ரஃப் நோட் ரகசியங்கள்
நூல் ஆசிரியர் : முனைவர் ஞா. சந்திரன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ்,
#16 (142), ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை,
சென்னை-600 014. பக்கங்கள் : 118, விலை : ரூ.110.
******
நூலாசிரியர் இனிய நண்பர் முனைவர் ஞா. சந்திரன் அவர்கள் புகழ்பெற்ற மதுரை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயின்று, பட்டங்கள் பெற்று, அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டு, தொடர்ந்து நூல்கள் எழுதி வருபவர். பாராட்டுக்குரியவர். ஆசிரியர் பணியோடு சுருங்கி விடாமல் அதையும் தாண்டி தமிழ்ப்பணி புரிந்துவரும் நல்லாசிரியர்.
மாணவ சமுதாயத்திற்கு பயன்தரும் இந்த நூலை முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்களுக்கு காணிக்கையாக்கி உள்ளார். அவர்களும் வாழ்த்துரை வழங்கி உள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் வாழ்த்துரை வழங்கி உள்ளார். எழுத்தாளர் தொழிலதிபர் ப. சுபாஷ் சந்திரபோஸ் அவர்களும் மகிழ்வுரை வழங்கி உள்ளார். மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் “நான் பிறந்து கொண்டேயிருப்பேன்” கவிதையும் இடம்பெற்றுள்ளது.
நூலில் 12 கட்டுரைகள் உள்ளன. சிறிய கட்டுரைகளாக இருப்பதால் வாசிக்க எளிதாகவும், இனிமையாகவும் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் அறிஞர்களின் பொன்மொழிகள் இடம்பெற்றுள்ளன. எடுப்பு, தொடுப்பு, முடிப்பு முத்தாய்ப்பு. மாணவர்கள் எதிர்காலத்தை திட்டமிட சாதனைகள் புரிந்திட உதவிடும் நூல்.
ரஃப் நோட் விளக்கத்தை முதல் கட்டுரையிலேயே விளக்கி உள்ளார். இந்த நூலின் பெயர் தான் ரஃப் நோட் ரகசியங்கள். மாணவர்கள் மனதில் ஏற்றிக்கொண்டு செயல்பட வேண்டிய பல அரிய நல்ல கருத்துக்கள் நூல் முழுவதும் நிரம்பி உள்ளன. ரஃப் நோட் பற்றி சிலர் தந்த விளக்கங்களும் நூலில் உள்ளன.
‘அழியாச் செல்வம்’ கட்டுரையில் கல்வியின் பயனை விரிவாக எடுத்து இயம்பி உள்ளார். ‘கற்க கசடற’ திருக்குறளை மேற்கோள் காட்டி விவேக சிந்தாமணி பாடலான, ‘வெள்ளத்தால் அழியாது’ மேற்கோள் காட்டி உள்ளார். ‘காலத்தால் அழியாத செல்வம் கல்வி’ என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.
ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் ஆகியோரின் கடமை-செயல்பாடு - நோக்கம் விரிவாக எழுதி வியப்பில் ஆழ்த்தி உள்ளார். ஐன்ஸ்டீன் ஆசிரியரிடம் ‘ஒளியின் பற்றாக்குறை தான் இருள்’ எடுத்துச் சொல்லிய அறிவார்ந்த பதில் நூலில் உள்ளது.
“நம்மை விட வளர்ந்து விட்டானே என்று பொறாமைப்படாத ஒரே ஜீவன் ஆசிரியர் மட்டுமே”. உண்மை தான். எந்த ஒரு ஆசிரியரும் தன்னிடம் படித்த மாணவன் உயரத்திற்குச் சென்றால் பெருமை தான் அடைவார்கள். ஒருபோதும் பொறாமை கொள்ள மாட்டார்கள். ஆசிரியர் பணி ஒப்பற்ற பணி, அறப்பணி. அதற்கே தன்னை அர்ப்பணித்து வாழும் உயர்ந்த பணி. அதனால் தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்றனர். தெய்வத்திற்கு முன்பாக குருவை வைத்தனர். குருவின் சிறப்பையும் மாணவர்களின் ஆற்றலையும் உணர்த்திடும் நூல் இது.
முதுமுனைவர் வெ. இறையன்பு, சிந்தனைக் கவிஞர் கவிதாசன், வித்தகக் கவிஞர் பா. விஜய், ஆகியோரின் பொன்மொழிகள் கல்வெட்டு வரிகள் நூலில் இடம் பெற்றுள்ளன.
‘இரண்டு கையும் காலும் இல்லாத சாதனை மனிதன் நிக்’ பற்றிய வரலாறு நூலில் உள்ளது. இதனைப் படிக்கும்போது மாணவர்கள் மனதில் ‘நிக்’ இவ்வளவு சாதனை செய்து உலகப்புகழ் பெற்றுள்ளபோது நம்மால் முடியாதா? நாமும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் தரும் விதமாக நூல் உள்ளது. தந்தை - மகள் பேசுவது போல அறிவார்ந்த கருத்துகள் உள்ளன.
‘கண்டிப்பே கற்கண்டு’ கட்டுரையில் வகுப்பறையில் மாணவனாக இருந்தபோது நடந்த சொந்த அனுபவத்தை எடுத்துக்காட்டாகக் கூறி ஆசிரியரின் கண்டிப்புக்கு கோபம் கொள்ளக் கூடாது, மாணவனின் நன்மைக்காகத் தான் ஆசிரியர் கோபம் கொள்கிறார் என்பதை உணர்த்தி உள்ளார்.
‘வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்’ என்ற தாராபாரதியின் வைர வரிகளோடு கட்டுரை முடிப்பு சிறப்பு.
‘நட்பு வனம்’ கட்டுரையில் ‘நண்பர்கள் உயரத்தில் இருக்கும்போது மட்டுமல்ல, துயரத்தில் இருக்கும்போதும் துணைவருபவர்கள்’. முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்களின் வைர வரிகள் சிறப்பு. நண்பனுக்கு ஒரு துன்பம் என்றால் வந்து உதவுவதே உயர்ந்த நட்பு என்று நட்புக்கான இலக்கணம்
நனி நன்று.
தேனீக்கள் ஓய்வின்றி பூக்களில் அமர்ந்து தேனீ சேகரிப்பது போல நூலாசிரியர் முனைவர் ஞா. சந்திரன் பல்வேறு அறிஞர்கள் கூறிய நல்ல பல கருத்துக்களை மேற்கோளாகக் காட்டி வடித்த கட்டுரைகள் நனி நன்று.
‘தேர்வில் ஜெயிக்க சில வழிகாட்டல்கள்’ கட்டுரையில் பயனுள்ள பல தகவல்களை வழங்கி உள்ளார். குறிப்பாக பெற்றோர்கள் குழந்தைகளிடம் தேர்வுக் காலங்களில் கடிந்து கொள்ள வேண்டாம். அவ்வாறு கடிந்து கொள்வது குழந்தைகளின் மனதையும் கல்வியையும் பாதிக்கும் என்பதை உளவியல் ரீதியாக ஆய்வு செய்து அறிவுரையாக வழங்கி உள்ளார்.
தேர்வு எழுதும்போது மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் பட்டியலிட்டு உள்ளார்.
உடல்நலம் குறித்த பல தகவல்களும், ‘உடலும் உள்ளமும் நலம்பெற சில வழிகாட்டல்கள்’ என்ற கட்டுரையில் வழங்கி உள்ளார். பயனுள்ள அறிவியல் பூர்வமான உணவு மற்றும் வாழ்வியல் கருத்துகளை வாரி வாரி வழங்கி உள்ளார். ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்றும் வழிகாட்டி உள்ளார். மாமனிதர் அப்துல் கலாம் வழங்கிய பொன்மொழிகள் பயனுள்ளவை நூலில் இடம்பெற்றுள்ளன.
‘இவை விதைகளுக்குச் செய்ய விசய தானங்கள்’ மட்டுமல்ல, வேர்களுக்கும் வழங்கியுள்ள விசய தானமே. மொத்தத்தில் பெற்றோர்-ஆசிரியர்-மாணவர் மூவரும் படிக்க வேண்டிய சிறந்த நூல்.
கருத்துகள்
கருத்துரையிடுக