படித்ததில் பிடித்தது! கவிஞர் இரா .இரவி ! அர்த்தமுள்ள கண்ணதாசன் நெல்லை சு.முத்து

படித்ததில் பிடித்தது! கவிஞர் இரா .இரவி ! அர்த்தமுள்ள கண்ணதாசன் நெல்லை சு.முத்து சரியாக 60 ஆண்டுகளுக்கு முன்னால், மார்ச் 16, 1961 அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படம் -பாவ மன்னிப்பு. இந்தத் திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்து, சிறுவயதிலேயே ஒரு இஸ்லாமியரால் வளர்க்கப்பட்டு, இளைஞரான பின் பாடுவதான ஓர் பாடல். வளர்ப்பால் இஸ்லாமியரான சிவாஜியின் கதாபாத்திரம், பிறப்பால் ஒரு இந்து என்பதால் அவரை அறியாமலேயே அவர் நாவில் "ஓம்" என்று ஒலிப்பதாக- "எல்லோரும் கொண்டாடு'வோம்'; அல்லாவின் பெயரை சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி, எல்லோரும் கொண்டாடு'வோம்'; எல்லோரும் கொண்டாடு'வோம்" என்று பாடல் முழுவதும் ஓம் ஓம் ஓம் என்றே வருவது போல் அமைத்திருப்பது கவிஞர் கண்ணதாசனுக்கே உண்டான தனிச்சிறப்பு. துவக்கத்தில், திராவிடர் கழகத்தில் இருந்த கண்ணதாசன், கருத்து வேறுபாட்டால் வெளியேறியதும் இதே ஆண்டு தான். ஆனாலும் தீர்க்கமான சிந்தனையாளர் என்பதில் சந்தேகம் இல்லை. எனது இலக்கிய குருநாதர் கலைமாமணி ஆ.மாதவன், எழுத்தாளர் சாண்டில்யனைக் காட்டிலும் எனது நூல்களைக் கூடுதலாக வெளியிட்ட வானதி/திருவரசு /கங்கை புத்தக நிலையத்தின் நிறுவனர் பதிப்புச் செம்மல் வானதி திருநாவுக்கரசு மற்றும் நண்பர் இராம.கண்ணப்பன் போன்றோர் என்னிடம் நேரில் தெரிவித்த கண்ணதாசன் குறித்த தகவல்கள் இருக்கட்டும். நான் அறிந்த பாவமன்னிப்பு தொடர்பான சில அர்த்தமுள்ள எண்ணங்களை இங்குப் பதிவிடுகிறேன். அது "பாவ மன்னிப்பு" படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். அதற்கான பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார் கண்ணதாசன். அப்போதுதான் இந்தத் தணிக்கைக்குழு பிரச்னை எழுந்தது. கோபத்தில் கொந்தளித்தார்கள் தணிக்கை அதிகாரிகள் ! "இல்லை . இந்த வரியை அனுமதிக்க முடியாது." "ஏன் ?" "கண்ணதாசன் எழுதிய அந்த வரி தவறு !" "எப்படி ?" "அது என்ன மதங்களைப் படைத்தான் என்று அவர் எழுதி இருக்கிறார் ? அதை மாற்றி எழுதித் தரச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் இந்தப் பாடலை அனுமதிக்க முடியாது." தணிக்கைக்குழு கண்டித்து அனுப்பிய பாடலை கண்ணதாசன் வாசித்துப் பார்த்தார் கவிஞர். "பறவையை கண்டான் விமானம் படைத்தான் பாயும் மீன்களில் படகினை கண்டான் எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான் எதனைக் கண்டான் மதம்தனைப் படைத்தான்." கண்ணதாசன் சொன்னார்: "சரியாகத்தானே எழுதி இருக்கிறேன். சென்சாரிடம் போய் சொல்லுங்கள்." தணிக்கைக்குழு மறுத்தது : "இல்லை. மதங்களைக் கடவுள் உருவாக்கினார். மனிதன் அல்ல." கண்ணதாசன் சிரித்தார். "இது என்ன வேடிக்கை ? சிவனோ விஷ்ணுவோ வந்து இந்து மதத்தை உண்டாக்கினார்களா ? அல்லது அல்லாஹ் வந்து இஸ்லாமிய மதத்தை உருவாக்கினாரா? இல்லையென்றால் பரமபிதா வந்து கிறிஸ்தவ மதத்தை படைத்தாரா? கடவுள்கள் பெயரை சொல்லி, மனிதர்கள் உருவாக்கியதுதானே அத்தனை மதங்களும் ? அதைத்தானே நான் எழுதி இருக்கிறேன் ?" தணிக்கைக்குழு திகைத்தது. ஆனாலும் 'ஈகோ' தடுத்தது. "இல்லை இல்லை. ஏற்றுக் கொள்ள முடியாது. மாற்றத்தான் வேண்டும்." கண்ணதாசன் தலையில் அடித்துக் கொண்டு, இப்படி மாற்றி எழுதிக் கொடுத்தார்: "எதனைக் கண்டான் பணம்தனைப் படைத்தான்." படத்தில்தான் சிவாஜி இப்படிப் பாடுவார். ஆனால் ஒரிஜினல் இசைத் தட்டில் 'மதம்தனை படைத்தான்'என்ற வார்த்தைதான் இருக்கிறது. கண்ணதாசன் அடுத்த பாடலை எழுதப் போய் விட்டார். "பாலிருக்கும் பழமிருக்கும், பசியிருக்காது பஞ்சணையில் காற்று வரும், தூக்கம் வராது." இங்கும் பிரச்சினை வந்தது. தணிக்கைக்குழு சீறியது. "அய்யய்யோ அபச்சாரம். என்ன இது கண்ணதாசன் இப்படி எல்லாம் எழுத ஆரம்பித்து விட்டார் ?" அப்படி என்ன எழுதி இருந்தார் கண்ணதாசன் ? "காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே!-அது வேதம் செய்த குருவை கூட விடுவதில்லையே." இந்த கடைசி வரியை நீக்கி விடச் சொன்னார்கள் தணிக்கை அதிகாரிகள். இப்போது பதிலுக்கு சீறினார் கண்ணதாசன் : "என்னய்யா இது ? மந்திரங்களில் சிறந்தது காயத்ரி மந்திரம். அதை எழுதிய விஸ்வாமித்திரரையே காதல் விடவில்லையே ? அதைத்தானே நான் எழுதி இருக்கிறேன்? என்ன ஆனாலும் சரி. எவர் சொன்னாலும் சரி. இதை நான் மாற்ற மாட்டேன்." படக் குழுவினர் கெஞ்சினார்கள்: "நீங்கள் சொல்வது சரிதான் கவிஞரே, ஆனால் படம் வெளி வர வேண்டுமே?" வேறு வழியின்றி வேத வரிகள் மாறின : "வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே!- அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே." பாவ மன்னிப்பு வந்தது. பாடல்களும் பிரபலம் ஆயின. ஆனால் அது கண்களில் மண்ணைத் தூவி, 'பாவ மன்னிப்பு' படப் பாடலில், இந்த ஒரு வரியை மட்டும் மாற்றாமல் அப்படியே விட்டு விட்டார் கண்ணதாசன். "மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்." இத்தகைய அனுபவங்கள் அடிக்கடி ஏற்பட்டதால் தானோ என்னவோ, ஒருமுறை இப்படி எழுதி இருந்தார் அவர் : "நான் இறந்த பிற்பாடு என்னையே நான் விமர்சனம் செய்துகொண்டால் இப்படித்தான் சொல்வேன்: முட்டாள்களிடையே வாழ்ந்துகொண்டிருந்த கெட்டிக்காரனொருவன், கெட்டிக்காரர்களோடு பழகத்தொடங்கி முட்டாளாக செத்துப் போனான்.” (நெல்லை சு.முத்துவுக்கும் கண்ணதாசனுக்கும் பிறப்பால் ஒரு பொருத்தம். இருவருமே ஆனி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தில் முத்து என்ற பெயரோடு, கவிஞர்களாகப் பிறந்தவர்கள்?)

கருத்துகள்