நான் பேசும் இலக்கியம்! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் கௌசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு; வெற்றிமணி மாத இதழ் ஜெர்மனி !

நான் பேசும் இலக்கியம்! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் கௌசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு; வெற்றிமணி மாத இதழ் ஜெர்மனி ! ***** நூல் ஆசிரியர் எழுத்தாளர் திருமதி சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் தனது பெயரை ‘கௌசி’ என்று சுருக்கி வைத்துள்ளார். ஜெர்மனியில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழர். ஜெர்மனியில் புலம்பெயர்ந்த வாழ்விலும் தமிழை மறக்காமல் அடிக்கடி இணையவழி கருத்தரங்கை நடத்தி வருபவர். கொடிய கொரோனா தொற்று காலத்தில் இவரது இணையவழி கருத்தரங்கம் பலருக்கு ஆறுதலாக இருந்தது ; மகிழ்வைத் தந்தது. ‘நான் பேசும் இலக்கியம்’ என்ற இந்த நூல் கௌசி அவர்கள் பேசும் இலக்கியம் தான். ஜெர்மனியிலிருந்து வெளிவரும் ‘வெற்றிமணி’ என்ற மாத இதழில் எழுதி வந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். இந்த இதழை இணையம் வழி மின்னஞ்சலில் இனிய நண்பர் சமூகஜோதி தம்பி புவனேந்திரன் எனக்கு அனுப்பி விடுவார். கட்டுரைகளாக படித்தவற்றை மொத்தமாக நூலாகப் படித்ததில் பார்த்ததில் மகிழ்ச்சி. பேராசிரியர் யோகராசா அணிந்துரை நல்கி உள்ளார். வெற்றிமணி பிரதம ஆசிரியர் மு.க.சு. சிவகுமாரன் அவர்கள் பதிப்புரை நல்கி உள்ளார். சிந்தனை சிவ. வினோபன் வாழ்த்துரை வழங்கி உள்ளார். 24 கட்டுரைகள் உள்ளன. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் வெற்றிமணி மாத இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. பல்சுவை விருந்தாக நூல் உள்ளது. சங்க இலக்கியப் பாடல்களும் உள்ளன. கவியரசு கண்ணதாசன் வைரவரிகளும் உள்ளன. இலக்கிய விருந்தாக உள்ளது. ‘புலமைக் காய்ச்சலும் பாய்ச்சலும்’ என்ற முதல் கட்டுரையில் அவ்வை பாடிய வைர வரிகளை மேற்கோள் காட்டி விளக்கி உள்ளார். தமிழ்சொற்கள், ஆங்கிலம் உள்பட பிறமொழிகளில் பரவி உள்ளதை எடுத்து இயம்பி உள்ளார். நாம் பேசும் தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்கள் கலந்து இருப்பதையும் விளக்கி உள்ளார். நூலிலிருந்து சிறு துளிகள் இதோ. இராமசாமி பீரோவைத் திருடிய ஆசாமி துர்அதிர்ஸ்டவசமாக பொலீசாரிடம் வில்லங்கத்தில் மாட்டிக் கொண்டேன். இராமசாமி – வடமொழி, சதுக்கம் – பாலி, சர்க்கார் – போர்த்துகேயம், திருடிய – தெலுங்கு, ஆசாமி - மலையாளம், துர் அதிர்ஸ்டம் – வடமொழி, பொலிசார் – இலத்தீன், வில்லங்கத்தில் – மராட்டி, மாட்டி – தெலுங்கு, கொண்டான் – தெலுங்கு. நாம் பேசும் சொற்கள் தமிழ் போலவே தோன்றினாலும் வடசொற்களும் பிறமொழி சொற் ஆளும் பெருமளவில் கலந்துள்ளது கண்டு வியந்து வருந்தினேன். தமிழர்கள் முடிந்த அளவிற்கு பிறமொழிச் சொற்கள் கலப்பின்றி நல்ல தமிழில் பேசிட, எழுதிட முன்வர வேண்டும் என்ற விழிப்புணர்வை விதைத்தது. கவியரசு கண்ணதாசன் வரலாறு மற்றும் அவரது திரைஇசைப் பாடல்கள் யாவும் நூலில் உள்ளன. நூலாசிரியர் கௌசி அவர்கள் பேராசிரியர் என்பதால் சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை ஆழ்ந்து படித்து ஆராய்ந்து அறிந்து சுவையான கட்டுரைகளாக வடித்துள்ளார், பாராட்டுகள். ஆண்டாள் பாடிய பாடலும் நூலில் உள்ளது. பாரதியாரின் காதல் காதல் காதல் பாடலும் உள்ளது. புகழ்பெற்ற செம்புலப்பெயல் நீரர் பாடலும் உள்ளது. இவையாவும் மேற்கோள் காட்டி காதலின் சிறப்பை கட்டுரையில் விளக்கி உள்ளார். நூலாசிரியர் இலங்கையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் மட்டக்களப்புப் பகுதியின் நாட்டுப்புறப் பாடல்களை கட்டுரையாக வடித்துள்ளார். எதையும் உற்றுநோக்கி ஆழ்ந்து கவனித்து கட்டுரைகள் வடித்துள்ளார். உதவிக்கு மட்டுமே உறவா? கட்டுரையில் புலம்பெயர்ந்த வாழ்க்கையை விவரித்து உள்ளார். ‘காலமும் நேரமும் பெரிய மேதாவிகள்’ கட்டுரைகள் நேரத்தின் அருமை பெருமை நன்கு விளக்கி உள்ளார். கட்டுரையின் முடிப்பு முத்தாய்ப்பு, பாருங்கள். ‘ஒவ்வொருவருக்கும் ஏற்படுகின்றா பிரச்சினைகளுக்குக் காலம் பதில் சொல்லுகின்றது. காலம் தீர்த்து வைக்கின்றது. அப்போது கோழை வீரனாகின்றான். வீரன் கோழையாகின்றான்”. (வெற்றிமணி ஐப்பசி மாத இதழ் 2018) ‘நாமும் உங்களில் ஒருவரா?’ கட்டுரையில் வாழ்வியல் கருத்துக்களை விளக்கி உள்ளார். காலம்தோறும் தமிழ்க்காதல் கட்டுரையில் ‘யாயும் ஞாயும் யாராகியரோ’ என்ற புகழ்பெற்ற பாடல் வரிகள் மேற்கோள் காட்டி எழுதி உள்ளார். குறுந்தொகைப் பாடல் மோர்க்குழம்பு பாடலான ‘முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்’ – மேற்கோள் காட்டி எழுதி உள்ளார். மோர்க்குழம்பு சங்க காலத்திலிருந்தே தொடர்கின்றது என்பதை அறிய முடிகின்றது. ஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க. சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும் கட்டுரையின் மூலம் மாதம் ஒரு இதழ் சிறுவர்களுக்-காகவே வெளியிட்ட மாண்பை சுட்டி உள்ளார். அவரைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பாக இருந்தது. வெள்ளிமணி ஆசிரியர் மு.க.சு. சிவகுமரன் அவர்களைப் பற்றியும் ஒரு கட்டுரை உள்ளது. அவர்பெற்ற விருதுகள் விபரமும் உள்ளது. இதழியில் பணியின் சிறப்பை விளக்கி உள்ளார். தமிழ்ப்பாட்டி அவ்வையார் பற்றியும் கட்டுரை உள்ளது. புகழ்பெற்ற அவ்வை வரிகளும் மேற்கோள் காட்டி உள்ளார். நெஞ்சம் மட்டும் பேசும் காதல் கட்டுரையில் காதலின் மேன்மையை உணர்த்தி உள்ளார். ‘வாழ்க்கை என்பது வழுக்கையா?’ கட்டுரையில் வாழ்வின் நிலையாமையை உணர்த்தி மனிதநேயம் விதைத்துள்ளார். ‘பெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்!’ கட்டுரையில் கன்றும் உண்ணாது, இடிக்கும் கேளிர், நிலம் தொட்டு போன்ற பாடல்களை மேற்கோள் காட்டி சிறப்பாக வடித்துள்ளார். ‘சுவாமி விபுலாநந்தர்’ கட்டுரையில் அவரைப் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பாக இருந்தது. 24 கட்டுரைகளும் முத்தாய்ப்பாக உள்ளன. பழைமை புதுமை யாவும் நூலில் உள்ளன. ஆகச்சிறந்த கட்டுரைகளின் தொகுப்பாக உள்ளது. இலக்கிய விருந்து வைத்துள்ள நூலாசிரியர் பேராசிரியர் கௌசி அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள். -- .

கருத்துகள்