பலாச்சுளை! நூல் ஆசிரியர் : சொற்பொழிவுச் சுடர் கவிஞர் பேனா தெய்வம்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

பலாச்சுளை! நூல் ஆசிரியர் : சொற்பொழிவுச் சுடர் கவிஞர் பேனா தெய்வம்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! ஸ்ரீ மீனாட்சி பதிப்பகம், 4/449 ஏ, அரவிந்த் வளாகம், தேனி மெயின் ரோடு, நாகமலை புதுக்கோட்டை, மதுரை-19. பக்கங்கள் ; 68, விலை : ரூ.80 ****** நூல் ஆசிரியர் சொற்பொழிவுச் சுடர் கவிஞர் .பேனா தெய்வம் அவர்கள் மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் பட்டம் பயின்றவர் என்பதால் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர் ஆகியோரிடம் அணிந்துரை பெற்று மாமனிதர் அப்துல் கலாம் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார். பேச்சு, எழுத்து இரண்டு துறையிலும் தனி முத்திரை பதித்து வருகிறார். மதுரையில் நடந்த விழாவில் இவரது பட்டிமன்ற உரை கேட்கும் வாய்ப்பு வந்தது. அன்றே பாராட்டி வந்தேன். அந்த சந்திப்பின் தொடர்ச்சியாக மதிப்புரைக்கு இந்த நூலை அனுப்பி இருந்தார். அறிந்தவனுக்கு மேதை அறியாதவனுக்கு பேதை ஆசிரியர்! ஹைக்கூ உத்திகளில் ஒன்று சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல். ஆசிரியர் பற்றிய அற்புதமான விளக்கத்தை சொற் சிக்கனத்துடன் முதல் ஹைக்கூவிலேயே முத்தாய்ப்பாக எழுதி உள்ளார். ஏழை பணக்காரன் அற்ற நிலை பள்ளிச் சீருடை! பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே ஏழை, பணக்காரன் என்று வேறுபாடு தெரியாமல் சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது தான் இந்த சீருடை. தன்னைக் கொடுத்து நம்மை உயிர்ப்பித்தனர் பெற்றோர்கள்! ஓவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை வளர்ப்-பதற்காக எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதை ஒரு நிமிடமாவது குழந்தைகள் நினைத்துப் பார்க்க உதவிடும் ஹைக்கூ நன்று. கணினி பெருக்கம் மைதானம் சுருக்கம் அடுக்குமாடி குடியிருப்பு! உண்மை தான். குழந்தைகள் மைதானத்தில் விளையாடுவதை விட்டுவிட்டு கணினியிலும் அலைபேசியிலும் வியர்க்காமல் விளையாடுகின்ற காரணத்தால் தான் நோய்கள் பெருகி விட்டன. விளையாட்டிற்கு முக்கியத்துவம் தந்து குழந்தைகள் ஓடி ஆடி விளையாட வைக்க வேண்டும் என்பதை உணர்த்திடும் ஹைக்கூ நன்று. இலவச கழிப்பறையில் இலவசம் இலவசம் நோய்கள்! இலவச கழிப்பறைகள் சுத்தமாக இருந்தால்தான் நோய் பரவாதிருக்கும், நாடு நலம் பெறும். எனவே பொது கழிப்பறையை சுத்தமாக வைத்துக்கொள்ள, சுத்தமாக பயன்படுத்த, பண்படுத்த பொதுமக்களுக்கும் கடமை உண்டு. உணர்ந்து செயல்பட வேண்டும். ஆடை அணிகலன் பணம் இறந்தும் கொடுத்தார் அப்பா உருமால் கட்டு! அப்பா இறந்த மறுநாள் தாய்மாமன் மற்றும் சம்மந்திகள் வசதிக்கு ஏற்றபடி தங்கச் சங்கிலி, மோதிரம், பட்டாடை என செய்முறை செய்திடும் பழக்கம் இன்றும் உள்ளது. இறந்த சோகத்தில் உள்ளவனுக்கு இது ஒரு உதவியாக ஆறுதலாக இருக்கும். எனவே இறந்த பின்னும் உதவுகின்றனர் என்பதை அழகாக வடித்துள்ளார், பாராட்டுகள். அணுகுண்டு வீசி கைப்பற்ற வேண்டும் ஆறுகளை! ஆறுகள் இன்று மணல் கொள்ளையரின் கூடாரமாகி விட்டது. அவர்களை விரட்டிட முடியவில்லை. எனவே அணுகுண்டு வீசிக் கொல்ல வேண்டுமென கவிஞர் கோபமாக உரைப்பது, இனியாவது விழிப்புணர்வு பிறக்கட்டும் என்ற நோக்கத்தில் தான். மனசாட்சியற்ற மணல் கொள்ளையர்கள் திருந்திட வேண்டும். உழைப்பாளர் தினத்தன்றும் உழைத்ததால் உயரத்தில் கடிகாரம்! ‘உழைப்புக்கு உயர்வு உண்டு’ என்பதை குறியீடாக உணர்த்தி உள்ளார். ஓய்வின்றி எப்பொழுதும் உழைத்துக் கொண்டே இருப்பதால் தான் கடிகாரத்திற்கு உயர்ந்த இடம் கிடைத்தது. இதனை உணர்ந்து ‘இளைஞர்களே! சோர்வின்றி உழையுங்கள்’ என உணர்த்தும் விதமாக வடித்திட்ட ஹைக்கூ நன்று. கரன்சிக்கு பலவழி கஞ்சிக்கு ஒரே வழி விவசாயம்! இதைவிட சுருக்கமாக உழவின் அருமையை, பெருமையை உணர்த்திட முடியாது. ‘உழவை, உழவனை காக்காவிடில் உணவுப் பஞ்சம் வருவது உறுதி’. இப்படி எச்சரிக்கை தரும் விதமாக பல சிந்தனைகளை விதைக்கும் ஹைக்கூ நன்று. நஞ்சுண்டும் சாகவில்லை கலப்படமாய நஞ்சு! கலப்படம் என்பது எங்கும் எதிலும் நடக்கின்றது. ஆளைக் கொல்லும் கொடிய விசத்திலும் கலப்படம் நடக்கின்றது என்பதை உணர்த்தி உள்ளார். கெட்டதிலும் நல்லது என்பது போல இந்தக் கலப்படத்தால் உயிர் போகவில்லை என்று எள்ளல் சுவையுடன் கலப்படத்தை சாடியது நன்று. இராமானுசரும் தோற்றார் மனைவியிடம் கணக்குப் போடுவதில்! எள்ளல் சுவையுடன் கணவனை விட மனைவி கணக்கில் புலியாக உள்ளனர் என்பதை மகளிர் மேம்பாடு பறைசாற்றுவதாக வடித்த ஹைக்கூ நன்று. யார் பற்ற வைத்தார்கள் வெடிக்கிறது பருத்தி! ஜப்பானியக் கவிஞர்கள் போல இயற்கையைப் பாடி காட்சிப்படுத்திய விதம் சிறப்பு. நன்று. -- .

கருத்துகள்