தீண்டாதே தீயவை நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி,! வாழ்த்துரை : மு.அழகுராஜ், முதுகலை ஆசிரியர் (பணி நிறைவு)

தீண்டாதே தீயவை நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி,! வாழ்த்துரை : மு.அழகுராஜ், முதுகலை ஆசிரியர் (பணி நிறைவு) வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளுதெரு, தி.நகர், சென்னை – 17. தொலைபேசி : 044 2434 2810. பக்கம் : 60, விலை : ரூ.50. ****** கவிஞர் இரா. இரவி அவர்களின் படைப்பான கவிதை நூல் ‘தீண்டாதே என்றும் மது’ என்று தொடங்கி, ‘சிகரெட்’ (வெண்சுருட்டு) எனும் பத்து தலைப்புகளில் கவி பாடியுள்ளார். சமுதாயக்கேடுகளான மது, புகையிலை, சூதாட்டம், சிகரெட் போன்றவற்றை தன் கவியால் எளிய நடையில் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இக்கவிதை நூலைப் படைத்துள்ளது சிறப்பாகும். ‘தீண்டாதே என்றும் மது’ என்ற முதல் தலைப்பில், பாதையைத் தவறாக்கும் மது! போதையால் கண் மூட வைக்கும் மது! குடலை அரிக்கும் மது! கூனிக் குறுக வைக்கும் மது! ‘அறிஞர்கள் குடிப்பதில்லை’ என்ற தலைப்பில், இலவசமாகக் கிடைத்தாலும் என்றும் குடிக்காதே தன்வசம் இழந்து பின் அல்லல்படாதே மதுவால் மடையனாக நீ மாறி விடுவாய் மது மயங்கி விலங்காக மாறுவாய் என்கிறார். ‘புகையிலைப் பழக்கம் ஒழிப்போம்’ என்ற தலைப்பில், உடலை உருக்கும் கொடிய புகையிலை நுரையீரலை புண்ணாக்கும் நச்சு புகையிலை தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் புற்றுநோயைப் பரிசாகத் தரும் புகையிலை என்கிறார். ‘சூதாட்டத்திற்கு இறையாகாதே’ எனும் தலைப்பில், இணையவழி சூதாட்டம் விளையாடி இன்று பல குடும்பங்கள் அழிந்துவிட்டன. விட்டதைப் பிடிக்க வேண்டுமென்று விளையாடுவார் விட்டதைப் பிடிக்காமல் மேலும் மேலும் இழப்பார் என்கிறார் கவிஞர். மீண்டும், ‘தொடவே தொடாதே மதுவை’ என்ற தலைப்பில், மதுவினால் மனிதன் மதிமயங்கி பணத்தை இழந்து மானத்தை இழந்து உயிரை விடுவது குறித்தும் ஆராய்கிறார். தொடவே தொடாதே கொடிய மதுவை தொட்டால் உன்னை விடவே விடாது நரம்பு தளர்ச்சி நோய்கள் யாவும் வரும் நல்லநடை தளர்ந்து தள்ளாட வைத்து விடும் – என்கிறார் கவிஞர். ‘குடல் வெந்து சாகாதே’ என்ற ஆறாவது தலைப்பில் மதுவினால் வரும் தீங்கினை எடுத்துரைக்கிறார். ஒரே ஒரு முறை குடித்துப்பார் என்பார் நண்பன் ஒருபோதும் சம்மதிக்காதே தீண்டாதே தீயவை என்கிறார் கவிஞர் இரவி. ‘வேண்டாம் கொடிய குளிர்பானம்’ என்ற ஏழாவது தலைப்பில், பாட்டிலில் தண்ணீர் வைத்திருந்தால் பத்து நாட்களுக்குள் புழுக்கள் வரும் குளிர்பானம் குடிப்பதை உடன் நிறுத்துங்கள் குதூகலம் தரும் இளநீர், மோர், பத நீர் பருகுங்கள். என்றுரைக்கிறார் நயமாக கவிஞர் இரா. இரவி அவர்கள். தீண்டாதே தீயவை என்ற எட்டாவது தலைப்பில், கவிஞர் இரா. இரவி அவர்கள் சாட்டையைச் சுழற்றுகிறார். “குடியால் குடும்பங்கள் அழியுது மூடுங்கள் மதுக்கடைகளை இன்பத்தைக் கொண்டாட துன்பம் எதற்கடா!” ‘மதுக்கடை’ என்ற ஒன்பதாவது தலைப்பில், காந்தியடிகளுக்கு பிடிக்காத இடம் குடிமகன்களுக்கு பிடித்த இடம் மதுக்கடை விதவைகளின் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்யுமிடம் மதுக்கடை. ‘சிகரெட்’ என்னும் பத்தாவது தலைப்பில், ‘புகையிலை வளையம் உனக்கான மலர் வளையம் சிகரெட்’ பெண்ணும் என்றும் விரும்பவில்லை சிகரெட் எந்தப் என்று கவிஞர் நிறைவு செய்கின்றார். இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் கருத்துரை சிறப்பாக உள்ளது. சான்றாக திருக்குறளைப் போல எந்த அறநூலும் மதுவின் கொடுமைகளை இதனைக் கடிந்து காறி உமிழ்ந்ததில்லை என்கிறார். கலைமாமணி முனைவர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் ‘விடியலுக்கு ஒரு விளக்கம்’ என்று தலைப்பிட்டு மது, சூதாட்டம், புகையிலை ஆகியவற்றின் தீமைகளை எடுத்துரைக்கிறார். இந்நூல் ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல். குறிப்பாக பெண்கள் படித்து உணர்ந்து மதுவினால் வரும் தீமைகளை முற்றிலும் ஒழிக்க இயலும். பள்ளிப்பாடத் திட்டத்தில் இக்கவிதை நூல் இடம் பெறுதல் மாணவச் சமுதாயம் திருந்துவதற்கு வழிவகுக்கும். நெறிபடுத்தும். கவிஞர் இரா. இரவி அவர்கள் இன்னும் பல நூல்கள் படைக்க வேண்டும்.

கருத்துகள்