வாய்தா ! திரைப்பட விமர்சனம் ! - கவிஞர் இரா. இரவி ! நடிப்பு : பேராசிரியர் மு. இராமசாமி,புகழ் மகிந்திரன் ,நாசர் மற்றும் பலர் இயக்குனர் : மகிவர்மன் !

வாய்தா ! திரைப்பட விமர்சனம் ! - கவிஞர் இரா. இரவி ! நடிப்பு : பேராசிரியர் மு. இராமசாமி,புகழ் மகிந்திரன் ,நாசர் மற்றும் பலர் இயக்குனர் : மகிவர்மன் ! ******. மதுரை கோபுரம் திரையரங்கில் முதல் காட்சியை இப்படத்தின் கதாநாயகன் பேராசிரியர் மு. இராமசாமி அவர்களுடன் இனிய நண்பர் முனைவர் ஞா. சந்திரனும் இணைந்து பார்த்தோம். படம் பார்க்கிறோம் என்பதை மறந்து உண்மையிலேயே நிகழும் நிகழ்வை பார்ப்பது போன்ற உணர்வு வந்தது. பேராசிரியர் மு. இராமசாமி அவர்கள் நாடக ஆசிரியர், கூத்துக்கலை ஆசிரியர் என்பதால் பேராசிரியர் என்பதை மறந்து பாமர ஏழை சலவைத் தொழிலாளியாக படத்தில் வாழ்ந்துள்ளார். மிக இயல்பான நடிப்பு. மிகை நடிப்பு இல்லை. இந்த படத்திற்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த நாயகருக்கான தேசிய விருதை பேராசிரியர் மு. இராமசாமி அவர்களுக்கு வழங்க வேண்டும். படம் பார்க்கும் அனைவருக்கும் கண்ணில் கண்ணீர் வரும்வண்ணம் நெகிழ்ச்சியான நல்ல நடிப்பு. பாராட்டுகள். படம் முடிந்ததும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வந்தோம். படத்தின் இயக்குனருக்கு பாராட்டுகள். வெட்டுக்குத்து, குத்துப்பாட்டு, பிரமாண்ட வெளிநாடு படப்பிடிப்பு என மசாலாத்தனம் துளியும் இன்றி மிகத்தரமான படத்தை இயக்கி உள்ளார். சில காட்சிகள் மிகவும் துணிவு மிக்க காட்சிகள், சில இடங்களில் வசனம் மௌனம் செய்யப்பட்டாலும் என்ன வசனம் என்பது பார்ப்பவருக்கு நன்கு புரிகின்றது. எளிய மக்களின் துயர நிலயை துணிச்சலாக படத்தில் எடுத்து இயம்பி உள்ளார்.நீதியரசர்களும் விலை போவதை சுட்டிக்காட்டி உள்ளார். வாய்தா என்ற சொல் அனைவரும் அறிந்த ஒன்று. நீதிமன்றம் சென்றவர்கள் வெறுக்கும் சொல். வழக்கை வருடக்கணக்கில் இழுத்தடிக்கப் பயன்படும் சொல். இன்றைக்கு நீதிமன்றம் என்பது பணக்காரர்களுக்கு, செல்வாக்கு மிக்கவர்களுக்காக உள்ளது. ஏழைகளுக்கு நீதியே கிடைப்பதில்லை. அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டும் அத்தி பூத்த மாதிரி ஏழைகளுக்கு நீதி கிடைக்கும். படிப்பறிவில்லாத பாமர சலவைத் தொழிலாளி கங்கு தயாரித்துக் கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் மோதி அவரது தோள்பட்டை எலும்பை முறித்து, கையில் தீ கங்குகள் பட்டு தீக்காயம் ஏற்படுகின்றது. மோதிய இருவரில் ஒருவர் வாகனத்தை அங்கேயே போட்டு விட்டு ஓடி விடுகிறார். மோதிய மற்றவர் அந்த வாகனத்தை எடுத்து சலவைத் தொழிலாளி வீட்டில் உள்ளே வைத்து பூட்டி சாவி எடுத்துக் கொள்கிறார். வாகனத்தை விட்டு ஓடியவரின் தந்தை பஞ்சாயத்து பேச வருகிறார். மோதிய இருவரும் பாதி பாதி நட்டஈடு தருவோம் என்கின்றனர். அரசியல்வாதியோ நான் தரமாட்டேன் என்று சண்டையிட்டு விரட்டி விடுகிறார். சலவைத் தொழிலாளியிடம் காவல் நிலையம் செல்லக்கூடாது என்று சொல்கிறார். வாகனத்திற்காக அவர் காவல் நிலையம் செல்கிறார். காவல்துறை வந்து வண்டியை எடுக்க வருகின்றனர். பூட்டை உடைக்க முயல சலவைத் தொழிலாளியின் மகன் செல்லை குறி வைக்க வீடியோ எடுக்கிறாயா? என்று செல்லை காவலர் பிடுங்க முயல்கிறார். தர மறுக்கிறான். காரணம் காதலியுடன் எடுத்த படம் அலைபேசியில் உள்ளது. காதலி உயர்சாதி. பிரச்சனை பெரிதாக காவலர், அந்த மகனை அழைத்து சென்று விடுகின்றனர். வீடியோ எடுத்தது குற்றம் என்கின்றனர். எடுக்கவில்லை என்ற போதும் நம்ப மறுக்கினறனர். பையனை விட்டால் போதும் எனக் கெஞ்சுகிறார் சலவைத் தொழிலாளி. இழப்பீடு எனக்கு எதுவும் வேண்டாம், எலும்பு முறிவு வைத்தியச் செலவை மட்டும் மருத்துவமனைக்கு கட்டி விடுங்கள் என்கிறார். அதைக்கூட செய்யாமல் இருவரும் பணத்திமிரு, ஈகோ காரணமாக நீதிமன்றம் செல்கின்றனர். வாய்தா, வாய்தா என இழுத்தடிக்கப்பட்டு இறுதியில் இருவரும் ஏற்றியது தவறு என்று தண்டத்தொகை ரூ.1500 கட்டுங்கள் என்று தீர்ப்பு வருகின்றது. வழக்கறிஞர் ஒருவர் காப்பீட்டு நிறுவனங்கள் மீது வழக்குத் தொடுக்கலாம். கடைசியில் பணம் கொடுங்கள் என்று ஆசை காட்டி 15 இலட்சம் வாங்கித் தருவேன் என வழக்குத் தொடுக்க வைக்கிறார். இரண்டு காப்பீடு நிறுவனங்களோ, ஒரு வாகனத்திற்கு காப்பீடு இல்லை.. இன்னொரு வாகனத்திற்கு ஓட்டியவருக்கு உரிமம் இல்லை. எனவே இழப்பீடு தரமுடியாது என்கின்றனர். அதோடு நிற்காமல் புறம்போக்கு இடத்தில் துணி தேய்க்கும் கடை வைத்தது குற்றம். அபராதம் ரூபாய் பத்தாயிரம் தரவேண்டுமேன்ற தீர்ப்பு வருகின்றது. கடைசியில் அழுதபடி நடந்து வருகிறார் சலவைத் தொழிலாளி. மற்றொரு இழப்பீடு வழக்கில் வந்த பத்து இலட்சத்தை வைத்துக்கொண்டு, வெறும் பத்தாயிரம் தரும் கொடுமையும் நடக்கிறது. பாட்டியும் பேரனும் நீதிமன்ற வாயிலில் மண்ணை வாரி தூற்றும் காட்சி. நெகிழ்ச்சி. ஆணவக் கொலையை பாலியல் குற்றம் என்று நிரபராதிக்கு குற்றம் சுமத்திய வழக்கில், நாசர் வழக்கறிஞராக வந்து சிறப்பான வாதத்தை வைத்து உண்மையை விளக்குகிறார். பொய்வழக்கு புனையும் காவல்துறை பொய் தகவல் தரும் ஊடகத்துறையின் முகத்திரையைக் கிழிக்கிறார். சலவைத்தொழிலாளியின் மகனை காதலித்த உயர்சாதிப் பெண்சொல்கிறாள், நண்பனை விழாமல் தடுக்க, உள்ளே வந்ததற்கு கழுவிவிட்டு சுத்தம் செய்கின்றனர். மணமுடித்தால் கொன்றுவிடுவார்கள்.சேர்ந்து வாழ்கிறோம் என்பதை விட நீ உயிரோடு இருக்கிறாய் என்ற இன்பம் போதுமென்று சொல்லிவிட்டு பிரிந்து சென்று சொந்தத்தில் திருமணம் செய்து கொள்கிறார்.தறி நெய்து வந்த சலவைத் தொழிலாளியின் மகனை அங்கும் தீண்டாமை காட்டி வேலையை விட்டு விலக்கி விடுகின்றனர். அப்பா சொல்லும் போது துணி தேய்க்க தனக்கு விருப்பமில்லை என்றவர், கடைசியில் அப்பாவிற்கு வலது கையில் அடிபட்டு துணி தேய்க்க முடியாமல் போகவும்,தறி நெய்த வேலை போகவும், அவரே துணி தேய்ப்பது, உருக்கமான காட்சி. நன்றாக நடித்து உள்ளார். பணத்திற்கும் செல்வாக்கிற்கும் நீதி வழங்கும் அநீதி ஒழிய வேண்டுமென இயக்குனர் உரக்கக் குரல் தந்துள்ளார். மக்களும் மொழிமாற்றம் செய்யப்பட்ட மசாலாப் படங்களுக்கு தரும் பெரும் வரவேற்பை நிறுத்திவிட்டு இதுபோன்ற தரமான படங்களைப் பார்த்து ஆதரவு தாருங்கள்.

கருத்துகள்