படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா .இரவி ! பாமயன். அறிவுச் சுடர் அணைந்தது !

படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா .இரவி ! பாமயன். அறிவுச் சுடர் அணைந்தது ! ஊழிக் காற்றில் ஆழித்தேர் சாய்ந்ததுபோல எங்களுடைய அறிவாசான் க.மு. நடராசன் காலமாகிவிட்டார். கொரானாவின் தாக்கம் அவரையும் விட்டுவைக்கவில்லை. சர்வோதயத் தலைவரும், வினோபாபாவின் அணுக்கத் தொண்டருமான நடராசன் அண்ணாச்சி பரந்துபட்ட வெளி உலகம் அறியாத மாபெரும் அறிவாளி. அதுமட்டுமல்ல மிகச் சிறந்த களப்பணியாளர். கல்லூரிப் படிப்பை பாதியிலேயே தூக்கி எறிந்துவிட்டு காந்திய இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். ஏறத்தாழ 70 ஆண்டுகள் காந்தியப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அகவை 90 ஆனாலும் ஓர் இளைஞருக்குரிய அனைத்து ஆளுமையுடன் பணிகளை மேற்கொண்டவர். அவரது உடல் அவருக்கு ஒத்துழைக்கவில்லை என்றாலும் மனத்தால் அதை வென்று காட்டினார். இரண்டு தமிழ் இதழ்கள், ஓர் ஆங்கில இதழ் ஆகிய மூன்று இதழ்களுக்கு ஆசிரியராக இருந்து அதைத் தொய்வின்றிக் கொண்டு வந்தவர். பல சிற்றிதழ்கள் தொடங்கி பாதியிலேயே நின்றுபோகும், சில விட்டுவிட்டு வெளிவரும். ஆனால் அண்ணாச்சி தொடங்கிய இதழ்கள் ஒரு மாதம் கூட நிற்காமல் வெளிவந்து கொண்டிருக்கின்றன. காந்தி அருங்காட்சியத்தின் செயலாளர், காந்தி நினைவு நிதித்தலைவர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அவர் தொடங்கிய சர்வோதய இலக்கியப் பண்ணை மதுரையின் வெற்றிகரமான புத்தக நிலையமாக விளங்கி வருகிறது. காந்தியர்கள் இளைஞர்களிடம் அந்நியப்பட்டிருப்பது வழக்கம். ஆனால் இவர் எப்போதும் இளைஞர்களைக் கவர்ந்தவராகவே இருப்பார். தன்னிடம் வரும் இளைஞர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக இருப்பார். அவர்களது குடும்பத்தின் அனைத்து நன்மை தீமைகளிலும் தன்னை இணைத்துக் கொள்வார். அவரால் ஏற்றிவிடப்பட்டவர்கள் ஏராளம். சர்வோதயத்திற்கு உழைத்த சிறு ஊழியரைக் கூட விட்டுவைக்காமல் அவர்களுக்கு நிதி திரட்டி விழா எடுத்து சிறப்புச் செய்துவிடுவார். இந்திய அளவிலான அனைத்துக் காந்தியத் தலைவர்களும் இவரை நன்கு அறிவார்கள். டெல்லி முதல் வார்தா-சேவாகிராமம் வரை இவரது அறிமுகம் விரிவானது. அவருடன் நான் அணுக்கத் தொண்டனாகச் செல்லும்போது வடநாட்டில் இவருக்கு இருக்கும் செல்வாக்கை நன்கு அறிய முடிந்தது. ஆனால் யாரிடமும் எதுவும் வேண்டும் என்று கேட்கவே மாட்டார். கொடுத்த இடத்தில் தங்கி கிடைத்த உணவை உண்டு மிக மிக எளியமையாகவே வாழ்ந்தார். ஜெயப்பிரகாஷ் நாராணயன் முதல் சிப்கோ இயக்கத்தின் சுந்தர்லால் பகுகுணா வரையிலும் நெருக்கமான நட்புக் கொண்டிருந்தார். ஜே.சி குமரப்பாவுடன் பணியாற்றிய அனுபவங்கள், சர்வோதயத் தலைவர் ஜெகந்நாதன் உடன் செய்த பணிகள் ஒவ்வொன்றும் ஒரு நூலுக்கான தகவல்களைக் கொண்டிருக்கும். நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் தலைமறைவு வாழ்க்கைபோல வாழ்ந்த அனுபவம் அவருக்கு உண்டு. வெளிநாட்டுச் சிந்தனையாளர்கள் பலருடன் பழகிய அனுபவம் கொண்டவர். இவான் இல்யீச் என்ற மாபெரும் மாற்றுக் கல்விச் சிந்தனையாளருடன் (டி ஸ்கூலிங் சொசைட்டி பற்றி எழுதியவர்) மதுரை வீதிகளில் நடந்துபோன கதைகளைச் சொல்வார். இன்றைக்கு புகழ்பெற்று விளங்கும் தாவோ ஆஃப் பிசிக்ஸ் ஆசிரியரான பிரிட்ச்ஆப்காப்ராவை சந்தித்த அனுபவங்களைக் கூறுவார். இந்தாலி நாடு அவருக்கு அண்டைவீடுபோல விளங்கியதை அவரைச் சந்திக்கவரும் இத்தாலிய அன்பர்களைப் பார்க்கும்போது புரியும். ஆல்பர்ட் டி லபார்டே என்ற இத்தாலிய காந்தி இவரது நெருக்கமான நண்பர். அவரது மகள் அலசான்டிரா தனது பெயரை சந்திரா என்று மாற்றிக் கொண்டு இங்கேயே பல ஆண்டுகள் வசித்து வந்தார். இத்தாலிய கம்யூனிஸ்ட் தலைவர் கிராம்சியைப் பற்றி பேசியும் அவரது நூல்களை வாங்கி வந்து நமது தோழர்களுக்குக் கொடுத்தும் மார்க்சியத்தின் மறுபக்கத்தைக் காண வைத்தார். தமிழ்நாட்டில் ஏதாவது ஓர் ஊரைப்பற்றிக் கூறினால் அந்த ஊரில் இருந்த சர்வோதய ஊழியரைப் பற்றிக் கூறுவார். தமிழகமெங்கும் ஊர் ஊராக சர்வோதய இயக்கத்தை கட்டி எழுப்பியவர்களில் முன்னோடி. ஆனால் அவர்கள் யாரும் தங்களை வெளிக்காட்டிக் கொண்டதே இல்லை. 'தமிழ்நாட்டில் நான்தான் வினோபாவுடன் அதிக நேரம் இருந்துள்ளேன், ஆனால் ஒரு புகைப்படம் கூட அவருடன் சேர்ந்து இல்லை' என்பார் ஏன் என்று கேட்டால், 'நான்தானே போட்டோகிராபர்' என்று நகைச்சுவையாகக் கூறுவார். ராமநாதபுரம் என்றால் அங்கு நடந்த ஒரு சர்வோதயக் கூட்டம் பற்றிச் சொல்வார், நாங்குநேரி என்றால் அங்கு நடந்த கூட்டத்தைப் பற்றி விவரிப்பார். கழுகுமலையில் நடந்த மாநாட்டைப் பற்றிக் கூறுவார். அதேபோல சபர்மதி சென்றால் அங்குள்ள சர்வோதயத் தலைவர்களை பெயர் சொல்லி அழைத்திடுவார். ஒருமுறை வினோபா தொடங்கிய மகாராஷ்ட்ராவில் உள்ள பவுனார் ஆசிரமம் சென்றபோது அதன் தலைவராக இருந்த கௌதம் பஜாச் இவரை வரவேற்ற முறையைக் கண்டு நான் வியந்துபோனேன். அவ்வளவு மதிப்பான வரவேற்பு. வடகிழக்கு மாநிலங்களில் பணிசெய்யும் காந்தியர்கள் கூட இவருக்கு நல்ல அறிமுகம் உள்ளவர்கள். சர்வோதயக்காரர்கள் காசில்லாமல் இந்தியா முழுவதும் சுற்றி வர முடியும் என்று இவருடன் சென்ற பின்னர்தான் தெரிந்தது. ஒருமுறை வேறு ஒரு வேலை நிமித்தமாக அசாம் சென்றபோது அங்கு ஒருவரது பெயரைக் குறிப்பிட்டு 'அவரைப் போய் பாருங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்வார்' என்று கூறினார். இலங்கை சென்றபோது யாழ்ப்பாணத்தில் உள்ள இவரது மூத்த காந்திய நண்பரான தம்பிப்பிள்ளையின் முகவரி கொடுத்து அவருக்கும் நாங்கள் வருவதைச் சொல்லி சந்திக்க வைத்தார். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இயற்கை வேளாண்மையின் முன்னோடியான மசானவோபு பகோகா, தபோல்கர் ஆகியோரை நன்கு அறிந்தவர். ரசூலியா பண்ணையில் எண்பதுகளில் நடந்த ஒரு பகோகா பங்கேற்ற கூட்டத்திற்கு சென்றுவந்தவர் 'ஒன் ஸ்ட்ரா ரெவலூசன்' (ஒற்றை வைக்கோல் புரட்சி) என்ற முரட்டு தாளில் அச்சிடப்பட்ட நூலை வாங்கி வந்துள்ளார். அதை என்னிடம் 1989ஆம் ஆண்டு கொடுத்தார். அந்த நூல்தான் என்னை இயற்கை வேளாண்மைக்குள் இழுத்தது. வார்தாவில் உள்ள சேவாகிராமத்தில் (காந்தி ஆசிரமத்தில்) 15 நாள் காந்திய பயிற்சி முகாம் நடைபெற்றது. அதற்கு என்னை அனுப்பி வைத்தார். அங்கு மாபெரும் ஆளுமைகளான நாராயண தேசாய் (காந்தியின் செயலாளர் மகாதேவ் தேசாயின் புதல்வர்), சுப்பாராவ், லவணம் (நாத்திக மையத்தின் கோ.ரா. அவர்களின் புதல்வர்), ஸ்ரீபாத தபோல்கர் (இயற்கை வேளாண்மையின் முன்னோடி) ஆகியோர் வந்து பயிற்சி அளித்தனர். அவர்கள் யாவரும் இவருக்கு நெருக்கமான நண்பர்கள். சர்வோதய மாநாடுகள் நடக்கும்போதெல்லாம் பெரும்பாலும் நான் அவருடன் செல்வதுண்டு. ஒரிசாவில் நடைபெற்ற மாநாட்டில் ஒரிசா முன்னாள் முதல்வர் நவ்கிஷன் சௌத்ரியின் மனைவி அதிகாலையில் மாநாட்டுத் திடலை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அண்ணாச்சியைக் கண்டதும் அவர் வணங்கி பேசத்தொடங்கிவிட்டார். அந்த அம்மையார் பார்ப்பதற்கு ஒரு பழங்குடி நங்கைபோல இருந்தார். அண்ணாச்சி சொன்ன பிறகுதான் அவர் முதல் அமைச்சரின் மனைவி என்று புரிந்தது. அவ்வளவு எளிமையான தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இதேபோல ஆக்ராவின் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. மதுரைக் காந்தி அருங்காட்சியத்திற்கு இவரது அழைப்பின் பெயரில் வந்த எண்ணற்ற தலைவர்கள் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் என்றால் சொல்லி மாளாது. 'நாளை மற்றொரு நாளே' என்ற நாவலின் ஆசிரியரான ஜி.நாகராசன் இவரை வந்து அடிக்கடிச் சந்தித்து உரையாடியதையும் அவரது பழக்கங்களையும் கூறி அவரின் படைப்பாற்றலை வியந்து கூறுவார். தாகூரிடம் சாந்திநிகேதனில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றிய பெருமாள் ஐயா அடிக்கடி அண்ணாச்சியைச் சந்தித்து ஓவியங்கள் குறித்து உரையாடுவார். அடிப்படையில் க.மு. நடராசன் ஓர் ஓவியர். அவர் சிறுவயதில் அவரது வழிகாட்டியான செல்வராஜ் அவர்களுடன் இணைந்து சிற்றிதழ் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் அவரே ஓவியராகவும் இருந்துள்ளார். சர்வோதயம் இதழ் ஆங்கிலம் தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் வருகிறது. அவரது 70ஆம் பிறந்தநாளில் இந்த இரண்டு இதழ்களும் தொடங்கப்பட்டன. அதை அவரது நண்பரும் சர்வோதய அறிஞருமான மு.மாரியப்பன் உருவாக்கிக் கொடுத்தார். அவரும் பல கட்டுரைகளை அதில் எழுதியும் வந்தார். ம.பொ. சிவஞானத்தின் அணுக்கத்தொண்டராக இருந்தவர் மாரியப்பன். எனவே அவரது கட்டுரைகள் மிக ஆழமாக இருக்கும். அந்த இரண்டு இதழ்களையும் வடிவமைத்து அச்சிடும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டு செய்து கொடுத்தேன். பின்னர் என்னுடைய பணி முழுமையாக இயற்கை வேளாண்மைப் பக்கம் வந்துவிட்டதால் செய்ய இயலவில்லை. நான் அந்த இதழை வழக்கமான காந்திய பாணியில் இல்லாமல் பெரிய அளவில் வண்ண அட்டையுடன் கொண்டு வர வேண்டும் என்று வற்புறுத்தினேன். அதை சர்வோதய இரட்டையர் என்று அழைக்கப்பட்ட மு.மாரியப்பனும், க.மு. நடராசன் அண்ணாச்சியும் ஏற்றுக்கொண்டனர். காந்தி நினைவு நிதிக்கட்டிடத்தில் இதழுக்கு என்று ஓர் அறை ஏற்படுத்தப்பட்டது. ஊழியர் அதற்காக அமர்த்தப்பட்டனர். முறைப்படி இதழ் பணி தொடங்கி நடந்து வருகிறது. நான் பேருந்தில் பயணப்பட்டு தமுக்கத்தில் இறங்கி விரைவாக நடப்பேன். நேரம் தவறாமையை அவர் தவறாது பின்பற்றுவார். அவரிடம் நான் சில நேரம் 'குட்டு' வாங்கியுள்ளேன். காந்தி நினைவு நிதி அலுவகம் சென்று செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே சென்றதும் புன்முறுவல் பூக்க 'வாங்க, எப்படி இருக்கீங்க' என்று வாய் நிறைய அழைப்பார். இனி என்று காண்போம் அந்தப் புன்முறுவலை? மு.மாரியப்பனின் மறைவு அண்ணாச்சிக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அதன் பின்னர் அவரது துணைவியாரின் இழப்பும் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. அதனுடன் அவருக்கு கால்வலியும் சேர்ந்து கொண்டது. அதை எல்லாம் தாண்டி தனது பணியை தொய்வின்றிச் செய்து வந்தார். ரிசர்சன்ஸ் என்ற இதழ் லண்டனில் இருந்து வருகிறது. இதன் ஆசிரியர் சத்தீஸ்குமார். அண்ணாச்சியின் நண்பராவார். இவர் உலகம் முழுமையும் பணமே இல்லாமல் சுற்றி வந்தவர். இந்த இதழ் உலகின் முன்னணி மாற்றுச் சிந்தனையாளர்கள் எழுதுகின்ற இதழாகும். அவர் அறிமுகம் செய்த பின்னர் அந்த இதழ் எனக்கு இப்பொழுதும் வந்து கொண்டிருக்கிறது. இணையம், செல்போன் வராத காலங்களில் அவர் எழுதிய கடிதங்கள் பொற்குவை போல உள்ளன. அமெரிக்கா சென்றபோதுகூட அங்கிருந்து கடிதம் எழுதியுள்ளார். நடக்க சிரமப்பட்ட நிலையிலும் நாங்கள் தொடங்கியுள்ள பொதிகை வாழ்வூர் என்ற கூட்டுப் பண்ணைத் திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அது மறக்கமுடியாத நிகழ்வு. அந்த முயற்சியைப் பற்றி கட்டுரை ஆங்கிலம், தமிழ் இரண்டு இதழ்களிலும் கொண்டு வந்தார். எந்த ஒரு புதிய நன்முயற்சிக்கும் உடனடியாக தோள் கொடுப்பது அவரது இயல்பு. வாரம் ஒரு முறை தொலைபேசியில் அழைத்து கவனமாக இருங்கள் வெளியே செல்ல வேண்டாம், கொரானா தீவிரமாகத் தெரிகிறது என்பார். இன்று அவரை அந்தக் கொரானாவே கொண்டு சென்றுவிட்டது. அவருடன் நான் கொண்ட நட்பு எனது வாழ்வின் பெரும் பேறு என்றே கருதுகிறேன். காந்திய உலகிற்கு மாபெரும் இழப்பு என்ற போதிலும் என்னுடைய ஞானத்தந்தையான அவரின் இழப்பு எனக்குத் தனிப்பட்ட முறையில் தாங்க முடியாத பேரிழப்பு.

கருத்துகள்