தடையுடைத்து முன்னேறு! நூல் ஆசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

தடையுடைத்து முன்னேறு! நூல் ஆசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி வெளியீடு : மணிமேகலை பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராயர் நகர், சென்னை – 600 017. பக்கங்கள் : 144, விலை : ரூ.150. ****** நூல் ஆசிரியர் கவிஞர் பாக்யபாரதி இந்நூலை பெற்றோருக்கும் தாய்த்தமிழுக்கும் காணிக்கை ஆக்கி உள்ளார். நூல் ஆசிரியர் பெண்ணாகரம் என்னும் பொன் நகரத்தில் பணியாற்றும் கணித ஆசிரியர். வியப்பாக உள்ளது. கணித ஆசிரியரின் இலக்கியப் பற்று. சாகித்ய அகாடமி விருதாளர், எழுத்தாளர், பொன்னீலன், கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், முனைவர் பொன். குமார், பாவலர் கோ. மலர்வண்ணன் ஆகியோரின் அணிந்துரைகள் வரவேற்புத்தோரணங்- களாக அமைந்துள்ளன. பாராட்டுகள். 70 தலைப்புகளும், மரபுக் கவிதைகளும், புதுக்கவிதைகளும் வடித்து கவிவிருந்து வைத்துள்ளார். முதல் கவிதையில் தமிழன்னைக்கு மகுடம் சூட்டி உள்ளார். தரணியைத் தமிழ் ஆளட்டும்! இப்படி எண்ணிலடங்கா உயர்ந்த இலக்கியங்களை இறப்பில்லாப் புகழுடைய சிறந்த இலக்கணங்களைத் தனக்குள் கொண்டுள்ள உன்னதத் தமிழ் தலைமுறைகள் கடந்தும் தரணியை ஆளட்டும்! தமிழ், தரணியை ஆள வேண்டும் என்ற கனவு நனவாக வாழ்த்துக்கள். குறைந்தபட்சம் தமிழகக் கோவில்களின் கருவறையில் தமிழ் மட்டுமே ஒலிக்க வேண்டும். தமிழக உயர்நீதிமன்றங்களில் தமிழில் வாதாட அனுமதி வேண்டும். தமிழ்நாட்டிலேயே தமிழுக்குத் தடை இருப்பது முறையா? தடைகள் தகர்க்கப்பட வேண்டும். மாண்புமிகு தாயவள்! பெற்றெடுத்த பிள்ளையின் நற்செயலைப் பார்த்து மற்றவர்கள் புகழ்வதைக் கேட்கின்ற பொழுது பிறவியின் பயனைப் பெற்று விட்டதாய்ப் பெருமை அடைந்திடும் மாண்புமிகு தாயவள்! திருவள்ளுவரின் திருக்குறளை நினைவூட்டும் விதமாக கவிதை வடித்து இருந்தாலும், தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய், மட்டற்ற மகிழ்ச்சி கொள்வது இயல்பு. தாய் அடையும் மகிழ்ச்சியைப் போல வேறு எந்த உறவும் அடைவதில்லை என்பது உண்மையிலும் உண்மை. நான் உணர்ந்த கவிதை இது. என் தாயும் அடைந்த மகிழ்ச்சியைக் கண்டு உணர்ந்தவன் நான். எழுத்தறிவித்த இறைவன்! ஓய்வின்றி உழைப்பவனே ஓம்கார நாயகனே எழுத்தறிவித்த இறைவனே என்றுமுன்னைப் போற்றுவனே ... மாதா, பிதா, குரு, தெய்வம் என்றனர். தெய்த்திற்கும் முன்பாக குருவை வைத்தனர். நூலாசிரியர் பாக்யபாரதி ஆசிரியர்களை தெய்வமாக வடித்த கவிதை நன்று. இந்த விமர்சனம் எழுதிய நாளன்று மாணவனைக் கண்டித்த உடற்கல்வி ஆசிரியரை மாணவன் கத்தியால் குத்தி உயிருக்குப் போராடுவதாக செய்தி படித்து அதிர்ந்து போனேன். இன்றைய சில மாணவர்களின் மனநிலை படுமோசமாகவே உள்ளது. இந்நிலை மாற வேண்டும். ஆசிரியர்களை மதித்து நடக்கும் நல்ல பழக்கத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். டில்லிக்கு இராசாவானாலும் பள்ளிக்குப் பிள்ளை என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். படிக்காத மேதை! மணம் புரிந்தால் குணம் மாறிடுமென்று மடிகின்ற வரை தனியாக வாழ்ந்தவர் மக்கள் தொண்டே மகேசன் தொண்டென்று மண்ணில் கடைசி வரை வாழ்ந்து காட்டியவர். கல்வி வள்ளல் காமராசர் பற்றிய கவிதை நன்று. ஒவ்வொரு கவிதையிலும் நீண்ட நெடிய வரிகள் இருந்த போதும் பதச்சோறாக 4 வரிகளை மட்டும் மேற்கோள் காட்டி உள்ளேன். காமராசர், திருமணம் புரிந்தால் குடும்பத்தை கவனிக்க வேண்டிய நிலை வரும் என்று கருதியே திருமணம் முடிக்காமலே மக்களுக்குத் தொண்டு செய்திட்ட மாமனிதர் பற்றிய கவிதை சிறப்பு. நூலின் தலைப்பிலானகவிதை இதோ! தடையுடைத்து முன்னேறு! நெஞ்சம் நிமிர்த்தி நேர்மை கொண்டு அச்சம் தவிர்த்து அறிவை வளர்த்து அறத்தைக் காத்து அன்பை விதைத்துத் தடைகளைத் தகர்த்தெறிந்து வாழ்வில் முன்னேறு! நூலாசிரியர் கவிஞர் பாக்யபாரதி தமிழில் தேர்ந்தெடுத்த சொற்களைக் கொண்டு உத்வேகம் பிறக்கும் வண்ணம் தன்னம்பிக்கை விதை விதைக்கும் விதமாக வடித்த கவிதை நன்று. கவிதை படிக்கும் போது வீரம் பிறக்கும், தன்னம்பிக்கை பிறக்கும். பெண்ணியம் காப்போம்! அடுப்பூதும் பெண்ணிற்குப் படிப்பு எதற்கென்று அடைத்து வைத்திருந்த அந்தக் கணத்திலேயே அதைப் பார்த்துத் துடித்துப்போன மீசை பாரதி ஆவேசமாய படைத்தார் பெண்ணியப் பாடல்களையே! ஆணாதிக்க சமுதாயம் என்பது முற்றிலும் உண்மை. பெண்களுக்கு சம உரிமை வழங்கிட மனம் வருவதில்லை. முற்போக்குவாதிகளும் இல்லத்தில் மனைவியை பிற்போக்காகவே நடத்தி வருகின்றனர். பெண்ணியம் பாடிய கவிதை நனிநன்று. இயற்கையின் எச்சரிக்கை! மனிதா! உன் குற்றங்கள் தொடருமேயானால் இயற்கையின் சீற்றங்கள் நிச்சயம் தொடரும்! ஆம் இயற்கையை மனிதன் சிதைக்கச் சிதைக்க ஒருநாள் திரும்பவும் இயற்கை சீற்றம் கொண்டு மனிதனை சிதைத்து விடும், சின்னாபின்னம் ஆக்கிவிடும்! சுனாமி புயல், எரிமலை, நிலநடுக்கம், வெள்ளம் எல்லாமே இயற்கையின் பதில் சீற்றங்கள் தான் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார். மாற்றுத் திறனாளிகளை மதிப்போம்! அகத்தில் அழுக்கைச் சுமக்காது வாழ்ந்திடுவர் அறச்செயல்களை மட்டுமே செய்திடுவர் அறிவுப்போட்டியில் முதலிடம் பெற்றிடுவர் அகிலத்தின் படைப்பில் தனியிடம் பிடித்திடுவர்! மாற்றுத் திறனாளிகளின்மதிப்போம்! அகத்தில் அழுக்கைச் சுமக்காது வாழ்ந்திடுவர் அறச்செயல்களை மட்டுமே செய்திடுவர் அறிவுப்போட்டியில் முதலிடம் பெற்றிடுவர் அகிலத்தின் படைப்பில் தனியிடம் பிடித்திடுவர்! மாற்றுத் திறனாளிகளின் மேன்மையை எடுத்து இயம்பி அவர்கள் நல்லவர்கள், வல்லவர்கள். வாய்ப்பு வழங்கினால் சாதிப்பார்கள் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார். மொத்தத்தில் நூலாசிரியர் மனத்தடையை உடைத்து கவிதைகள் வடித்து முன்னேறி உள்ளார். பாராட்டுகள்.

கருத்துகள்