பெண்ணே பேராற்றல்! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

பெண்ணே பேராற்றல்! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! மண், மக்கள், மனிதம் வெளியீடு திருப்பதி நிலையம், 106-சி, வேளார் தெரு, ஆரப்பாளையம், மதுரை – 625 016. அலைபேசி : 98656 28989 ****** நூலாசிரியர், எழுத்தாளர் ப. திருமலை அவர்கள் பிரபல நாளிதழ், வார இதழ் அனைத்திலும் பணியாற்றிவிட்டு, நமது மண்வாசம் மாத இதழ் ஆசிரியராக இருந்து கொண்டு, பல்வேறு விழிப்புணர்வு கட்டுரைகளை வடித்து வருபவர். வழக்கறிஞர் சூ. செல்வகோமதி எம்.எல். சிறப்பான அணிந்துரை நல்கி உள்ளார். நல்லாசிரியர் மு. முருகேசன் பதிப்புரை வழங்கி உள்ளார். நூலாசிரியர் தன்னுரையின் இறுதியில் உள்ள வைர வரிகள் இதோ! “இந்த நூலை வாசித்து முடிந்தவுடன் பெண்கள் மீதான உங்கள் மதிப்பும் வியப்பும் அதிகரிக்குமேயானால் அதனையே இந்த நூலின் வெற்றியாகக் கருதுவேன். பெண்மை போற்றுவோம்” நன்றி. உண்மை தான், இந்த நூல் படித்து முடித்தவுடன் பெண்கள் பேராற்றல் மிக்கவர்கள், வலியவர்கள், மனஉறுதி மிக்கவர்கள், ஆற்றல் மிக்கவர்கள் என்பதை உலகிற்கு உணர்த்திடும் ஒப்பற்ற நூல். நூல், தகவல் களஞ்சியமாக உள்ளது. இதுவரை அறிந்திடாத, படித்திராத, கேள்விப்பட்டிராத புதிய தகவல்கள் நிறைய உள்ளன. ஆசிரியரின் தேடல், கடின உழைப்பை நன்கு உணர முடியும். நூலாசிரியர் ப. திருமலை அவர்களின் 42ஆவது நூல் இது. விரைவில் ஐம்பதைக் கடந்து நூறை அடைவதற்கு வாழ்த்துகள். இவருடைய கட்டுரைகள் எப்போதும் மேம்போக்காக இருக்காது. ஆழ்ந்த கட்டுரையாக புள்ளி விபரங்கள் சேகரித்து மிக நுட்பமாக எழுதி உள்ள சிறந்த நூல் இது. விடுதலைப் போராட்ட வேள்வியில் பெண்களின் பங்களிப்பை, அளப்பரிய தொண்டை குறைத்து மதிப்பிட முடியாது. காமா அம்மையார் தொடங்கி சானோ தேவி (முதல் பெண் சபாநாயகர்) வரை 25 வைர மங்கையரின் வீர வரலாறு, தியாகம், தொண்டு என 25 கட்டுரைகள் வடித்துள்ளார். நூல் உருவாக்கத்திற்கு துணைநின்ற தமிழ் ஆங்கில நூலகள், இணையங்கள் பட்டியல் இறுதியில் எழுதி உள்ளார். அதனைப் படித்தாலே பிரமிப்பாக உள்ளது. இவ்வளவு நூல்களைப் படித்து, ஆய்ந்து, ஆராய்ந்து, அறிந்து வடித்துள்ள நூல் இது. எழுத்துப்பணிக்காக பல்வேறு விருதுகள் பெற்று இருந்தாலும் எதையுமே தலையில் ஏற்றிக்கொள்ளாத எளியவர், இனியவர், பண்பாளர், அடக்கமானவர். காமா அம்மையாரின் விடுதலை உணர்வை ராஜாஜி, இந்திராகாந்தி ஆகியோர் பாராட்டியதைக் குறிப்பிட்டுள்ளார். காமா அவர்களை சிறப்பிக்கும் விதமாக அவரது உருவம் தாங்கிய அஞ்சல்தலை 26.01.1962 அன்று வெளியிடப்பட்டது. இப்படி நாள், மாதம், வருடம் என ஒன்றுவிடாமல் ஆதாரங்கள் திரட்டி நூலை வடித்துள்ளார், பாராட்டுகள். பீபியம்மாள் : அவர் சொன்ன வாசகத்தை படித்துப் பாருங்கள். எவ்வளவு மனஉறுதியுடன் வெள்ளையரை எதிர்த்து பெண்களும் பெருமளவில் போராடினார்கள் என்பதை உணர முடியும். “என் பிள்ளைகள் சிறையில் இருக்கும்போது ஒருவேளை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டு விடுதலையானால் அவர்களின் குரல்வளையை நெறித்துக் கொல்வேன்” என்று வீரசபதம் பூண்டவர் தாயார் பீபியம்மாள் இளையான்குடியைச் சேர்ந்தவர் என்பது இளையான்குடிக்குப் பெருமையாகும். இதனைப் படித்தபோது, பகத்சிங் சிறையிலிருந்த போது விடுதலைக்காக தந்தை கடிதம் எழுதினார் என்பதை அறிந்து தந்தையைக் கடிந்து கொண்ட நிகழ்வு நினைவிற்கு வந்தது. எவ்வளவு மன உறுதியோடு விடுதலைக்காக ஆண்களும், பெண்களும் போராடினார்கள் என்பதை நினைத்துப்பார்க்க விடுதலையின் மதிப்பு விளங்கும். இன்றைய இளையதலைமுறையினர் அனைவரும் படிக்க வேண்டிய நூல். விடுதலைக்கு முன்பு அந்தக்காலத்திலேயே பெண்கள் எவ்வளவு மன உறுதியுடன் இலட்சியத்துடன் போராடினார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். கொடிகாத்த குமரன் வரலாறு அனைவரும் அறிவோம். அதற்கு இணையான வரலாறு மாதாங்கினி ஹஸ்ரா வரலாறு உள்ளது. இதோ படித்துப் பாருங்கள். “போலீசார் அந்தப்பெண் மீது 3 முறை துப்பாக்கியால் சுட்டனர். குண்டுகள் நெற்றியிலும், இரண்டு கைகளிலும் துளைத்த போதும் மனம் தளராமல் கொடியைக் கையில் ஏந்தியபடி தன்னார்வலர்களைக் கடந்து சுதந்திரப் போராட்ட அணிவகுப்பில் முன்னேறிச் சென்று கொண்டிருந்தார்”. நினைத்துப் பாருங்கள், 3 குண்டுகள் உடலில் துளைத்து இருந்தபோது தொடர்ந்து முன்னோக்கி சென்றார் என்றால் எவ்வளவு மன உறுதி பாருங்கள். பெண்கள் பலவீனமானவர்கள் என்பது தவறு. பலமானவர்கள் என்பதை நிரூபிக்கும் வரலாறாக உள்ளது. பாராட்டுகள். பதச்சோறாக சில மட்டும் எழுதி உள்ளேன். இப்படி நூல் முழுவதும் நாம் அறிந்திராத பல வரலாறு உண்மை நிகழ்வுகள் நூலில் உள்ளன. அஞ்சலை அம்மாள் பிறந்தது 1890ஆம் ஆண்டு. 1921ஆம் ஆண்டில் தனது 37 வயதில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு, தமிழகத்தின் முதல் பெண் சுதந்திரப் போராளி எனும் பெருமையைப் பெற்றார். இவரும் இவரது கணவர் முருகப்பாவும் பெரும்பாலான போராட்டங்களில் கலந்து கொண்டார்கள்”. 1921ஆம் ஆண்டிலேயே குடும்பத்துடன் கணவனும் மனைவியும் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்ற செய்தி வியப்பாகவே இருந்தது. பத்மாசனி வரலாறு உள்ளது. இவரது புகழ் அக்காலத்தில் அறியப்பட்ட காரணத்தால் தான் ‘பத்மாசனி’ என்ற பெயரை குழந்தைகளுக்கு பலர் சூட்டி மகிழ்ந்துள்ளனர். சொர்ணத்தம்மாள் வரலாறு படிக்க கண்களில் கண்ணீர் வரும். அவ்வளவு கொடுமைகளை ஆங்கிலேயர்களால் அனுபவித்து உள்ளனர். தாயம்மாள் வரலாறு படித்தேன். தியாகி தாயம்மாள் பெயரில் மதுரை மீனாட்சி கோயில் அருகில் ஒரு தெரு இன்றும் உள்ளது. அதனையும் நூலில் குறிப்பிட்டு உள்ளார். துர்காதேவி : துர்கா பாபி என்றழைக்கப்பட்ட துர்காதேவி 1907ஆம் ஆண்டு பிறந்தார். “ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடிய பெண் புரட்சியாளர்களில் ஒருவர்.” பகத்சிங் கைது செய்யப்பட்ட போது அவர்களைக் காக்க தன் நகைகளை விற்றார். இப்படி படிக்க படிக்க பெண்கள் மீதான மதிப்பு உயர்ந்து கொண்டே சென்றது. நூலாசிரியர் ப. திருமலை அவர்களுக்கு பாராட்டுகள். --

கருத்துகள்