பைத்தியகாரனின் உளறல் ! கண்டுகொள்ளாதீர்கள்! நூல் ஆசிரியர் : முனைவர் சா.சே. ராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

பைத்தியகாரனின் உளறல் ! கண்டுகொள்ளாதீர்கள்! நூல் ஆசிரியர் : முனைவர் சா.சே. ராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு : சான்லாக்ஸ் பதிப்பகம், 61, டி.பி.கே. மெயின் ரோடு, வசந்த நகர், மதுரை-3. பக்கங்கள் : 83 விலை : ரூ. 50 ****** நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. இனிய நண்பர் மாமதுரைக் கவிஞர் பேரவையில் கவிதை பாடும் மருத்துவர் கவிஞர் சி. நாகநாதன் அணிந்துரை சிறப்பாக நல்கி உள்ளார். ‘கண்டு கொள்ளாதீர்கள்’ என்று தலைப்பிட்டு, ‘கண்டுகொள்ள’ வைத்துள்ளார். நூலாசிரியர் முனைவர் சா.சே. ராஜா. “இந்நூல் கண்ணுக்குத் தெரிந்த கடவுளாய் வாழும் எனது அப்பா, அம்மாவுக்கும்” என்று வித்தியாசமாக எழுதி காணிக்கை ஆக்கி உள்ளார். சமூகத்தை உற்றுநோக்கி, சமூக விழிப்புணர்வு விதைக்கும் கவிதைகளை, புதுக்கவிதைகளாக, ஹைக்கூவாக வடித்து உள்ளார். ஹைக்கூ கவிதைகள் நுட்பம் அறிந்து இதில் உள்ள சில புதுக்கவிதைகளை ஹைக்கூவாக்கலாம். சிறப்பாக இருக்கும். எல்லோருக்கும் கிடைத்த சுதந்திரம் என் அம்மாவிற்கு மட்டும் கிடைக்கவில்லை இன்னும் ஊதிக்கொண்டே இருக்கிறாள் சமையல் அறையில்! உண்மை தான். இல்லத்தரசிகளுக்கு விடுதலை இன்னும் கிட்டவில்லை. சமையலறை என்பது பெண்களுக்கு மட்டுமான அறை என்றே பல இல்லங்களில் உள்ளது இந்நிலை மாற வேண்டும். ஆணாதிக்க சிந்தனையை அழித்து ஆண்களும் சமையலறையில் பங்குபெறும் நிலைமை வர வேண்டும். உதிர்ந்து இறந்த இலை உயிர் கொடுத்து நிற்கிறது தண்ணீரில் விழுந்த எறும்பிற்கு! நல்ல காட்சிப்படுத்தல் புதுக்கவிதை, இக்கவிதை படித்தவுடன் வாசகர் மனதில் இலையின் மீது பயணிக்கும் எறும்பு நினைவிற்கு வந்து விடும். இலை இறந்திட்ட போதும் எறும்பு உயிர் வாழ உதவுகின்றது என்ற கருத்தையும் வலியுறுத்தியது சிறப்பு இறந்தவர் மீண்டும் வாழ்கிறார் உடல் உறுப்பு தானத்தில்! ரத்த தானம், கண் தானம் தாண்டி உடல் உறுப்பு தானமும் இன்று விழிப்புணர்வு வந்து விட்டது. பலர் உடல் தானம் செய்ய எழுதி வைத்துள்ளனர். உடல் தான விழிப்புணர்வு விதைக்கிறார். இறந்தபின் உடல் தானம், படிப்பிற்கு மட்டுமே பயன்படும். உயிருடன் உள்ளவர் இருக்கும் தருவாயில் ,மூளைச்சாவு அடைந்தவுடன் தரும் உடல் தானம், பலரின் உயிர் காக்க பயன்படுகின்றன. ஒருவர், பலரில் உயிர் வாழவும், பலர் உயிர் வாழ்வும் உதவுகின்றார். சில கவிதைகள் மூன்று வரிகளில் ஹைக்கூவாகவும் இடம்பெற்றுள்ளன. சாதி எரிக்கிறது பல பூக்கள் கருகுகிறது ஆணவக் கொலை! திரைப்படத்தில், நாவல்களில் காதலை வரவேற்கும் பலர் சொந்த வாழ்க்கையில் காதலை ஆதரிப்பதில்லை. கணினி யுகத்திலும் ஆணவக் கொலை நடப்பது என்பது மனித குலம் வெட்கித் தலைகுனிய வேண்டிய செயலாகும்.முடிவுக்கு வர வேண்டும் கொடிய செயல் . ஆற்றில் இறங்கிய லாரிகள் அழுது போராடுகிறது சுடும் மணல்கள்! லாரிக்கு கூட சுடுகிறது. ஆனால் மணல் கொள்ளையருக்கு மனம் சுடவில்லை. ஆற்றைக் கொள்ளையடித்து பணம் சுருட்டி வருகின்றனர். பல நூறு ஆண்டுகளில் உருவான மணலை, கொள்ளையடித்து சில நிமிடங்களில் பணமாக்கி விடுகிறார்கள்.மணல் கொள்ளையர் திருந்த வேண்டும் . மனிதர்களை விட சிறந்த புத்தகம் இல்லை ஆனால் அவர்கள் படிப்பது அவ்வளவு எளிதல்ல பல புத்தகங்கள் படிக்காமலே கிடக்கிறது! இப்படி மனிதர்களே படிக்க வேண்டிய புத்தகம் என்று உணர்த்தி பலவகை மனிதர்கள், பலவகை புத்தகங்கள் என்று சொல்லி வடித்த புதுக்கவிதை நன்று. தந்தை பெரியார் என்ன செய்தார் சுயமாக சிந்திக்க சொன்னார் சாதிக்கு தீ வைத்து சாத்திரங்களை தூக்கி எறிந்து மனிதனை மனிதனாக மாற்றியவர் சிலையாக நின்றாலும் உன்விழி வெளிச்சம் அந்த கூட்டம் நடுங்கி போகும்! பெரியார் பற்றிய பெரிய கவிதை நன்று. சில வரிகள் மட்டும் பதச்சோறாக எழுதி உள்ளேன். பெரியார் பற்றிய புரிதல் நன்று. பெரியார் உடலால் மறைந்து பல ஆண்டுகள் ஆனபோதும் கொள்கையால், பகுத்தறிவால், தன்மானத்தால் மக்கள் மனங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். என்றும் வாழ்வார், பெரியாருக்கு மறைவு என்றும் இல்லை. அநீதி அழித்து அறம் நாட்டு வெட்ட சொன்னோம் கருவேல மரங்களை ஆனால் இங்கே வெட்டப்பட்டு வீழ்கின்றன மனித உயிர்கள் சாதியின் பெயரால். கருவேல மரத்தை வெட்டச் சொன்னால் மனிதனை வெட்டி வீழ்த்தும் காட்டுமிராண்டித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து மனிதநேயம் மலர வேண்டும். சாதி மத சண்டைகள் ஒழிய வேண்டும் .மனிதநேயம் மலர வேண்டும் . தேயிலை தொழிலாளர் மலை உச்சி நடுவினிலே மண் சரியும் பள்ளத்திலே மனம் ஒடித்து பசிபோக்க குடும்பப் போராட்டம்! நாம் குடிக்கும் தேநீர் வரக்காரணமான தேயிலையைப் பறிக்க அவர்கள் படும் வேதனையை சோதனையை கவிதையில் வடித்து தொழிலாளின் சிறப்பை உணர்த்தியது சிறப்பு. பாராட்டுகள். ஒருவன் மனதை இன்னொருவன் நோகடித்து அவன் மகிழ்கிறான் என்றால் அவனே சிறந்த மனநோயாளி! சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்டு அறநெறி போதித்து கோபக்கனலுடன் பல்வேறு விழிப்புணர்வு புதுக்கவிதைகள் வடித்துள்ளார். பாராட்டுக்கள். அடுத்த பதிப்பில் புதுக்கவிதைகள் முன்பகுதி, ஹைக்கூ கவிதைகள் பின்பகுதி என பிரித்து பதிப்பித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். படித்திட சுவையாக இருக்கும். நூலாசிரியர் முனைவர் கவிஞர் சா.சே. ராஜா அவர்கள் ஏற்கனவே பத்து நூல்கள் எழுதி உள்ளார். இது பதினோராவது நூல். பாராட்டுகள். மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு கவி பாடி பரிசை வென்ற கவிஞர். தமிழ் மதுரை சங்கப் பலகையில் கவிஞர் சித்தார்த்த பாண்டியன் அவர்களுடன் துணை நின்று செயல்பட்டு வருபவர். இந்த நூலையும் தமிழ் மதுரை சங்கப் பலகை விழாவில் தான் வெளியிட்டார்கள்.விழாவிற்கு சென்ன்று இருந்தேன் . வாழ்த்துகள். பாராட்டுகள்.

கருத்துகள்