தீண்டாதே தீயவை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் :கவிபாரதி மு.வாசுகி மேலூர் !

தீண்டாதே தீயவை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் :கவிபாரதி மு.வாசுகி மேலூர் ! வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளுதெரு, தி.நகர், சென்னை – 17. தொலைபேசி : 044 2434 2810. பக்கம் : 60, விலை : ரூ.50. ***** ஹைக்கூ திலகம் கவிஞர் இரா.இரவி அவர்களின் இருபத்திஐந்தாம் நூலான ‘தீண்டாதே தீயவை’ என்ற நூலைப் பார்த்த்தும் மகிழ்ந்தேன். அட்டைப்படமே மிக அழகாகவும் நேர்த்தியாகவும் வானதி பதிப்பகத்தார் அச்சிட்டிருப்பது நூலின் விற்பனைக்கு தூண்டுகோலாய் அமையும் என்பதில் ஐயமில்லை. பன்முகத் திறமையாளர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஐயா அவர்களும், ‘கவிதை உறவு’ இதழ் ஆசிரியர் ஏர்வாடி இராதாகிருஷ்ணன் ஐயா அவர்களும், நூலின் உள்பக்கத்தை அணிந்துரையிலும், பின்பக்க அட்டையை வண்ணப்புகைப்படங்களாலும் கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு அலங்கரித்துக் கொடுத்திருக்கிறார்கள் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை! ஒவ்வொரு மனிதருக்கும் இருபத்திஐந்து வயது, இருபத்திஐந்தாவது திருமண நாள், இருபத்திஐந்து வருட பணிநிறைவு நாள், இருபத்திஐந்து அதாவது கால் நூற்றாண்டு என்பது மிக முக முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் கவிஞர் இரா.இரவி அவர்களின் இந்த 25-வது நூல் சமூக அக்கரை கொண்ட நூலாக மலர்ந்திருப்பது மிகவும் சிறப்பு. விதவைகளின் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்யுமிடம் மதுக்கடை! என்ற கவிதை, நான்கே சொற்களில் நறுக்கென்று மதுவின் தீமையை எடுத்துரைக்கின்றது. இலவசம் என்று குடித்தால் தன்வசம் ஆக்கிவிடும் மது! என்ற கவிதையில் ஓசைநயத்தோடு உண்மைநயத்தையும் விளக்கி விட்டார் கவிஞர், அடுத்து ‘வெண்சுருட்டு’ பற்றி வெள்ளையன் கற்பித்த வெள்ளை உயிர்க்கொல்லி சிகரெட்! இதில் வெள்ளை உயிர்க்கொலி என்ற சொல்லைக் கையாண்டிருப்பது சிறப்பு. இந்நூல் பக்கங்கள் குறைவாக இருப்பதால் பத்து நிமிட இடைவெளியில் கூட, படித்து விடும் சிறப்புடையது. தொடரட்டும் உங்களின் இலக்கியப்பணி வளரட்டும் நல் இதயங்கள்!

கருத்துகள்