கா.மு.நடராஜன் - ரசனையின் சிறகுகள் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் !

கா.மு.நடராஜன் - ரசனையின் சிறகுகள் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் ! மதுரையின் காந்தி இயக்கங்களின் முகமாக கடந்த 70 ஆண்டுகளாக செயல்பட்ட கா.மு.நடராஜன் (89) அவர்கள் நேற்று (24.5.21) நள்ளிரவு 12 மணிக்கு காலமானார், அவரது இறுதி சடங்குகள் (25.5.21) அதிகாலை செய்து முடிக்கப்பட்டது. அருப்புக்கோட்டை பண்ணைமூன்றடைப்பு கிராமத்தைச் சேர்ந்த கா.மு.நடராஜன் அவர்கள் சிவகங்கை மன்னர் நடத்திய பள்ளியில் தனது எஸ்.எஸ்.எல்.சி படிப்பை முடித்து விட்டு மதுரை மதுரா கல்லூரியில் தனது இண்டர்மீடியேட்டை பயின்றார். மதுரா கல்லூரியில் தனது படிப்பை பாதியில் விட்டு அவர் சர்வோதய இயக்கங்களில் இணைந்து மக்களுக்கு பணியாற்ற முடிவு செய்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற இரவின் நிகழ்வுகள் அவருள் பெரிய மாற்றங்களை விளைவித்தது. கா.மு.நடராஜன் அவர்களுக்கு நெடுஞ்சாலைத்துறையில் பணி கிடைத்த போது அதை ஏற்க மறுத்து மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ஷங்கரா ராவ் தியோ தலைமையில் ராமேஷ்வரத்தில் இருந்து பாலக்காட்டிற்கு பாதயாத்திரை சென்றார். 1952ல் பிரிட்டிஷாரின் தயாரிப்பில் உருவான துணிகளை புறக்கணிப்போம் என்கிற அறைக்கூவலை ஏற்று கதர் ஆடைக்கு மாறினார். எஸ்.எஸ்.எல்.சி பயிலும் காலத்திலேயே அவர் காந்தி கிராமத்தில் நிகழ்ந்த கோடை கால வகுப்புகளில் பங்குகொண்டார். ஜெயபிரகாஷ் நாராயணன், அருணா அசப் அலி ஆகியோரின் அனல் பறக்கும் பேச்சுக்கள் அவர் மீது பெரும் ஆளுமையை செலுத்தியது. தமிழகத்திற்கு வினோபா வருகிறார் என்பதை அறிந்தவுடன் பயணத்திற்கு ஆயத்தமானார் நடராஜன். 1956-57ல் 11 மாதங்கள் வினேபாவுடன் தமிழகம் முழுவதும் சென்று நிலச்சுவாந்தார்களிடம் நிலத்தை பெற்று ஏழைகளுக்கு பிரித்து கொடுக்கும் பூதான இயக்கத்தில் பங்குகொண்டார். ஆங்கிலம் அறிந்திருந்ததால் வினோபாவின் உரைகளை பல இடங்களில் இவர் தான் மொழியாக்கம் செய்தார். ஒரு காந்திய கருத்தாக்கம் களத்தில் எப்படி வேலை செய்கிறது என்பதை கண்கூடாகப் பார்த்த கா.மு.நடராஜன் தன் எஞ்சிய வாழ்நாளை காந்திய இயக்கங்களின் வழியே மக்களுடன் பணியாற்ற முடிவு செய்தார். ஜே.சி.குமரப்பா, தர்மாதிகாரி, விமலா தாக்கர், பி.சி.கோஷ், க்ரிபளானி, கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன், சங்கரலிங்கம், ராமச்சந்திரன் என பல ஆளுமைகளுடன் நெருக்கமாக அவர் பணியாற்றினார். உலக அளவில் தொடர்ந்து பயணிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது கா.மு.நடராஜன் அவர்களின் அனுபவத்தையும் பார்வையையும் இன்னும் விசாலப்படுத்தியது. ஒவ்வொரு பயணத்திலும் ஒரு பெரிய பெட்டியில் புத்தகங்களை தன்னுடன் கொண்டு வருவார். எனக்கும் என் தங்கைக்கும் அவர் 1994களில் இருந்து புத்தகங்களை பரிசளிப்பார். அவரது அமெரிக்க பயணம் ஒன்றில் எனக்கு என்ன வேண்டும் என்று அவர் கேட்க நான் சேகுவேராவை பற்றிய நல்ல புத்தகம் கேட்டேன், அவர் உடன் ஒரு அற்புதமான ஆல்பத்தை வாங்கி வந்து கொடுத்தார், பல ஆண்டுகள் என் சேகரத்தில் இருந்து விலைமதிக்க முடியாத பொக்கிஷமாக அது திகழ்ந்தது. இந்த புத்தகம் தான் அடுத்த பத்தாண்டுகளில் என் சேகுவேரா ஆவணப் படமாகவும், என் சேகுவேரா புகைப்படக் கண்காட்சியாகவும், விடியல் வெளியிட்ட சேகுவேராவின் கனவில் இருந்து போராட்டத்திற்கு புத்தகத்தில் இடம் பெற்ற புகைப்படத் தொகுப்புகளாகவும் ரசவாதம் பெற்றவண்ணம் இருந்தது. பிடல் காஸ்ட்ரோவும் சேகுவேராவும் போல காந்தியவாதி கா.மு.நடராஜனுக்கு இந்த காந்திய இயக்கங்களில் மு.மாரியப்பன் என்கிற வாழ்நாள் நண்பர் கிடைத்தார், இருவரும் இணைபிரியா தோழர்களாக தங்களுக்குள் பேசிக் கொள்வதை நான் வெகுவாக ரசித்திருக்கிறேன். இருவரும் தினசரி காலை 7 மணிக்கு முதல் உரையாடலை தங்களின் தொலைபேசியில் நிகழ்த்துவார்கள். மு.மாரியப்பன் அவர்கள் சில ஆண்டுகள் முன்னர் காலமானதில் இருந்து ஒரு பெரும் தோழமையை இழந்தவராக நடராஜன் இருந்தார். கா.மு. நடராஜன் அவர்கள் சர்வோதய இலக்கியப் பண்ணையின் துணைத்தலைவராகவும், மதுரை காந்தி அருங்காட்சியக செயலாளருமாகவும் தற்சமயம் பொறுப்பு வகித்து வந்தார், அவரைத் தேடி நூற்றுக்கும் மேற்பட்ட பதவிகள் வந்தவண்ணம் இருந்தன. சர்வோதய மண்டல் , சர்வ சேவா சங்கத்தின் பொறுப்புகளில் பல காலம் இருந்தார். காந்தி கிராம பல்கலைகழகத்தின் ஆட்சிப் பேரவை உறுப்பினராகவும், மதுரை காமராசர் பல்கலை கழகத்தின் கல்வி பேரவை உறுப்பினராகவும் சில காலம் இருந்தார். சர்வோதயம் என்கிற மாதப் பத்திரிக்கையை தமிழிலும் ஆங்கிலத்திலும் அதன் ஆசிரியராக நடத்தி வந்தார். ஆங்கிலத்தில் வரும் புதிய புதிய நூல்களை தேடித்தேடி வாங்குவதில் பெரும் ஆர்வத்துடன் ஈடுபடுவார், ஒரு புதிய புத்தகம் அவர் கைக்கு வந்ததும் ஒரு குழந்தையை போல் அவர் குதுகலிப்பதை நான் நெருங்க அமர்ந்து ரசித்திருக்கிறேன். இடதுசாரிகளை அவர் எப்பொழுதும் தோழமையுடன் அணுகினார், நானும் டாக்டர்.ஜீவா அவர்களும் கா.மு.நடராஜன் அவர்களுடன் இன்றைய காந்தியம், மார்க்சியம் ஆகிய தத்துவங்களின் பொருத்தப்பாடு குறித்தும் காலத்திற்கு ஏற்ப செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் நாட்கணக்காக பேசியிருக்கிறோம். மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களுடன் கா.மு.நடராஜன் அவர்கள் வீட்டில் ஒரு அதிகாலை நடத்திய நீண்ட உரையாடல் இன்னும் பசுமையாக இருக்கிறது. ஃபுகுசிமா அணு உலை வெடிப்பை ஒட்டி 2011ல் கூடங்குளம் போராட்டம் பெரிதாக வெடித்த போது நான் மதுரையில் இருந்து கூடங்குளத்திற்கு ஒரு தேசிய யாத்திரையைத் நான் திட்டமிட்டேன், அதற்கு காந்தியவாதி பன்வாரி லால் சர்மா, பிரபாத் பட்நாயக் உள்ளிட்ட இந்தியா முழுவதும் இருந்து விஞ்ஞானிகள், அணு உலை எதிர்ப்பாளர்களை மதுரைக்கு வரவழைத்தேன். இதை அறிந்த கா.மு.நடராஜன் அவர்கள் எங்கள் தலைவர் வரும் போது இந்த யாத்திரையும் அன்றைய காலை நடக்கும் மாற்று எரிசக்தி தொடர்பான தேசிய கருத்தரங்கத்தையும் காந்தி மியுசியத்திலேயே நடத்த அனுமதித்தார். காந்தி மியுசியத்தில் இருந்து கூடங்குளத்திற்கு அந்த யாத்திரையை கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழில் சிறுபத்திரிக்கை சூழலை உற்றுப் பார்த்துக் கொண்டேயிருப்பார், அவ்வப்போது வரும் புதிய நூல்களை உடன் சர்வோதய இலக்கியப் பண்ணைக்கு வரவழைக்கும்படி கேட்டுக் கொள்வார். தி இந்து ஆங்கில நாளேட்டில் வாராவாரம் வரும் வரப்பெற்றோம் நூல்கள் மற்றும் நூல் விமர்சனப் பகுதியில் வரும் நூல்களை பற்றி அந்த நொடியே அழைத்து இது யார், இது நல்ல புஸ்தகமானு கொஞ்சம் பாருங்கள் என்பார். கா.மு.நடராஜன் அவர்களுக்கு ஆவணப்படுத்தும் பணிகளில் எனது தங்கை கல்யாணி உறுதுணையாக இருந்தார், அதனால் அவ்வப்போது நானும் அவரும் கல்யாணியும் அவரது அறையில் சந்திப்போம் உரையாடுவோம், இந்த அறையில் வைத்துதான் நாம் மு.பாலுவை சந்தித்தேன், மு.பாலு தான் பின்னாட்களில் பாமயனாக உருமாற்றமடைந்தார். இதே அறையில் வந்து செல்லும் அவரது நண்பர்களில் பலர் எங்கள் வாழ்நாள் நண்பர்களாக மாறினார்கள். நட்பை உறவை பேணுவதில் அவருக்கு நிகர் இல்லை, அவ்வப்போது அவரும் மு.மாரியப்பன் அண்ணாச்சியும் நானும் இரவு உணவுக்கு வெளியே செல்வோம். நான் அவருடன் பல முறை புது தில்லிக்கு சென்றிருக்கிறேன், எங்கள் ரயில் உரையாடல்களில் அவர் தன் வாழ்க்கை அனுபவங்களை புகைப்பட நினைவுடன் பகிர்ந்திருக்கிறார், இஸ்ரேலில் அவர் எடுத்த ஆறு மாத கால பயிற்சி, தமிழகம் முழுவதும் பூதானம் வழங்கிய நிலத்தில் வெட்டப்பட்ட ஆயிரம் கிணறுகள், கதர் நூற்பின் மூலம் தன்னிறைவு அடைந்த கிராமங்கள் என அவர் தனது அனுபவங்களை பேசத் தொடங்கினால் மடை திறந்த வெள்ளமாக அது பாய்ந்த படி இருக்கும். ஓவியத்தின் மீது அலாதியான பிரியம் கொண்ட கா.மு.நடராஜன் அவர்கள் தானே கைப்பட சர்வோதய இலக்கியப் பண்ணையின் இலச்சினையை வரைந்திருக்கிறார். உலக ஓவியங்களின் மீது தீராக் காதல் கொண்ட அவர் வான்கா முதல் மதுரையில் வாழ்ந்து மறைந்த பெருமாள் தா வரை ரசித்து தீர்ப்பார். ஓவியர் பெருமாள் தா அவர்களையும் நடராஜன் அண்ணாச்சி அவர்களின் அறையில் வைத்து தான் சந்தித்தேன். ஓவியர் பெருமாள் தாவின் கடைசி காலம் வரை ஒரு அரணாக இருந்தவர் கா.மு.நடராஜன் அவர்கள். மதுரை நகரத்திற்குள் கா.மு.நடராஜன் வசித்த காலத்தில் தினசரி டவுன் ஹால் ரோடும் மேல மாசி வீதியும் சந்திக்கும் சந்தியில் இருக்கும் நரசூஸ் காபியில் காபி அருந்துவது வழக்கம், அங்கே அவருடன் காபி அருந்துபவர் எழுத்தாளர் ஜீ.நாகராஜன், இருவரும் அதிகாலையே நாளிதழ்களும் காபியுமாக நாட்டு நடப்பு முதல் இலக்கியங்கள் வரை பேசித்தீர்ப்பர். அந்த நேரம் ஜீ.நாகராஜன் அவர்கள் மதுரையில் பிரபலமான ஆசிரியராக இருந்திருக்கிறார், மதுரை சினிமா தியேட்டர்களின் ஜீ.நாகராஜன் நடத்தும் வகுப்புகள் என விளம்பரங்கள் வரும் காலமது. கா.மு.நடராஜன் அவர்களின் சர்வோதய இலக்கிய பண்ணைக்கு ஜீ.நாகராஜன் அவர்கள் அடிக்கடி வந்து அங்கு உரையாடுவது வழக்கம். நீண்ட காலம் ஜீ.நாகராஜனின் சில கைப்பிரதிகள் கா.மு.நடராஜன் வசம் இருந்தது. ஜீ.நாகராஜனை பற்றி பேச ஆரம்பித்தால் அவரது கண்கள் அகல விரியும், அவர் குரலில் ஒரு தீர்க்கம் ஒலிக்கும், எப்பேர் பட்ட மனுசன் அவர் என்று அவரை பற்றி பேசி முடிக்கும் போது கா.மு.நடராஜன் அவர்களின் கண்கள் பலபலக்கும். கடந்த வெள்ளிக்கிழமை முதல் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கா.மு.நடராஜன் அவர்கள் நேற்று நள்ளிரவு காலமானார், அவரது நண்பர் ஜீ.நாகராஜன் இதே மதுரை அரசு மருத்துவமனையில் தான் நடுங்கும் குளிரில் மறைந்தார். நிச்சயம் மதுரை அரசு மருத்துவமனையில் கா.மு.நடராஜன் அவரது அத்யந்த நண்பரை பற்றி இந்த நான்கு இரவுகளில் நினைத்துக் கொண்டே தான் இருந்திருப்பார் இருவரும் இணைந்து பல காபிக்களை குடித்திருப்பார்கள்.

கருத்துகள்