திருக்குறளை தேசிய நூலாக்குக ! கவிஞர் இரா .இரவி !

திருக்குறளை தேசிய நூலாக்குக ! கவிஞர் இரா .இரவி ! பாடாத பொருளில்லை சொல்லாத விளக்கமில்லை ! பண்பைப் பயிற்றுவிக்கும் பகுத்தறிவைப் போதிக்கும் ! மனிதன் மனிதனாக வாழ்ந்திட கற்பிக்கும் நூல் ! மனிதனின் மகத்துவம் மனிதனுக்கு உணர்த்தும் நூல் ! வாழ்வின் அர்த்தம் விளக்கிடும் அற்புத நூல் ! வசந்தம் அடையும் ரகசியம் கூறும் நூல் ! தாய் பசித்திருந்தாலும் தவறு செய்யாதே எனும் நூல் ! தரணிக்கு அறநெறி விளக்கிய அறிவு விளக்கு நூல் !. தமிழென்ற சொல்லின்றி பெருமை சேர்த்த நூல் ! தீங்கிழைத்த தீயவருக்கும் நன்மைசெய் எனும் நூல் ! நன்றி மறக்காமல் நன்றியோடு வாழ்க எனும் நூல் ! நெறி பிறழாமல் நேர்மையோடு வாழ்க எனும் நூல் ! ஆள்வோரின் கடமையை அறிவுறுத்திடும் அற்புதநூல் ! ஆணவத்தை அகற்றி அன்பைப் புகட்டிடும் அழகியநூல் ! பயனற்ற சொல் என்றும் சொல்லாதே எனும் நூல் ! பயனுற வாழ்க்கை வாழ்ந்திட வழி சொல்லும் நூல் ! வானிலிருந்து வரும் மழை அமிர்தம் எனும் நூல் ! வானம் பொய்த்தால் வாழ்க்கைப் பொய்க்கும் எனும் நூல் ! இனிய முகத்துடன் வரவேற்க வேண்டும் எனும் நூல் ! இனிய சொல்லிருக்க வன்சொல் வேண்டாம் எனும் நூல் ! கடவுளால் முடியாதது முயற்சியால் முடியும் எனும் நூல் ! கற்ற கல்வியின் படி வாழ்வில் நடந்திடுக எனும் நூல் ! முப்பால் வடித்து முத்திரைப் பதித்த நூல் ! முக்காலமும் பொருந்தும் முன்னேற்ற நூல் ! மரத்தில் தேசிய மரம் ஆலமரம் உள்ளது ! மலரில் தேசிய மலர் தாமரை உள்ளது ! விலங்கில் தேசிய விலங்கு புலி உள்ளது ! பறவையில் தேசியப் பறவை மயில் உள்ளது ! தேசிய மரம் மலர் விலங்கு பறவை உள்ளன ! தேசிய நூல் மட்டும் இல்லையே ஏன் ? உலகப்பொது மறையை தேசிய நூலாக்க ! உமக்கு தயக்கம் ஏன் ? காரணம் என்ன ? திருக்குறளுக்கு இணையான நூல் உலகினில் இல்லை ! தீர்க்கமாக அறிந்திட்ட உலகஅறிஞர்கள் சொன்ன உண்மை ! திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திடுக ! திருக்குறளை வாழ்வில் தினம் கடைபிடித்திடுக !

கருத்துகள்