எம்.ஜி.ஆர் 100.. நூல் ஆசிரியர் : முனைவர் வை. சங்கரலிங்கனார் !பேச9842111102 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

எம்.ஜி.ஆர் 100.. நூல் ஆசிரியர் : முனைவர் வை. சங்கரலிங்கனார் !பேச9842111102 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி எம்.ஜே.பப்ளிகேசன், 9, செயின்ட் ஜான் தேவாலயம் வளாகம், ராக்கின்ஸ் சாலை, திருச்சி-1. பக்கங்கள் : 108, விலை : ரூ.125.  பேச : 94434 28994 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ****** எம்.ஜி.ஆர் 100. எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களின் பெயரைக் கொண்டே அவரது வாழ்வில் நடந்த நூறு நிகழ்வுகளை படப்பெயருக்குப் பொருத்தமாக எழுதி இருப்பது சிறப்பு.  நல்ல உத்தி.  நூலாசிரியர் முனைவர் வை.சங்கரலிங்கம் அவர்கள் பட்டிமன்றம் பேசுவார்.  தொகுப்புரை வழங்குவார். சிறந்த பேச்சாளர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சிறந்த எழுத்தாளர் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக இந்நூல் வந்துள்ளது. எப்போதும் முகத்தில் புன்னகையை அணிந்திருக்கும் மனிதர். ‘உடல்தானம்’ எழுதித் தந்துள்ள கொடை உள்ளத்திற்கு சொந்தக்காரர். மேன்மையான மனிதர். எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த 100 திரைப்படங்களின் பெயர் நினைவில் இருந்ததே பெரிய சாதனை தான். அதனை தலைப்பாக்கி 100 கட்டுரைகள் வடித்தது சிறப்பு.  எம்.ஜி.ஆர் ரசிகர்களின் இல்லங்களில் இருக்க வேண்டிய நூல்.  அவரைப் பற்றி புரிந்து கொள்ள உதவிடும் நூல்.  ‘குடியிருந்த கோயில்’ என்ற தலைப்பில் தொடங்கி, ‘நினைத்ததை முடிப்பவன்’ வரை 100 கட்டுரைகள்.  சிறிய கட்டுரைகளாக இருப்பதால் படித்திட சுவையாகவும் எளிமையாகவும் உள்ளன.  ‘நினைத்ததை முடித்து’ நூலாக்கி உள்ளார். எம்.ஜி.ஆர் அவர்களின் புகழுக்கு மகுடம் சூட்டுவதாக நூல் உள்ளது. குடியிருந்த கோயில்       விதையாய் விழுந்து விருட்சமாய் எழுந்த எம்.ஜி.ஆர் பிறந்தது 1917ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி. குடும்பச் சூழல் காரணமாக எம்.ஜி.ஆரின் தந்தை அப்போது இலங்கையில் வேலை பார்த்து வந்தார். அப்போது தான் எம்.ஜி.ஆர். பிறந்தார். கவித்துவமான எழுத்துக்கள். பிறப்பு தொடங்கி அவரது வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை ஆவணப்படுத்தி உள்ளார். பாராட்டுகள்.  இந்த நூலை எழுதுவதற்காக பல நூல் படித்து இருக்க வேண்டும். முனைவர் பட்ட ஆய்வாளர் போல எம்.ஜி.ஆர் பற்றி முழு ஆய்வு நடத்தி இந்நூலை வடித்துள்ளார்.       நூலிலிருந்து பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு. ஒரு தாய் மக்கள்       எம்.ஜி.ஆர் கும்பகோணம் யானையடி தொடக்கப்பள்ளியில் படிக்கும்போதே ஒரு கதாநாயகன் மாதிரிதான் இருப்பாராம். எளிமையான உடை உடுத்தினாலும் கொள்ளை அழகுடன் இருப்பாராம். எம்.ஜி.ஆர் படிக்கும் போது கெட்டிக்காரராகவும் நன்றாகப் படிக்கும் மாணவராகவும் இருந்திருக்கிறார்.       எம்.ஜி.ஆரின் பள்ளி வாழ்க்கை தொடங்கி திரைஉலக வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என அனைத்தையும் ஒரே நூலில் சுவைபட எழுதி உள்ளார். எம்.ஜி.ஆர் பற்றி அறியாதவர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பாக உள்ள நூல். தலைவன்       தேவையில்லாமல் தனக்கு யரும் புகழ் பாடுவதையும் துதி பாடுவதையும் எம்.ஜி.ஆர் விரும்பியதில்லை. ‘தனிமனிதனை புகழ்தல் என்பது தவறு’ என்ற நிலைப்பாட்டில் இருந்தவர் எம்.ஜி.ஆர். அதற்கு ஒரு நல்ல உதாரணம் இந்த சம்பவம். இந்த பள்ளிக்குக் உங்கள் பெயரை வைக்கப் போகிறோம் என்று சொன்னவுடன், ‘கூடவே கூடாது’ என்று மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர். அதுதான் தலைவரின் பண்பு. எம்.ஜி.ஆர் அவர்களின் நற்குணத்தை வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகளை எளிமையாகவும் இனிமையாகவும் எல்லோருக்கும் புரியும்படி எழுதி உள்ளார். பாசம்!       இந்த இடத்தில் தான் எம்.ஜி.ஆர் தான், ‘எட்டாவது வள்ளல்’ என்று நிரூபித்திருக்கிறார். தனக்கு எந்த தரத்தில், என்ன விலையில், ஆடைகள் எடுத்துக் கொள்கிறாரோ, அதே தரத்தில், அதே விலையில் தன்னிடம் பணிபுரிபவர்களுக்கும் எடுத்துக் கொடுப்பார்.       எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடும் பழக்கம் உள்ளவர்.  தன்னிடம் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் தான் உடுத்துவது போல வாங்கி, வழங்கி ஆனந்தம் அடைந்த பேருள்ளத்திற்கு சொந்தக்காரர் எம்.ஜி.ஆர் என்பதை அறிந்து வியந்து போனேன்.  இதுபோன்ற நல்ல உள்ளம் எல்லோருக்கும் வருவதில்லை. வந்தால் நாடு நலம் பெறும். புதுமைப்பித்தன்       “எம்.ஜி.ஆர். நடுராத்திரியில் கூட கீரைகளையும் தயிரையும் சேர்த்துக் கொள்வார். உடம்பை நன்றாக உடற்பயிற்சி செய்து வைத்துக் கொண்டால் போதும், எப்போதும் என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம். அது உடனே செரித்து ரத்தத்தொடு கலந்துவிடும் என்று சொல்வார்.  இப்படி உணவு விசயத்தில் புதுமைப்பித்தனாக இருந்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு வித்தியாசமான மனிதர். உணவு உண்பதிலும் வித்தியாசம் கடைபிடித்துள்ள விசித்திர மனிதர். வாழ்க்கை நிகழ்வுகளை குறும்படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தரும் விதமாக நூலாசிரியர் முனைவர் புலவர். வை. சங்கரலிங்கனார் எழுதி உள்ளார். உரிமைக்குரல்       “எம்.ஜி.ஆரை வைத்து அப்பொழுது ஸ்ரீதர் இயக்கிய படம் தான் உரிமைக்குரல். 25 வாரங்கள் ஓடி பெரும் வசூலை அள்ளிக்கொடுத்தது”. ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற படத்தை தொடங்கிய ஸ்ரீதர், எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் ஒத்து வராது என்று படத்தி நிறுத்தி விட்டார். இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்தது. சில நாட்களில் ஸ்ரீதர் பணக்கஷ்டத்தில் இருந்தபோது எம்.ஜி.ஆரை சந்தித்து எனக்கு ஒரு படம் நடிக்கலாமா? என்று வேண்டிட, சரி என்று நடிக்க ஒப்புக்கொண்டு தயாரிப்பாளர்கள் சிலருக்கு பணஉதவிக்கும் மடலும் வழங்கினார்.  நூல் முழுவதும் எம்.ஜி.ஆரின் நற்குணத்தையும், திரைப்படத்தில் நல்லவனாக நடித்தது மட்டுமல்ல, நிஜ வாழ்விலும் நல்லவனாக வாழ்ந்ததை வடித்துள்ளார். பாராட்டுகள்.

கருத்துகள்