கவியுதிர் காலம்!நூல் ஆசிரியர் : கவியருவிச் செம்மல் அருந்திரு அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

கவியுதிர் காலம்!நூல் ஆசிரியர் : கவியருவிச் செம்மல் அருந்திரு அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! ஞானா பதிப்பகம், 34, பெராக்கா நகர், பசுமலை, மதுரை-625 004. அலைபேசி : 94438 55548, பக்கம் : 104, விலை : ரூ.135. ****** நூலாசிரியர் கவியருவிச் செம்மல் அருட்கலைஞர் அருந்திரு. அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் அவர்கள் எப்போதும் இயங்கிக்கொண்டே இருப்பவர். அருட்தந்தை என்ற பணியோடு இலக்கியப்பணியையும் இனிதே செய்து வருபவர். பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் விருது பெற்றவர். பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், காவி(ய)க் கவிஞர் வாலி ஆகியோரின் பாராட்டைப் பெற்றவர். இலையுதிர் காலம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ‘கவியுதிர் காலம்’ இப்போது தான் கேள்விப்படுகிறோம். வித்தியாசமான தலைப்பு. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கவிஞர் முனைவர் ஆ. மணிவண்ணன் அவர்கள் அற்புத அணிந்துரை நல்கி உள்ளார். பேராசிரியர் முனைவர் கே.சுமதி அவர்களும் அணிந்துரை வழங்கி உள்ளார். ‘நிரந்தரமானவன்’ என்று தொடங்கி ‘கொரோனா’ முடிய 60 கவிதைகள் உள்ளன. 27 நூல்கள் எழுதி உள்ளார். இது 28ஆவது நூல். நிரந்தரமானவன்! காலத்தைப் பிடிக்கும் கடிவாளம் கையில் கடமையை முடிக்கும் வெறியென கண்ணில் உள்ளத்தைச் சொல்லும் தன்மை என் நாவில் உதிரா திருக்கும் வலுஎன் சக்தி! முதல் கவிதையிலேயே முத்தாய்ப்பாக கவிஞன் என்ற கர்வத்துடன் தன்னம்பிக்கை கவிதை வடித்துள்ளார். பாராட்டுகள். பொய் பேசாதே! உன் நாவு அசைவுக்கு நற்பாடத்தைக் கற்றுக்கொடு உண்மையை மட்டும் பேசுவதற்கு உதவ வேண்டுமென்று கட்டளையிடு பொய் பேசுவது புத்திசாலித்தனமல்ல உண்மை பேசுவதும் உதவாத ஒன்றல்ல! ஒருமுறை பொய் பேசிவிட்டால் அடுத்து உண்மை பேசினாலும் நம்ப மறுப்பார்கள். பொய் பேசாதிருப்பது சிறப்பு. பொய் பேசமாட்டார் என்று தெரிந்தால் மதிப்பு உயரும். காந்தியடிகள் வழியில் உண்மை பேசிட அறிவுறுத்திய கவிதை நன்று. நல்லவை செய்திடுவோம்! பகுத்தறிவின் பாதையேற்று நடையைப் போடடா எத்திசையும் உன்னை நோக்கும் கண்ணைப் பாரடா ஏற்றுக் கொள்ளும் மனிதனாக நீயும் வாழடா! பதச்சோறாக சில வரிகள் மட்டும் மேற்கொள் காட்டி உள்ளேன். அறநெறி போதிக்கும் விதமாக அற்புத வரிகளில் நேர்மறை சிந்தனையை வெளிப்பாடாக நூல் உள்ளது. அம்மா அம்மா தான்! எவருக்கும் கிடைக்காத அழியாச் சொத்து – தாய் பேசாதிருந்த எனக்கு பேச்சுப்பயிற்சி கொடுத்தவள் அதனால் என்மொழி தாய்மொழி உறவுகளின் ‘சிகரம்’, ‘அகரம்’ அம்மா பற்றி வடித்த கவிதை நன்று. குழந்தைகளின் முதல் ஆசிரியர் அம்மா தான். அவள் தரும் பேச்சுப்பயிற்சியால் தான் குழந்தை பேசத் தொடங்கும். அதனால் தான் தாய்மொழி என்றார்கள். தந்தை மொழி என்று யாரும் சொல்வதில்லை. முட்டை! இனப்பெருக்கத்துக்கு / இதுவே காரணம் அடைத்து வைத்தால் / இனப்பெருக்கம் உடைத்துச் சாப்பிட்டால் / உடல் பெருக்கம் பள்ளியில் மட்டும் வாங்காதே / முட்டை மதிப்பெண். வாழ்க்கை என்ற முட்டையை பாதுகாப்பது ஒழுக்கம் என்ற ஓடு. ‘முட்டை’ என்ற தலைப்பில் எள்ளல் சுவையுடன் நெடிய கவிதை எழுதி உள்ளார். முட்டையின் வகைகளையும் வகைப்படுத்தி உள்ளார். மதிப்பெண்ணில் முட்டை வாங்காதிருப்பது சிறப்பு என அறிவுறுத்தியும் உள்ளார். பாராட்டுக்கள். நல்லது பார்ப்பதை யெல்லாம் தேவையென்பதை விட தேவையானவைகளை மட்டும் பார்ப்பது நல்லது! திருக்குறள் போல வைர வரிகளின் மூலம் வாழ்வியல் கருத்துக்களை கவிதைகளாக வடித்துள்ளார். சமுதாயத்தை உற்றுநோக்கி அவை பற்றி சிந்தித்து தேர்ந்தெடுத்த நல்ல சொற்களின் மூலம் கவிதைகளை யாத்துள்ளார். பாராட்டுகள். நடிகர் விவேக்! பகுத்தறிவுச் சிந்தனைக்கு திரையுலகில் பாதை வகுத்தாய் எளிய ரசிகர்களை நடிப்பால் ஈர்த்தாய் ஜனாதிபதி முதற்கொண்டு கைகுலுக்கிப் பார்த்தாய் விருதுகள் பல சேர்த்தாய் இறைவனோடு கை கோர்த்தாய் கலைவாணர் தோன்றியதோ கருப்பு வெள்ளையில் நீ தோன்றியதோ கலரில்! வெண்திரையில் மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திட்ட சின்னக் கலைவாணர் விவேக் பற்றிய கவிதை நனி நன்று. குடியரசுத் தலைவர் மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் சொன்ன வார்த்தைகளை வரமாக ஏற்று மரக்கன்றுகளை இலட்சக்கணக்கில் நட்டு வைத்து அமைதியாக பசுமைப்புரட்சி புரிந்தவருக்கு கவிதை அஞ்சலி சிறப்பு! கொரோனா! இயந்திர உலகத்தை முடக்கி விட்டாய்! செயல்பாடுகளை மடக்கி விட்டாய் முன்னேற்றமே இல்லாமல் துடிக்க விட்டாய் மனிதர்களின் அசையாச் சொத்தா நீ அசையும் எங்களை அசையாமல் படுக்க வைத்தாய் மரணத்தில்! இரண்டு ஆண்டுகளாக இரண்டு அலைகளின் மூலம் உலக மனித சமுதாயத்தை ஆட்டிப் படைத்த கொடிய கொரோனா பற்றிய கவிதை நன்று. தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துகள். பாராட்டுகள். இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துகள்.

கருத்துகள்