படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. சிரிப்பு எனும் மா மருந்து.

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. சிரிப்பு எனும் மா மருந்து. இயந்திர கதியில் இயங்கும் இன்றைய மனிதர்களில் பலர் சிரிப்பைத் தொலைத்து விட்டார்கள். அதனால் மனிதர்கள் என்ற சிறப்பை இழந்து நோயாளியாகி விட்டார்கள். சிரிக்காமல் மனஅழுத்தம் ஏற்பட்டவர்களுக்கு சிரிப்புச் சிகிச்சை அளித்து குணப்படுத்தும் நிலை உருவாகி இருக்கிறது. புன்னகையால் கவலையை மறக்கலாம். `சிரிக்கத் தெரிந்தவனுக்கு முதலில் போணியாகும்’ என்பது வியாபாரிகளின் வழக்குமொழி. உங்களிடம் எத்தனையோ நல்ல பண்புகள் இருந்தாலும் பார்த்து, பழகியவர்களுக்கு மட்டுமே அது தெரியும். ஆனால் புன்னகையை முகத்தில் தவழ விட்டுப் பாருங்கள், ஒவ்வொருவரையும் உங்களைத் திரும்பி பார்க்க வைக்கும். கோபமும், சிடுசிடுப்பும் மற்றவர்களை ஒதுங்கிச் செல்ல வைக்கும். சிரிப்பு மட்டுமே மற்றவர்களை ஈர்த்து புது உறவுகளை பெற்றுத் தரும். எப்போதாவது நீங்கள் கவலையாக இருந்தால் உடனே புன்னகையை முகத்திற்கு கொண்டு வாருங்கள். இது கொஞ்சம் கடினமான காரியம் தான். அந்தநேரத்தில் ஏதாவது நகைச்சுவை துணுக்குகளை படிங்கள். நகைச்சுவை அடங்கிய சி.டி. இருந்தால் போட்டுப் பாருங்கள். அந்த இறுக்கமான சூழல் நொடிப் பொழுதில் மாறிவிடும். உடனே மனதில் மகிழ்ச்சி பொங்கும். அது முகத்தில் பரவி முகமும் மலரும். சூழலும் மாறும். கவலையே மனிதனை முடக்கும் எதிரியாகும். சிரிப்பே கவலையை வீழ்த்தும் மருந்தாகும். சிரிப்புக்கு சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சிபடுத்தும் தன்மை உண்டு. பலர் இருக்கும் இடத்தில் ஒருவர் லேசாக சிரிக்கத் தொடங்கினால் அது மற்றவர்கள் மனநிலையையும் மாற்றி அந்த இடத்தையே கலகலப்பாக்கி விடும். சுபவிழா நடைபெறும் இடங்களில் நகைச்சுவைடன் பேசுபவர்களைச் சுற்றி கூட்டம் கூடி அரட்டை அடிப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்தானே. சிரிப்பிற்கு கிடைக்கும் முன்னுரிமை இதுதான். சிரிக்கும் மனிதன் மகிழ்ச்சியைச் சுமந்து கொண்டு திரிகிறான். அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கும் மகிழ்ச்சி பகிர்ந்து அளிக்கபடுகிறது. எந்திரகதியான வாழ்க்கை பலருக்கும் மனஅழுத்தத்தை உண்டாக்கிவிடுகிறது. `அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். அதனால் மனஇறுக்கமும் முகத்தில் பிரதிபலிக்கும். ஆனால் சிரிப்பது கவலையைக் குறைக்கும். அடக்கி வைக்கபட்ட கஷ்டங்களை வெளித்தள்ளும் சூழலை உருவாக்கும். இதனால் மன அழுத்தம் காணாமல் போகும். கவலைகள் வந்தால் சிரிக்க நேரம் ஒதுக்குங்கள். பிறகு சுறுசுறுப்பாகி விடுவீர்கள். நமது உடலை நோய்தாக்காத வண்ணம் பாதுகாப்பது நோய் எதிர்ப்பு சக்தி. உடல் ஓய்வாகவும், தளர்வாகவும் இருக்கும்போது நோய்த் தடுப்பு மண்டலம் திறம்பட செயல்படும். சிரிப்பதால் உடல் புத்துணர்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் சுறுசுறுப்பாக செயல்படும். எப்போதும் புன்னகைடன் இருப்பவர்களை நோய் அண்டவே அஞ்சும். புன்னகைக்கு ரத்த அழுத்தத்தை குறைக்கும் சிறப்பு உண்டு. உங்களிடம் ரத்த அழுத்தமானி இருந்தால் இதை நீங்களே பரிசோதித்துப் பார்க்கலாம். சாதாரண நேரத்திற்கும், சிரிக்கும் நேரத்திற்கும் இடையில் உள்ள ரத்த அழுத்த வேறுபாட்டை பார்த்தால் சிரிப்பு எந்த அளவில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது என்பதை அறிந்து வியந்து போவீர்கள். சிரிப்பானது ரத்தக்கொதிப்பு, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகளைக் கட்டுபடுத்துகிறது. சிரிப்பது மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. `என்டார்பின்’ என்னும் ரசாயனம் மூளையின் துருதுரு செயல்பாட்டில் பங்கு வகிக்கிறது. சிரிக்கும்போது இந்த ரசாயனம் அதிகமாக உற்பத்தியாவதால் மூளையும் துரிதமாக செயல்படுகிறது. காயங்களால் ஏற்படும் வேதனையை குறைப்பது, பல்வேறு காரணங்களால் ஏற்படும் வலியை குறைப்பதிலும் சிரிப்பு துணை புரிகிறது. நரம்புகளின் தகவல் கடத்தும் திறனையும் சிரிப்பு தூண்டுகிறது. குறிப்பாக தூக்கம் மற்றும் நினைவுத்திறனைத் தூண்டுவதில் பங்கு வகிக்கிறது. புன்னகைடன் இருப்பவர்கள் நம்பிக்கை மிக்கவராக திகழ்கிறார்கள். இது அவர்கள் முன்னேறத் துணைபுரிகிறது. நீங்கள் பலர் கூடும் இடத்தில் புன்னகையுடன் தோன்றினால் உங்களுடன் பலரும் மனமுவந்து பழக விரும்புவார்கள். நல்லவிதமாகவும் கவனிப்பார்கள். கூட்டங்களில் புன்னகை தவழ பேசிப்பாருங்கள். உங்கள் பேச்சுக்கு தனி ரசிகர் கூட்டம் உருவாகும். எப்போதும் முன்னுரிமையும், வரவேற்பும் கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் வாழ்வில் பாதி வெற்றிக்குச் சமம். சிரிப்பானது எப்போதும் நேர்மறை எண்ணங்களையே தோற்றுவிக்கும். நீங்கள் வேண்டுமானால் சோதித்து பாருங்கள். புன்னகையுடன் இருக்கும்போது எதிர்மறை சிந்தனைகள் தோன்றாது. சிரிப்பை இழந்தால் தானாகவே எதிர்மறை எண்ணம் வந்துவிடும். சிரிக்கும்போது மகிழ்ச்சியை உணர்கிறோம். சிரித்தால்தான் `வாழ்வே வசந்தமானது’ என்ற எண்ணம் தோன்றும். எனவே சிரித்து வாழுங்கள். பிறரையும் சிரிக்க வைத்து வாழுங்கள்.

கருத்துகள்