காற்றின் கைதட்டல்கள்! நூல் ஆசிரியர் : முனைவர் ஞா. சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !

காற்றின் கைதட்டல்கள்! நூல் ஆசிரியர் : முனைவர் ஞா. சந்திரன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி வெளியீடு : பாவை பதிப்பகம், #16 (142), ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600 014. பக்கங்கள் : 136, விலை : ரூ.120. ****** நூலாசிரியர் முனைவர் ஞா. சந்திரன் அவர்கள் இணையத்தில், முகநூலில், புலனத்தில் வாசித்த வைர வரிகளை தொகுத்து நூலாக்கி உள்ளார். மலர்களில் தேனீ தேன் சேகரிப்பதைப் போல இணையத்தில் தேடி வாழ்வியல் கருத்துக்களை வழங்கி உள்ளார். எழுதியவர்களின் பெயரோடு இடம்பெற்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். எழுதியவர்களையும் பெருமைப்படுத்தியதாக அமைந்திருக்கும். அருள்பணி டேனிஸ் பொன்னையா அவர்கள் மற்றும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் Dr. N. ஜெகதீசன் அவர்கள் - ஆகியோரின் அணிந்துரைகள் நனிநன்று. தன்னம்பிக்கைப் பேச்சாளர், எழுத்தாளர் Dr. சியாமளா ரமேஸ்பாபு அவர்களின் வாழ்த்துரை சிறப்பு. கடின உழைப்பால், சேகரிப்பால் விளைந்த நூல் இது. படிக்கும் வாசகர்கள் மனதில் நன்கு பதியும் விதமான கல்வெட்டு வரிகள். வாழ்வில் கடைபிடிக்க உதவும் பொன்மொழிகள் புதுக்கவிதை வடிவில் இருப்பதால் சிறப்பு. ஆழம் குறைவோ அதிகமோ அடிக்க வேண்டியது நீச்சல் மட்டுமே சோதனைகள் ஒன்றோ பலவோ செய்ய வேண்டியது முயற்சி மட்டுமே! முதல்முதலில் எழுதியுள்ள இந்த வைரவரிகள் முயற்சியின் முக்கியத்துவத்தை விளக்குவதாக உள்ளது. தோல்விக்குத் துவளாமல் தொடர்ந்து முயல உணர்த்துகின்றது. நூலில் உள்ள அனைத்து வாசகங்களும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் உள்ளன. பதச்சோறாக சில மட்டும் தங்கள் பார்வைக்கு. எல்லாம் தெரிஞ்ச மாதிரியே பேசுகிறவனிடம் எதுவும் தெரியாத மாதிரியே நடந்துக்கிறவன் தான் புத்திசாலி. உண்மை தான். சில மனிதர்கள் தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று தலைக்கர்வமாகப் பேசுவார்கள். அவர்களிடம் வாதம் செய்வதை விட அமைதியாக இருப்பதே சிறப்பு. பயன்படுத்திக் கொள்ள தெரியாத நிமிடங்களைத் தான் நேரமே சரியில்லை என நாம் சலித்துக் கொள்கிறோம். நேரம் சரியில்லை என்பது மூடநம்பிக்கை தான். நமது ஐயா அறிவியல் புயல் அப்துல்கலாம் அவர்கள் சொல்வர்கள் : ”கெட்ட நேரம் என்று எதுவுமில்லை. எல்லா நேரமும் நல்ல நேரம் தான்” என்று. அது என் நினைவிற்கு வந்தது. விட்டுக் கொடுங்கள் அல்லது விட்டு விடுங்கள் நிம்மதி நிலைக்கும்! உண்மை தான். மனதார விட்டுக்கொடுப்பது சிறப்பு. நடந்த கவலையை மறந்து விட்டுவிடுவதும் சிறப்பு. வாழ்வியல் அறநெறி உணர்த்தும் அற்புத வரிகள் நூல் முழுவதும் நிறைந்து உள்ளன. பாராட்டுகள். பொறுமை ஒருபோதும் தோற்பதில்லை பொறாமை ஒருபோதும் ஜெயிப்பதில்லை! பொறுமை மிகவும் முக்கியம். ‘பதறாத காரியம் சிதறாது’ என்பார்கள். அதுபோல பொறுமை மிக அவசியம். அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைப்படுவது கெட்ட குணமாகும். அடுத்தவரைப் பார்த்து பெருமை கொள்ளலாம். பொறாமை கொள்வது நனிநன்று என்பதை உணர்த்திடும் வரிகள் நன்று. அழகாய் அமைவதெல்லாம் வாழ்க்கை அல்ல அமைவதை அழகாய் மாற்றிக் கொள்வதே வாழ்க்கை. இதுபோன்ற வரிகளை முகநூலில், புலனத்தில் படித்து இருக்கிறேன். அவற்றையெல்லாம் தொகுத்து நூலாக்கி, சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் வழங்கி இருப்பது சிறப்பு. விரும்பியது கிடைக்கவில்லை எனில் கிடைத்ததை விரும்பு – என்பதைப் போன்ற வரிகள் அருமை. எந்த சிக்கலுமே உன்னைச் சிதைக்க வந்தது அல்ல, செதுக்க வந்ததே! சிக்கலைக் கண்டு மனம் வருந்தி சோர்ந்து கவலையில் நொந்து விடாமல் வாழ்வில் எதிர்நீச்சல் போடுவதே சிறப்பு. ‘வந்த சிக்கல் சிதைக்க அல்ல ; செதுக்க’ என்று சொல் விளையாட்டின் மூலம் தன்னம்பிக்கை விதைக்கும் அற்புத வரிகள். உன் வலியை நீ உணர்ந்தால் உயிரோடு இருக்கிறாய் என்று அர்த்தம் பிறர் வலியை நீ உணர்ந்தால் உயிர்ப்போடு இருக்கிறாய் என்று அர்த்தம். உயிரோடு இருப்பது மட்டுமல்ல, பிறர் வலியை உணரும் உயிர்ப்போடு இருக்க வேண்டும் என்று மனிதாபிமானம் உணர்த்தியது சிறப்பு. இலட்சியத்தை நோக்கி செல்பவர்கள் பலரும், பிறரின் அலட்சியப் பேச்சுகளைக் கண்டுகொள்வது இல்லை. முயற்சிகள் செய்யும்போதே சிலர் கேலி பேசுவார்கள். கேலிக்குப் பயந்து சிலர் முயற்சியை நிறுத்தி விடுவதுண்டு. எதையும் பொருட்படுத்தாமல் செவிசாய்க்காமல் தொடர்ந்து முயற்சி செய்பவர்களே சாதிக்க முடியும். அடுத்தவரை வெல்பவர் பலசாலி தன்னை வெல்பவர் புத்திசாலி! தன் மனத்தை வென்று தீய வழியைத் தவிர்த்து நல்வழியில் நடப்பவர்களே வெற்றி மகுடம் சூட்ட முடியும். சுயகட்டுப்பாடு மிகவும் அவசியம். திட்டமிடல் திட்டமிட்டபடி நடத்தல் வெற்றிக்கு வழிவகுக்கும். நன்றி மறப்பது நன்றன்று. நன்றி கெட்ட மனிதர்களை மறப்பது நன்று. புகழ்பெற்ற திருக்குறளின் வைர வரிகளில் தொடங்கி, நன்றி மறந்த மனிதர்களை மறந்து விடுங்கள் என்று அறிவுறுத்தியது சிறப்பு. நன்றி மறந்தவர்களை நினைத்துக் கொண்டே இருந்தால் கவலைகள் கூடும், உடல்நலம் கெடும், மறப்பதே நன்று. கண்டிப்பு என்பது எறும்பு கடிக்கிற மாதிரி இருக்க வேண்டும், தேள் கொட்டுகிற மாதிரி இருக்கக் கூடாது. உண்மை தான். பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளை கண்டிக்க வேண்டும். ஆனால் அவை மென்மையாக இருக்க வேண்டும். வன்மையாக இருக்கக் கூடாது என்று உணர்த்தியது சிறப்பு. வாழ்க்கைக்கு உதவும் பல பயனுள்ள பொன்மொழிகள், அறநெறி புகட்டிடும் அற்புத வரிகள். வாழ்வில் கவலையின்றி மகிழ்வாக வாழ்ந்திட உதவிடும் உன்னத வரிகள். புதுக்கவிதை வடிவில் இருப்பதால் படிக்கும் வாசகர்கள் மனதில் நன்கு பதிந்து விடுகின்றன. சிந்திக்க வைக்கின்றன. செயல்பட வைக்கின்றன. மொத்தத்தில் மிகவும் பயனுள்ள கருத்துக்களை சேகர்தித்து தொகுத்து பகுத்து வழங்கிய நூலாசிரியர் முனைவர் ஞா. சந்திரன் அவர்களுக்கு பாராட்டுகள். *

கருத்துகள்