படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. *'மூன்று திருக்குறளும் ஓரிடத்தில் சந்தித்தபோது ......'*

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. *'மூன்று திருக்குறளும் ஓரிடத்தில் சந்தித்தபோது ......'* ------------------ சேலம் மாவட்டம். புதிதாக ஒரு இளம் பெண் ஆட்சியர் (வயது 27) பதவியேற்கிறார். அந்த நேரம் பார்த்து, மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஜாதிக் கலவரம் வெடிக்கக்கூடிய அபாயம். மாநில அரசு அவரை உடனடியாகக் கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கச் சொன்னதோடு, காவல்துறையையும் தயார் நிலையில் வைக்கும்படி பணித்தது. மறுநாள் அதிகாலை ரெயிலில், களஆய்விற்காக புதிய ஆட்சியர் வருவதாகத் தகவல். அரசு முறைப்படி அவரை மரியாதையோடு வரவேற்று, விருந்தினர் மாளிகைக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பொறுப்பு டிஎஸ்பிக்கு (வயது 54). அவரும் அதிகாலையிலேயே நிலையத்திற்கு வந்து காத்திருக்கிறார். பத்திரிக்கை நிருபர்களும் அதி காலையிலேயே குழுமிவிட்டார்கள். அதில் ஒரு ரகசியம் இருப்பது சில மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் தெரியும். என்ன நடக்கப் போகிறது, எப்படி நடக்கப் போகிறது என்பதைப் பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருந்தார்கள். புதிதாகவரும் இளம் பெண் ஆட்சியர், டிஎஸ்பியின் சொந்த மகள் என்பதுதான் அந்த ரகசியம். இருவரும் அப்போதுதான் முதன்முறையாகப் பொது இடத்தில் அரசுமுறையில் சந்திக்கிறார்கள். டிஎஸ்பி சொந்தமகளை எப்படி அரசு மரியாதையோடு வரவேற்கிறார் என்பதைக்காண நிருபர்கள் மத்தியில் ஆவல், பரபரப்பு! வண்டியில் இருந்து ஆட்சியர் இறங்கியவுடன், அரசு முறைப்படி, டிஎஸ்பி விறைப்பாகநின்று சல்யூட் செய்து, அவரை அழைத்துச் சென்று அரசு வாகனத்தில் அமரச் செய்ய வேண்டும். ஆட்சியர் அவர்தூக்கி வளர்த்த பிள்ளை என்பதை மறந்துவிட வேண்டாம். ரெயில் வந்து நிலையத்தில் நிற்கிறது. ஆட்சியர் வண்டியில் இருந்து இறங்குகிறார். டிஎஸ்பி, விறைப்பாக நின்று ஒரு சல்யூட் வைக்கிறார். ஆட்சியரும் சிரித்துக் கொண்டே, அரசு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். ஆட்சியரை அப்படியே அழைத்துச் சென்று அரசு வாகனத்தில் அமர வைக்கிறார். வாகனம் நகர்கிறது. அப்பா,மகள் இருவர் கண்களிலும் கண்ணீர்! அது ஆனந்தக் கண்ணீர்!! சூழ்நிலை தெரிந்த நிருபர்கள் டிஎஸ்பியைச் சூழ்ந்து கொண்டு ஆவலாய்க் கேட்கிறார்கள். 'உங்கள் உணர்வுகள் எப்படி இருந்தது?'. 'விவரிக்க முடியவில்லை. இருந்தாலும் அவள் மகள் என்பது வீட்டில்தான். இங்கே அவர் ஆட்சியர். நான் அவருக்குப் பணிபுரிய நியமிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி!அவ்வளவுதான்!' **' *தந்தை* *மகற்காற்றும்* *நன்றி* *அவையத்து* *முந்தி* *இருப்பச்* *செயல்* ' * அவர் தன் கடமையைச்* செய்து விட்டார்! ஆட்சியரை விருந்தினர் மாளிகையில் சந்தித்தபோது, மூத்த நிருபர்கள் இதே கேள்வியை ஆட்சியரிடம் கேட்டார்கள். 'உங்களுக்கு எப்படி இருந்தது?' 'ஒரு வினாடி தடுமாற்றமாகத் தான் இருந்தது. ஆனால் இங்கே, இப்போது நான் ஆட்சியர். தனிப்பட்ட உறவுகளுக்கு இடமில்லை, கடமைதான் முக்கியம் என்று மனத்தைத் தேற்றிக் கொண்டேன் அதுவும் அப்பா சொல்லிக்கொடுத்த பாடம்தான்,' என்றார்'. *மகன் தந்தைக்(கு)காற்றும் உதவி இவன் தந்தை எந்நோற்றான் கொல்எனும் சொல்'* ஆட்சியர் தன் கடமையை நிறைவேற்றிவிட்டார்! இந்நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்த்த காவல்துறை அதிகாரியின் மனைவியும், ஆட்சியரின் தாயுமான அந்த அம்மாவுக்கு எப்படி இருந்தது? நிருபர்களில் மிகமூத்த நிருபர் அந்தத் தாயைப் பார்த்துக் கேட்டார்: ' 'உங்கள் உணர்வுகள் எப்படி இருந்தது?' 'என்ன சொல்வதென்றேத் தெரியவில்லை. ஒரு பக்கம் கணவர். இன்னொரு பக்கம் மகள். நாங்கள் தூக்கி வளர்த்த பிள்ளை. இன்று என் கணவரே நின்று வரவேற்கும் அளவுக்குப் பெரிய பதவியில்! சந்தோஷமாகத்தான் இருந்தது,' என்றார், தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே! அதுவும் ஆனந்தக் கண்ணீரே! *'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும், தன் மகளைச் சான்றோன் எனக் கேட்ட தாய்',* அல்லவா? மூன்று குறள்களும் அங்கே சங்கமமாகி முக்கடலாகப் பரிணமித்தது!

கருத்துகள்