நேரு என்னும் வாசிப்பாளர்" நினைவு நாள் 27.05.2021. -மணிகண்ட பிரபு

நேரு என்னும் வாசிப்பாளர்" நினைவு நாள் 27.05.2021. -மணிகண்ட பிரபு "நம்மை யாரும் புறக்கணிக்காத அளவிற்கு நாம் வளர்வதற்கு அறிவு ஒன்றே அட்சயப் பாத்திரம் என்பார் இறையன்பு.இதற்கு முற்றிலும் பொருந்துபவர் பண்டித ஜவஹர்லால் நேரு. ஒரு நாடாளுமன்ற வளாகத்திலிருந்து கட்சியினருடன் வெளியேறும்போது ஒருவர் கேட்டார்.. பகல் முழுக்க எங்களுடன் இருக்கிறீர்கள்..அரசுப்பணி, கட்சிப்பணி என பல்வேறு அலுவல் இருக்கும்போது எப்போது படிக்கிறீர்கள் என கேட்டார்.அதற்கு நேரு நாள்தோறும் இரவு சில மணி நேரம் படிக்காமல் உறங்கமாட்டேன் என்றாராம். தனது வாழ்நாளில் பத்தரை ஆண்டுகள் சிறையில் கழித்தவர்.1930ம் ஆண்டு நைனி சிறையில் நேருவும்,அவரின் மனைவி மலாக்கா சிறையில் இருந்ததாலும் தன் மகளுக்கு 13வது பிறந்தநாளையொட்டி கடிதம் எழுதினார்.அதிலுள்ள தகவல்கள் மகள் இந்திராவை கவர்ந்ததால் மேலும் கடிதம் எழுதத் துவங்கினார். சிறையில் புத்தகம் இல்லையாயினும் சிறு வயதிலிருந்து தான் தான் சேகரித்த குறிப்புப் புத்தகங்கள் மூலம் கடிதமாய் எழுதினார். வரலாறு,தத்துவம்,அரசியல், வாழ்வியல் என எல்லாப் பகுதிகளையும் தழுவியதாய் உலக வரலாற்றை மகளுக்கு அறிமுகம் செய்வதாய் அது இருந்தது. இக்கடிதங்கள் மூன்று பகுதிகளாகத் தொகுக்கப்பட்டன *தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள் (Letters from a father to his daughter) *உலக வரலாறு(glimpses of world history) *தனியே இருவர்,சேர்ந்து இருவர் (Two alone,two together) இது தந்தை மகள் இருவரின் 535 கடிதங்களின் தொகுப்பாகும் #அலகாபாத்-நைனி சிறையிலிருந்து ஈன்று புறந்தருதல் தாய்க்கு கடனே; அவனை சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே எனும் சங்கப்பாடலுக்கு எடுத்துக்காட்டாய் மகளுக்கு முதலில் பிறந்தநாள் கடிதமாக அக்டோபர் 26-1930ல் எழுதினார்.முதல் கடிதத்திலேயே தான் உனக்கு உபதேசம் செய்யவில்லை எனத் துவங்கி யுவான் சுவாங்கை பற்றிக் கூறுகிறார்.அறிவைத்தேடி நாடு கடந்துவந்தவரை கூறி.."அறியாமை இருட்டிலே கிடந்து உழலும் மக்களின் மீது பிறந்த இரக்கத்தால் தன் தலையில் ஒளியை தூக்கிச் செல்கிறேன் என கூறும் யுவான் சுவாங்கை மேற்கோள் காட்டி கற்பதை நிறுத்தாதே., ஒவ்வொருவரிடமும் விவாதிக்கும் போது தான் உண்மை புலப்படும் என்கிறார். தன் நாட்டை மட்டும் தெரிந்துகொள்வது மடமை.உலக நாடுகளை பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும். ரஷ்யப்புரட்சி,பிரெஞ்சுப் புரட்சி, ஐரோப்பிய வரலாறு குறித்து சொல்லும்போது இந்தியாவின் தென் பகுதி திராவிட நாகரிகத்தையும், தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளின் தொன்மையான இலக்கியங்களை பற்றி கூறுகிறார். சீனாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் ஷாங் வம்சத்தின் ஆட்சியை வெறுத்த கி-ட்சே 5000 பேருடன் கிழக்கு திசை நோக்கிச்சென்று கொரியாவை அடைந்து அவரின் வம்சம் 900 ஆண்டுகள் ஆண்டதாக எழுதுகிறார்.பிறரிடம் எவ்வளவு வேண்டுமானாலும் கற்கலாம். ஆனால் ஒரு முடிவு எடுக்க வேண்டுமெனில் தகுந்த பயிற்சியும், அறிவையும் பெற வேண்டும் என்றார்.கன்பூசியஸ், லாவோட்சுவின் சிந்தனை குறித்தும், இந்தியாவில் புத்தமதத்தை தொடர்ந்து இந்து மதம் குறித்தும் பின் இந்தியாவை ஆட்சி செய்த வம்சத்தினர் குறித்தும் அறிமுகம் செய்துள்ளார். #உலகவரலாறு உலக அறிவை மகளுக்கு புகட்ட நினைத்த நேரு பாரசீக,கிரெக்க, ரோம் வரலாற்றினை கூறுகிறார். கிப்பன் எழுதிய ரோம சாம்ராஜ்ய சிதைவும் வீழ்ச்சியையும் படிக்குமாறு வேண்டுகிறார்.ஈராயிரம் வருட ஜப்பானிய வரலாறையும் மக்களையும் குறித்து சுருக்கமாய் எழுதியுள்ளார். இஸ்லாமிய மதத்தோற்றமும், அரேபியர்களின் வெற்றிகளை பதிவு செய்யும்போது,அரேபிய யாத்ரிகரான அல்பெருனி குறித்தும், அரேபியர் இந்தியாவுக்கு வந்த வரலாறையும்,அமெரிக்க மயா நாகரிகமும்,சிலுவைப் போரின் காரணம் மற்றும் விளைவுகளை ஆய்வு நோக்கில் விவரித்துள்ளார். ரஷ்யா,சீனாவைவிட குறைவாகவே அமெரிக்க குறித்து கூறியுள்ளார். பிரதமர் பொறுப்பேற்ற இரு வருடம் கழித்தே அவரின் அமெரிக்க பயணம் அமைந்தது.தான் ஒரு சோசலிஸ்ட் என்பதில் உறுதியாய் இருந்துள்ளார். ஒவ்வொரு நாட்டிலும் தோன்றிய அரசியல் மாற்றங்களும்,அதன் முடிவும் ஏன் அவ்வாறு வீழ்ந்தது எனும் காரணத்துடன் கூறுகிறார். ரோமில் பாம்பே மற்றும் சீசரின் போட்டியும் அங்கு நடந்த சம்பவத்தையும் சொல்லும் போது தொடர்ச்சியான வரலாற்றை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. சோசலிசத்தையும், முதலாளித்துவத்தை நீ பின்னாளில் படிக்க கேட்க நேரிடும் என ஒரு கடிதத்தில் முடித்துள்ளார். #பரில்லி ஜில்லா சிறையிலிருந்து இந்தியாவின் தொன்மையான நாகரிகம் குறித்தும் இந்தியாவின் மீது நிகழ்ந்த படையெடுப்பை பற்றி விரிவாக ஒவ்வொரு மன்னர் குறித்தும் கடிதம் எழுதியுள்ளார். தென் இந்திய அரசர்களை விவரித்து சோழ சாம்ராஜ்யத்தையும் ராஜேந்திர சோழன் குறித்து சிலாகித்துள்ளார். கோரியின் வெற்றி 1192ல் முஸ்லீம் ஆட்சிக்கு அடிகோலியது. தகுதியுடைய புத்தகங்களை நீ கவனத்துடன் படிக்க வேண்டும்.நல்ல நூல்களை தேர்ந்தெடுப்பது சாதாரணது அல்ல.அதனை நீ பழகிக்கொள்ள வேண்டும்.தனக்கு தன் தந்தை அளித்த பொக்கிஷமானது மூன்று 1.உலக சரித்திரம்,2.சுயசரிதை 3.கண்டுணர்ந்த இந்தியா.இவை தான் சிறுவயதிலிருந்து என்னுடம் இருக்கும் நண்பர்கள் என்றார் இந்திரா. #விரிந்த வாசிப்பு நேரு ஒரு பரந்த வாசிப்பாளர். பத்துக்கும் மேற்பட்ட அயல்நாட்டு இதழ்களை படித்தார்.தனது அறிவாற்றலின் மூலம் முற்போக்கு நாடாக்க விரும்பினார்.அவர் விரும்பியிருந்தால் வரலாற்றை சிறுது மாற்றியும் சொல்லியிருக்கலாம்..ஆனால் அவ்வாறு செய்யாது உள்ளது உள்ளபடி படிக்க படிக்க சுவாரஸ்யமாக நம் தலைமுறைக்கு கொடுத்துள்ளார்.இத்தகைய நவீன இந்தியாவின் சிற்பி 1964 மே 27ம் தேதி காலை காலமானார். ஒவ்வொரு தந்தையரும் பழங்கால வரலாற்றை,நினைவுகளை தம் குழந்தைகளுக்கு புகட்ட வேண்டுமென உணர்த்தியிருக்கார்.அறிவார்ந்த கருத்துகளையும் சரியான வரலாறையும் சொல்லிக்கொடுக்கும்போது நாளைய இந்தியா குழப்பமின்றி இருக்கும் என வழிகாட்டி சென்றுள்ளார் ஜவஹர்லால் நேரு. -மணிகண்ட பிரபு

கருத்துகள்