் மது குடிப்பதாக ஆய்வறிக்கை சொல்கிறது. அதாவது, உலக ஜனத்தொகையில் சுமார் 240 கோடி மக்கள் “குடி” மகன்களாக மது நோயில் மாட்டியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியர்களின் மது குடிக்கும் அளவு இரு மடங்கு அதிகரித்துள்ளது. மதுவால் ஆண்டுக்கு 2.60 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் என்று உலகச் சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலகளவில் நாள் ஒன்றுக்கு மதுவால் மட்டும் 6 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். இந்தியாவில் சாலை விபத்துக்களில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் இறக்கிறார்கள். இவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மதுவால் பாதிக்கப்பட்டு இந்த விபத்துக்களைச் சந்திக்கிறார்கள்.
மதுவால் ஏற்படும் புற்றுநோயால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் இந்தியாவில் உயிரிழக்கிறார்கள். மது அதிகம் குடிப்பதால், ஏற்படக்கூடிய பாதிப்புகளில் முக்கியமானது கல்லீரல் பாதிப்பாகும். இந்தக் கல்லீரல் பாதிப்பால் மட்டும் ஆண்டுதோறும் இந்தியாவில் 1.4 லட்சம் பேர் இறக்கின்றனர்.
இதைத் தவிரத் தினக்கூலிகளாய் வேலை செய்து, கிடைக்கும் பணத்தை டாஸ்மாக்கில் கொடுத்துவிட்டுச் செல்லும் பாமரர்களால் வீடுகளில் பிரச்சனைகள் வெடிக்கின்றன. பாலியல் துன்புறுத்தல்கள், கொலை, கொள்ளைகள் உள்ளிட்ட குற்றங்களுக்கும் மதுவே அடிப்படைக் காரணமாக இருக்கிறது. இந்த விஷயங்களையெல்லாம் நறுக்கென ஒரு சில வரிகளில் சொல்லி விளங்க வைத்து விடுகிறார் கவிஞர் இரா. இரவி.
புகையிலை
சிகரெட் புகைப்பதை பார்த்திருக்கிறோம். இதுபோகப் புகையிலையை வாயில் மெல்லுதல் அதிகரித்து வருகிறது. அதுவும் கூலித்தொழிலாளர்கள் மத்தியில் இதனை அதிகமாகக் காண முடிகிறது. புகையிலையில் நிக்கோடின் உள்ளது. இந்த நிக்கோடின் அதிக நச்சுத் தன்மை உடையது மற்றும் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாக்கும் தன்மை உடையது. இந்தியாவில் புகையிலை உபயோகப்படுத்துவதால் ஏற்படும் நோய்களால் ஆண்டுக்கு ஒன்பது லட்சம் பேர் இறக்கிறார்கள். புகை பிடிப்பதால் ஏற்படும் புற்றுநோயால் இறப்பவர்களில் 30 வயது முதல் 69 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம்.
புகை பிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோய், புகை பிடிப்பவர்களை விட புகைப்பவர்களின் அருகில் இருந்து அந்தப் புகையைச் சுவாசிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் 10 மடங்கு அதிகமாக வர வாய்ப்புள்ளது. நுரையீரல் மட்டும் இல்லாமல் வாய், தொண்டை, கணையம், கழுத்து, சிறுநீரகம், சிறுநீர்ப்பை போன்றவைகளில் ஏற்படும் புற்றுநோய்க்கும் புகைப்பிடித்தலே பிரதான காரணமாகிறது. மென்று உபயோகப்படுத்தும் புகையிலையினால் தொண்டை, கன்னம், பல் ஈறுகள் போன்றவற்றில் புற்றுநோய் ஏற்படுகிறது. புகை பிடிப்பவர்களுக்கு அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுகிறது. மற்றும் சளி, இருமல், அல்சர், கை, கால் பக்கவாதம் எட்டிப் பார்க்கத் தவறுவதில்லை.
புகை பிடிப்பதை நிறுத்தினால் உடனடியாகப் பலன்கள் தெரியும். புகை பிடிப்பதை நிறுத்திய அடுத்த 20 நிமிடங்களில் இரத்தக் கொதிப்பு அளவு குறையும். புகை பிடிப்பதை நிறுத்திய அடுத்த 8 மணி நேரத்தில் இரத்தத்தில் கார்பன் மோனாக்சைடு சரியான அளவில் இருக்கும். இரண்டு முதல் 3 மாதங்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் நுரையீரலில் வேலை 30 சதவிகிதம் அதிகரிக்கும். 5 முதல் 9 மாதங்களில் இருமல், சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவைகள் குறையும். ஒரு வருடத்தில் ஹார்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்புகள் 50 சதவிகிதம் குறையும். புகையை நிறுத்திய 10 வருடங்களில் நுரையீரல் புற்றுநோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை, 50 சதவிகிதம் குறைந்துள்ளது. அப்படி இருக்கையில் இந்தப் புகை தேவையா? கேட்கிறார் கவிஞர் இரா. இரவி அவர்கள்.
சூதாட்டம்
சில ஆண்டுகளுக்கு முன்னர், சூதாட்டத்தைச் சட்டபூர்வம் ஆக்கலாம் என மத்திய அரசுக்குத் தேசிய சட்ட ஆணையம் பரிந்துரை செய்தது. சமூக ஆர்வலர்கள் பதறிப்போனார்கள். சட்ட அனுமதி இல்லாமல் நடத்தப்பட்டு வரும் சூதாட்டங்களுள் கிரிக்கெட் சூதாட்டம் முதன்மையானது. கோடிகோடியாகப் பணம் புரளும் இந்தச் சூதாட்டத்தால் அரசுக்கு ஏராளமான வரி வருவாய் இழப்பாகிறது.
ஏழை மக்களைச் சுருட்டி வாரியது என்றால் லாட்டரிச் சீட்டு தான். லாட்டரிச் சீட்டு என்பது சூதாட்டத்தின் மென்மையான வடிவம் எனலாம். ‘விழுந்தால் வீட்டுக்கு ; விழாவிட்டால் நாட்டுக்கு’ என்னும் முழக்கத்தோடு 1968ஆம் ஆண்டு தமிழக அரசால் லாட்டரிச் சீட்டு விற்பனை தொடங்கப்-பட்டது. ஒரு சீட்டு விலை அப்போது ஒரு ரூபாய் ஆக இருந்தது. பல பேர் லாட்டரிச் சீட்டுகள் வாங்குவதிலேயே தங்கள் வருமானத்தைத் தொலைத்துவிடும் அளவுக்கு லாட்டரி மோகம் தலைவிரித்து ஆடத் தொடங்கியது. பல்வேறு மாநில அரசுகளும் லாட்டரிச் சீட்டு விற்பனையைத் தொடங்கின.
இந்தியாவிலேயே மிக அதிகமாக லாட்டரிச்சீட்டு விற்பனையாகும் மாநிலமாகத் தமிழ்நாடு ‘வரலாறு’ படைத்தது. பிற மாநில லாட்டரிகள் பெரும்பான்மையும் தமிழ்நாட்டிலேயே விற்றுத்தீர்ந்த நிலையிலும் அந்த மாநிலங்கள் தமிழ்நாட்டு அரசுக்கு உரிய வரியைச் செலுத்த மறுத்தன. லாட்டரி தொடர்பாகத் தமிழக அரசு விதித்திருந்த சட்டதிட்டங்களையும் புறக்கணித்தன.
லாட்டரி விற்பனையால் வசதி படைத்தவர்கள் பாதிக்கப்படவில்லை. ஆனால் நடுத்தர வர்க்கத்தினரும் அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் நிலையில் வாழ்ந்துவரும் அடித்தள மக்களும் வெடுவாகப் பாதிக்கப்-பட்டனர். கையில் கிடைக்கும் சொற்ப வருமானம் முழுமையும் லாட்டரிச் சீட்டு வாங்குவதற்கே செலவிட்டுப் பரிசு கிடைக்காதா என்று ஏங்கும் மனநிலை அதிகமானது. மக்களின் ஆசையைத் தூண்டும் வகையில் உடனடி லாட்டரி, பம்பர் லாட்டரி, ஒரு நம்பர் லாட்டரி எனப் பல்வேறு நிறுவனங்கள் புதிய லாட்டரி முறைகள் அறிமுகப்படுத்தி விற்பனையைப் பெருக்கிக் கொள்ள ஆரம்பித்தன.
லாட்டரிச் சீட்டுகளை மொத்தமாகக் கொள்முதல் செய்து விற்கும் சில நிறுவனங்கள் போலி லாட்டரிச் சீட்டுகளை அச்சடித்து அவற்றின் விற்பனையால் அரசையும் மக்களையும் ஒரே நேரத்தில் ஏமாற்ற ஆரம்பித்தன.
இதனால் ஆடிப்போன அரசு, அவசரச் சட்டத்தின் மூலம் லாட்டரியைத் தமிழ்நாட்டில் ஒழித்துக்கட்டியது. அன்றைய சூழலில் லாட்டரி விற்பனை, ஆண்டுதோறும் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டித் தந்துகொண்டு இருந்தது.
காசு வைத்து சீட்டு ஆடுவது குற்றம். ஆனால் காசு வைத்து ‘ரம்மி’ ஆட வாருங்கள் என இணையதளத்தில் அழைப்பு விடுக்கிறார்கள். ‘ஆன்லைன் சூதாட்டம்’ என்னும் மோசடியான சூதாட்டம் இணையதளத்தில் நடந்து வருகிறது. இவை விளம்பரம் பெற்று நாட்டைப் பாழாக்குவதற்குள் அரசு தலையிட்டு இவற்றை உடனே களைந்தெறிய வேண்டும்.
குளிர்பானம்
மது, புகையிலை, சூதாட்டம் எனச் சமூக அவலங்களைச் சாடிய
கவிஞர் இரா. இரவி அவர்கள் குளிர்பானத்தையும் குறி வைத்திருப்பது அர்த்தத்தோடு தான்.
குளிர்பானங்களை உட்கொள்வதால் எலும்புகள் பலவீனமடையும். அதிகக் குளிர்பானத்தைக் குடிப்பது உங்கள் இரத்தத்தில் கால்சியத்தின் அளவைக் குறைக்கிறது மற்றும் பாஸ்பேட்டின் அளவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக உங்களுக்குப் போதுமான கால்சியம் கிடைக்காது. இது எலும்புகளைப் பலவீனப்படுத்துகிறது.
அமெரிக்காவிலுள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரில் குளிர்பானங்களால் ஏற்படும் ஆபத்து குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இனிப்பு கலந்த குளிர்பானங்களை அருந்துவதால் ஆண்டுதோறும் 1.8 லட்சம் பேர் இறப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டது. சர்க்கரைப் பொருள்கள் கலந்த குளிர்பானங்களை அருந்துவதால் எடை அதிகரிக்கிறது. சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகள் உருவாகின்றன. 2010ஆம் ஆண்டுக்கான ஆய்வானது, குளிர்பானம் அதிகம் அருந்தும் பழக்கம் உள்ளவர்களுள் 1.3 லட்சம் பேர் சர்க்கரை நோயாலும் 44 ஆயிரம் பேர் இதய நோய்களாலும் 6,000 பேர் புற்றுநோயாலும் இறந்தது தெரியவந்தது. குறைந்த அளவில் குளிர்பானம் அருந்தும் ஜப்பானியர்களுள் 10 லட்சம் பேர்களுக்கு 10 பேர் மட்டுமே மரணமடைகின்றனர் என்கிறது அந்த ஆய்வு.
அமெரிக்காவை சேர்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகம், குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆய்வு மேற்கொண்டது. ஆய்விற்கு ஆணகள் மட்டுமே உட்படுத்தப்பட்டனர். 22 ஆண்டுகளாக அமெரிக்கர்கள் 40 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது. ஆய்வு அறிக்கையில் இனிப்பு கலந்த குளிர்பானத்தைத் தினமும் குடிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 20 சதவிகிதமும் அதிகரிக்கிறது. இதற்குக் காரணம் குளிர்பானத்தில் கலக்கப்படும் சில ரசாயன கலவைகள் தான். குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பூட்டும் பொருள்களால் உடல்நலக்குறைவு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை. அதேசமயம் தொடர்ச்சியாகக் குளிர்பானம் பருகி வந்தால் மட்டுமே உடல் எடை அதிகரித்து, இதயத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்றது ஆய்வு. இதையெல்லாம் ரத்தின சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார் கவிஞர் இரா. இரவி அவர்கள்.
“தீண்டாதே தீயவை”யை வாசிக்கும் போது பச்சமிளகாயை நறுக்கெனக் கடித்த காரத்தை உணர்வீர்கள். பச்சை மிளகாயை என்றதும் லேசாக நினைக்காதீர்கள். நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துவது முதல் உடல் எடை குறைப்புக்கு உதவுவது மற்றும் மலச்சிக்கலில் இருந்து விடுதலை அளிப்பது வரை இந்தப் பச்சை மிளகாய் அவ்வளவு நன்மைகளை வழங்குகிறது. வளர்சிதை மாற்றத்தையும் வேகப்படுத்துகிறது. வளர்சிதை மாற்றம் என்பது உண்ணும் உணவை நமது உடலுக்குத் தேவையான ஆற்றலாம மாற்றும் செயல். அதுபோல, “தீண்டாதே தீயவை” நூலானது நம் வாசிப்பை மேம்படுத்தி நம் மூளைக்கான ஆற்றலைத் தருகிறது. பள்ளி, கல்லூரிகளில் பாடமாக வைக்க வேண்டிய புத்தகம் இது. வாழ்த்துக்கள் கவிஞரே...’
ப.திருமலை
மூத்த பத்திரிகையாளர்
கருத்துகள்
கருத்துரையிடுக