படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி
தீபிகா_சுரேஷ் 665
ஏதேனும் அலுவலகத்தில்
அவளைக் காணும் போது எண்ணிப்பாருங்கள்
உடல் நலம் சரியில்லாத
பிள்ளையை வீட்டில் விட்டு விட்டு வந்திருக்கலாம்
உறக்கம் இல்லா இரவைக்
கடந்து வந்த அதிகாலையாய் இருக்கலாம் அவளுக்கு
உடலியல் உளவியல் உபாதைகளால் சமைக்காமலோ சாப்பிடாமலோ கூட வந்திருக்கலாம்
உடனிருப்பவனிடம் அடி உதை அவமானங்களைச் சுமந்து
வந்திருக்கலாம்
பேருந்து நெரிசலில் சில்மிஷ காரர்களிடம் சிக்கிக்கொண்ட
சிரமமாய் இருக்கலாம்
நேற்றைய அவளது விடுப்பு வாழ்வை வெறுமையாக்கிப் போன கணவனின் திதிக்காய் இருக்கலாம்
செலவு செய்து சரி செய்ய முடியாத நோயின் கொடிய வலிகளைச்
சகித்துக் கொண்டும் இருக்கலாம்
குடும்பத்திற்கென தன்னைத்தானே தினந்தினம் சிலுவையில் ஏற்றிக்கொள்ளும் அவள்களை
ஏதேனும் அலுவலகத்தில் காணும்போது
சிறு தவறெனவோ தாமதமெனவோ சொல்லி வெறுப்பை வீசாதீர்
வாழ்வோடு போராடும்
தேவதைகளுக்கு வெறும் வார்த்தைகள் கூட கிடைப்பதில்லை ஆறுதலாய்.
#தீபிகா_சுரேஷ் 665
கருத்துகள்
கருத்துரையிடுக