கேள்வி:-
பிரிய ஓஷோ,
இந்த உலகத்தில் சண்டை போடாத கணவன் - மனைவி உண்டா?
இவர்களின் பகைமைக்கு என்ன காரணம்?
ஓஷோ பதில்:-
அன்பு அல்லது காதல் என்பது இருவகைப்படும். சி.எஸ்.லெவிஸ்
(C S Leuis) என்பவர், "தேவையான அன்பு" (Need Based Love) என்றும் அடுத்ததை "அன்பளிப்பான அன்பு"
(Gift Based Love) என்றும் அழைக்கிறார் .
அடுத்து, ஆப்ரஹாம் மாஸ்லோ,
(Abraham Maslow) என்பவர் முதல் அன்பை "குறையுள்ள அன்பு"
(Deficiency Love) என்றும், இரண்டாவது அன்பை "உயிர்த்தன்மையான அன்பு"
(Being Love) என்றும் அழைக்கிறார்.
இந்த "தேவைக்கான அன்பு" மற்றும் "குறையுள்ள அன்பு" எப்பொழுதும் பிறரைச் சார்ந்தே இருக்கும். இது முதிர்ச்சி அடையாத அன்பு.
இது உண்மையான அன்பு கிடையாது. இது தேவையை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு நீங்கள் பிறரை ஒரு கருவியாக உபயோகிக்கிறீர்கள். நீங்கள் அவரை ஏமாற்றுகிறீர்கள். அவரை அதிகாரம் செய்கிறீர்கள்.
உங்கள் இஷ்டப்படி அவரை நடக்கச் செய்கிறீர்கள். இதனால் அவருடைய சுதந்திரம் பாதிக்கிறது. இதைப் போலத்தான் மற்றவரும் செயல் படுகிறார்கள். நீங்கள் அவரை உடைமையாக்கப் பார்க்கிறீர்கள்.
அவரும் உங்களை அப்படியே அடிமை ஆக்க நினைக்கிறார்.
இப்படி அடுத்தவர்களை உபயோகப்படுத்த நினைப்பது அன்பற்ற செயல். ஆனால் அது அன்பு போலவே தோற்றம் அளிக்கும்! அது ஒரு போலியான நாணயம். ஆனால் 100-க்கு 99 சதவிகிதம் மக்கள் இதைத்தான் உண்மையான நாணயம் என்று கருதி வருகின்றனர். ஏனென்றால், இந்த போலியான அன்பை, நீங்கள் உங்கள் குழந்தைப்பருவம் தொட்டே கற்று வருகிறீர்கள்.
ஒரு குழந்தை தன் தாயிடம் தூய அன்பைத்தான் எதிர்பார்கிறது. அது தாயைச் சார்ந்தே வளருகிறது. அந்தக் குழந்தை தன் தாயின்மீது வைக்கும் அன்பு இந்தக் குறையுள்ள அன்புதான். அது தன் வளர்ச்சிக்காக - சுயநலத்திற்காக தாயை நேசிக்கிறது. இந்த வளர்ப்பை வேறு யார் செய்தாலும், அவரைத் தாய் என்றே அது நேசிக்கும். இவர்கள் வளர்ந்த பிறகும், அன்புக்காகப் பிறரை நாடுகிறார்கள். இவர்கள் மனதளவில் வளரவே இல்லை.
முதலில் தாய், பிறகு காதலி அல்லது மனைவி! எப்பொழுது ஒருவன் பிறரிடம் அன்பை எதிர்பாக்காமல் தானே பிறரிடம் அன்பு செலுத்துகிறானோ, அப்பொழுதுதான் அவன் முதிர்ச்சி அடைந்தவனாக ஆகிறான். அவனிடம் ஏற்பட்ட அன்பு நிறைந்து வழிகிறது. அவன் அதைப் பிறரோடு பங்கிட்டு மகிழ நினைக்கிறான்.
இவன் பிறரிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டான். முதலில் பிறரிடமிருந்து வாங்குவதில் மகிழ்ச்சி அடையும் இவன், அதன்பின் பிறருக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறான். இதுதான் அன்பின் வளர்ச்சி. இதற்குப் பெயர்தான் "உயிர்த்தன்மையான அன்பு". இதுதான் நிறைவான அன்பு.
இப்பொழுது கணவன் - மனைவிக்கான அன்புக்கு வருவோம். நீங்கள் அன்புக்காக பிறரைச் சார்ந்திருந்தால், அது துன்பத்தையே கொடுக்கும்! சார்ந்திருப்பது ஒருவகை அடிமைத் தனம்தான். இதனால், நீங்கள் உங்கள் மன ஆழத்தில் அவரை வஞ்சம் தீர்க்க முயலுவீர்கள். அதற்கு என்ன வழி என்று தேடுவீர்கள்.
அடுத்து நீங்கள் சார்ந்திருப்பவரும் உங்களை அதிகாரம் செய்யவே முனைவார். அதைப்போல நீங்களும் அதிகாரம் செய்யத் தகுந்த சந்தர்பத்தை எதிர்பார்த்திருப்பீர்கள்.
இதன் விளைவு என்ன? சதா சண்டைதான்! போர்தான்!! இதுதான் கணவன் - மனைவி அல்லது காதலியுடன் நடந்துகொண்டிருப்பது. இவர்கள் நெருங்கிய பகைவர்கள்!
தம்பதியர்கள் இதைத்தவிர வேறு என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்? இது ஒரு தொடர் சண்டை! அவ்வளவுதான்!! ஒருவருக்கொருவர் உயிர்த்தன்மையான அன்பு வைப்பது ஒன்றே இவர்களிடையே அன்பு நிலைப்பதற்கான ஒரே வழி...
கருத்துகள்
கருத்துரையிடுக