படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. *பிரபல பாடலாசிரியர் மருதகாசி அவர்களின் நினைவு தினம் 29.11.1989*
படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.
*பிரபல பாடலாசிரியர் மருதகாசி அவர்களின் நினைவு தினம் 29.11.1989*
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி’ (கைதி கண்ணாயிரம்) மதியை அல்ல, மனங்களை மயக்கிய கவிஞர் அவர். ‘கண்களால் காதல் காவியம்’ (சாரங்கதாரா) தீட்டிய அவரது பட்டியலைக் காண, ‘ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே’ (பாவை விளக்கு) என்றால், ‘நீயே கதி ஈஸ்வரி’ (அன்னையின் ஆணை)! யார் இந்த அற்புதப் படைப்பாளி?
வானொலிப் பெட்டி அருகிலேயே காதுகள் வைத்துக் கிடந்த காலம் ஒன்று இருக்கவே செய்தது. அல்லது, பாக்கெட் டிரான்சிஸ்டரைக் காதலித்தபடி வெட்ட வெளியில், மொட்டை மாடியில் வான் நட்சத்திரங்களோடு பேசிக் களித்த காலம். இரவையே மயக்கும் இசையை, அந்த இசை உடுத்திக்கொள்ளும் பாடல் வரிகளை மானசீகமாக யார் கொண்டாடினாலும், பாடலாசிரியர்கள் வரிசையில் யாரும் மறக்க முடியாத பெயராக மருதகாசி இருக்கும்.
ஜி ராமநாதன், கே வி மகாதேவன், தட்சிணாமூர்த்தி, விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்ற முன்னணி இசை அமைப்பாளர்கள் இசையில் மொத்தம் நாலாயிரத்துக்கும் மேலான பாடல்கள்! ‘உலவும் தென்றல் காற்றினிலே’ (மந்திரி குமாரி) அவரது பாடல்கள் ‘வசந்த முல்லை போலே வந்து’ (சாரங்கதாரா) ஆடிக்கொண்டிருக்கும்.
அவரது ‘சீருலாவும் இன்ப நாதம்’ (வடிவுக்கு வளைகாப்பு) கேட்க ‘சீவி முடிச்சு சிங்காரிச்சு’க் (படிக்காத மேதை) காத்திருந்த காலம் அது. ‘மாயாவதி’ என்ற படத்துக்கு, ‘பெண் எனும் மாயப் பேயாம் ...’ என்று தொடங்கும் பாடலே மருதகாசி எழுதிய முதல் திரைப்படப் பாடல். ஒவ்வொரு பொங்கல் நாளிலும் ஒலிபரப்பாகும் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ பாடல் அவருடையதுதான்.
ஐம்பது, அறுபதுகளில் திரைப்படத்தின் காட்சியை ஊடுருவிச் சென்று பார்க்கும் விழியும், அதைப் பாட்டாக்கி வழங்கும் மொழியும் வாய்த்திருந்த அற்புதக் கவிஞர் மருதகாசி. பாபநாசம் சிவனுடைய சகோதரர் ராஜகோபாலனிடம் இலக்கிய இலக்கணம் கற்றுத் தேர்ந்தவர். ஏற்றத் தாழ்வு பாராத காதல் கொஞ்சும் ‘வண்டி உருண்டோட அச்சாணி’ (வண்ணக்கிளி) பாடல் வரிகள் இலக்கிய ருசி மிகுந்தவை.
புரிதலின் இமயம்
‘மந்திரி குமாரி’ திரைப்படத்தில், ஆசை மொழி பேசி மனைவியை மலையுச்சியில் இருந்து தள்ளிக் கொல்லும் நோக்கத்தோடு கணவன் அழைத்துச் செல்லும் காட்சிக்காக, திருச்சி லோகநாதன் - ஜிக்கி இணை குரல்களின் கிறக்கம் மிகுந்த ‘வாராய் நீ வாராய்’ பாடல். ஓர் தலைசிறந்த பாடலாசிரியருக்கு இருக்க வேண்டிய புலமைக்கும், நுட்பமான புரிதலுக்கும் ஆகச் சிறந்த சான்று. ‘முடிவிலா மோன நிலையை நீ மலை முடியில் காணுவாய் வாராய்’ என்பது அந்தப் பாடலின் உச்சம்.
பாடல் முடிவில், அவனது சாகச முடிவை அறியும் அந்தப் பெண் தான் முந்திக்கொண்டு அவனைத் தள்ளிக் கொன்றுவிடுவாள். அந்தக் காட்சிக்கு முந்தைய பாடல் வரி இது என்பதால் ‘இது பொருந்தாது’ என்று தன்னிடம் வாதிட்ட படக்குழுவைத் தமது திடமான முடிவால் புறந்தள்ளினார் இயக்குநர் அப்படத்தின் இயக்குநர் கணித்தபடியே அந்தப் பாடல் காட்சி மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது.
‘லவ குசா’ தெலுங்கிலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட போது முப்பத்தைந்துக்கும் அதிகமான பாடல்கள் அவர் எழுதியவை! புகழ்பெற்ற ‘ஜெகம் புகழும் புண்ய கதை’ எத்தனை அற்புதமான சுவைக் கலவை! சம்பூர்ண ராமாயணம் மட்டுமென்ன, ‘வீணைக் கொடி உடைய வேந்தனே’ உள்ளிட்டு எத்தனை எத்தனை முத்துக்கள்!✍🏼🌹
கருத்துகள்
கருத்துரையிடுக