வெற்றிடத்தின் நிர்வாணம்! (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிதாயினி பவித்ரா நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

வெற்றிடத்தின் நிர்வாணம்! (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிதாயினி பவித்ரா நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி பாவைமதி வெளியீடு, 55, வ.உ.சி. நகர், மார்கெட் ரோடு, தண்டையார்பேட்டை, சென்னை-600 081. பக்கங்கள் : 80, விலை : ரூ.70. ****** எழுத்தாளர் கவிதாயினி பவித்ரா நந்தகுமார் அவர்கள் பிரபல தினசரி நாளிதழ்களில் விழிப்புணர்வு கட்டுரைகள் வடித்து வருபவர். இரண்டு சிறுகதை நூல்கள் எழுதிவிட்டு மூன்றாவதாக வந்துள்ள முதல் கவிதை நூல் “வெற்றிடத்தின் நிர்வாணம்”. பெயர் போலவே கவிதைகளும் வித்தியாசமாக, பழைய பண்பாட்டை பறைசாற்றும் விதமாக, படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் குழந்தைப் பருவத்து விளையாட்டை மலரும் நினைவுகளை மலர்விக்கும் விதமாக உள்ளன. பாராட்டுகள். தென்மண்டல காவல்துறை தலைவர் முனைவர் சி. முருகன் அவர்கள் சிறப்பான அணிந்துரை நல்கி சிறப்பித்துள்ளார். வரவேற்பு தோரணமாக உள்ளது. நூலாசிரியர் இந்நூலை பெற்ற தந்தைக்கு காணிக்கையாக்கி, முதல் கவிதையை அப்பா பற்றியே எழுதி உள்ளார். நினைவஞ்சலி! எங்களை வெறுமையாக்கி விட்டுச்சென்ற நாளை மண்மூடி புதைக்க நினைக்கிறோம் முடியவில்லை கண் மூடும் நேரமெல்லாம் நீக்கமற நீங்கள் நினைவு நாள் என்று தனியே ஒன்று இல்லை! பதச்சோறாக நான்கு வரிகளை மட்டும் எழுதி உள்ளேன். அப்பா கவிதை படிக்கும் போது வாசகர்களுக்கு அவரவர் அப்பாவின் நினைவு அவசியம் வந்து போகும் என்று அறுதியிட்டு கூறலாம். திண்ணை திண்ணை-னா என்ன தாத்தா? தைப்பொங்கலுக்கு ஊர் வந்த பேரன் கேட்கையில் நிச்சயம் தாத்தாக்களுக்கு தொண்டை அடைக்கும். அதன் தன்மையை விவரிக்க முனைகையில், அந்தக்காலத்தில் வரவேற்பு அறையாகவே விளங்கியது திண்ணை. சொந்தபந்தம் மட்டுமல்ல, அப்பக்கம் வருவோர் போவோர் இளைப்பாறிச் செல்வார்கள். கிராமங்களில் மட்டும் இருந்துவந்த திண்ணை இப்போது கிராமங்களிலும் காணாமல் போய்விட்ட வருத்தத்தை கவிதையில் நன்கு உணர்த்தி உள்ளார். பாராட்டுகள்! திருவிழா இரவுகள்! பெருநகர இரைச்சலில் பணம் பண்ணும் தேடலில் நினைவுகளை கட்டவிழ்த்து விட்டபடி இனிக்கிறது பழைய திருவிழா இரவுகள்! தொலைக்காட்சிக்குள் அடங்கிப் போன திருவிழாவை கடந்து போனபடி என் பிள்ளைகள்! உண்மை தான். கிராமத்து திருவிழா போன்று நகரத்தில் இல்லை. நகரத்தில் எல்லாம் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் சிறைப்பட்டு விட்டனர். இந்தக்கவிதை படித்த போது என் சிறுவயதில் என் பாட்டி பிறந்த ஊரான ஓடப்பட்டி சென்று சிவன்ராத்திரி திருவிழா ரசித்த நினைவுகள் வந்து போயின. நாம் பெற்ற இன்பம் நம் குழந்தைகள் பெற வாய்ப்பு இல்லாமலே வழக்கொழிந்து விட்டன. கலைமாற்றத்தால் இப்படி பல நினைவுகளை மலர்வித்தது. சுயங்களை இழந்தோம்! சோளம் கம்பு கேழ்வரகென சிறு தானியங்கள் உண்ட எம்மக்கள் பீசா பர்கர் பாஸ்தா வென திசைமாறி போனதொரு பெருந்துயரம்! இன்றைய இளைய தலைமுறையினர் துரித உணவிற்கு அடிமையாகி அதனை உண்டு கேடு தரும் நோய்களை வரவழைத்து அல்லல்பட்டு வருகின்றனர். விழிப்புணர்வு வர வேண்டும். நமது முந்தைய உணவே உடல்நலத்திற்கு நல்லது என்பதை உணர வேண்டும். பாட்டி சொன்ன கதைகள்! வழக்கொழிந்த மொழி போல அவசர சிகிச்சை பிரிவில் பெருமூச்சு வாங்கியபடி இருக்கிறது பாட்டி சொன்ன கதைகள்! வீட்டில் உள்ள தாத்தா பாட்டி சொன்ன நீதிக்கதைகள் அறம் போதித்தன. குழந்தைகளை நல்வழிப்படுத்தின. ஆனால் இன்று வீட்டில் தாத்தா பாட்டி இல்லாத காரணத்தால் கதை சொல்ல ஆள் இல்லை. பெற்றோர்களுக்கு கதை சொல்ல நேரமும் பொறுமையும் இருப்பதில்லை. பனைமர கட்டில்! படுக்கலாம் பாயில்லை மெத்தை ஏதும் தேவையில்லை மடிக்கலாம் பிழையில்லை வலிமையில் சோடை போனதில்லை இடவசதி மிகையில்லை தூக்க எடுக்க சிரமமில்லை! பனைமரக் கட்டிலில் படுத்து இயற்கையை ரசித்து காற்று வாங்கியவர்கள் மட்டுமே உணர்ந்த உன்னத சுகம். இன்று வழக்கொழிந்து விட்டது. இப்படி பழைய வழக்கொழிந்த நல்லவைகளை நினைத்துப் பார்த்து புதுக்கவிதைகளாக வடித்து பசுமையான நினைவுகளை மலர்வித்து உள்ளார். பாராட்டுகள். நவீனம் என்ற பெயரில் பண்பாட்டை மறந்து விட்டோம். வாடகை சைக்கிள்! ஒரு ரயில் பயணம் போல அத்தனை சுகமானது வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டுவது வியர்வை வழிய மூச்சிரைத்த நினைவுகள் பல கிளைகள் பரப்ப பின்னோக்கி ஓடுகிறது சைக்கிள்! வாடகை சைக்கிள் கவிதையின் மூலம் நமது நினைவு சைக்கிளை பின்னோக்கி ஓட வைத்து சிறுபிள்ளை பிராயத்தில் வாடகை சைக்கிள் எடுத்து நண்பர்களுடன் ஓட்டி மகிழ்ந்த பசுமை நினைவுகள் வந்துபோயின. கட்டுச்சோறு! தொலைதூர பயணத்தின் போதான பலவீனமான நிலையை களைந்து சுகானுபவம் கூட்டும் உற்சாகத்தை ஈட்டித் தந்தது குத்து கட்டியலிட்டு கிளறிய கட்டுச் சோறு! முன்பெல்லாம் சுற்றுலா செல்வதென்றால் முதல் நாள் இரவோ அல்லது அதிகாலையிலோ கட்டுச்சோற்று கட்டி விடுவார்கள். பயணத்தின் நடுவே இளைப்பாற, பசி நீங்க உதவும். இந்த நல்ல பழக்கம் இன்று பல குடும்பங்களில் கைகழுவி விட்டனர். போகும்போது வாங்கி உண்ணலாம் என்ற மனநிலைக்கு பலரும் வந்துவிட்டனர். பழையன கழிதல் புதியன புகுதல் சிலவற்றில் நன்மையன்று! பழையன தொடர்தலே சிறப்பு என உணர்த்திடும் புதுக்கவிதைகள் நன்று. பாராட்டுகள். முத்திரை பதித்துள்ள முதல் கவிதை நூல். --

கருத்துகள்