புத்தகத்தால் என்ன பயன் ?! (வீடில்லா புத்தகங்கள், எஸ் ராமகிருஷ்ணன்)

புத்தகத்தால் என்ன பயன் ?! (வீடில்லா புத்தகங்கள், எஸ் ராமகிருஷ்ணன்) நேரம்தான் விரயம் ஆகிறது என அதன் அருமை தெரியாதவர்கள் புலம்புகிறார்கள் . ஆனால் , சரியான ஒரு புத்தகம் ஒருவரின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும் . அதிலும் குறிப்பாக , ஆசிரியர் ஒருவர் கைக்குச் செல்லும் புத்தகம் அவருக்குப் பிடித்த மானதாக இருந்துவிட்டால் , எத்தனையோ மாணவர் களுக்கு அது தூண்டுகோலாக அமைந்துவிடும் . இப்படியோர் அனுபவத்தை நான் நேரடியாகவே அறிந்திருக்கிறேன் . நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக எனது நண்பரான அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவருக்குப் பிறந்த நாள் பரிசாக , ' பகல் கனவு ' என்ற ' ஜிஜுபாய் பதேக்கா ' எழுதிய புத்தகத்தைக் கொடுத்தேன் . ஒரு வார காலத்துக்குப் பிறகு அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது . உணர்ச்சிவசப்பட்ட நிலையில் , " இதுபோன்ற புத்தகத்தை நான் வாசித்ததே இல்லை . இத்தனை வருஷமாக நானும் ஓர் ஆசிரியராக வாழ்ந்திருக்கிறேன் . ஆனால் , மாணவர்களிடம் இப்படிப் பயிற்றுவிக்கும் முறை எதையும் செய்துபார்க்கவில்லையே என்ற குற்றவுணர்ச்சியை இந்தப் புத்தகம் ஏற்படுத்தி விட்டது . என்னைச் சுயபரிசோதனை செய்து கொள்ள இந்தப் புத்தகம் உதவியது . நிச்சயம் தானும் ' ஜிஜுபாய் பதேக்கா வைப் போலச் செயல்படுவேன் " என்றார். அவர் சொன்னதை நிஜமாக்குவதைப் போல இரண்டு மாதங்களுக்குப் பிறகு , கூரியரில் ஒரு பார்சலை அவர் அனுப்பியிருந்தார் . திறந்து பார்த்தேன் . அத்தனையும் அவருடைய மாணவர்கள் எழுதிய கதைகள் . ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆளுக்கு ஒரு கதையை ஒரு பக்க அளவில் எழுதியிருந்தார்கள் . மாணவர்களின் கையெழுத்தில் அந்தக் கதைகளை வாசித்தபோது சிலிர்த்துப் போனேன் . ஒரு மாணவன் , சைக்கிளின் டயர் அழுத்திப் போன மைதானத்துப் புல்லின் வலியை ஒரு கதையாக எழுதியிருந்தான் . ஒரு மாணவி , பறக்க ஆசைப்பட்ட தவளையைப் பற்றி ஒரு கதை எழுதியிருந்தாள் . இன்னொரு மாணவன் , உடல் இளைப்பதற்காக ஒரு யானை எப்படிச் சாப்பிடாமல் கிடக்கிறது என்பதைப் பற்றி எழுதி யிருந்தான் . சின்னஞ்சிறார்களின் மனதில்தான் எத்தனை வளமான கற்பனைகள் . அவரைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டி னேன் . சந்தோஷமாகத் தனது அனுபவங்களைச் சொல்லத் தொடங்கினார் . " இப்போதெல்லாம் நான் வகுப்பறைகளில் கதைகள் சொல்கிறேன் . படித்த புத்தகங்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்கிறேன் . வாரம் ஒருநாள் வன உலா அழைத்துப் போய் தாவரங்களை , பறவைகளை அடை யாளம் காட்டுகிறேன் . எளிய அறிவியல் சோதனைகளைக் கூட்டாகச் செய்து விளையாடுகிறோம் . ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு நோட்டு வாங்கிக் கொடுத்து , அவன் எதை எழுத விரும்பினாலும் அதில் எழுதச் சொல்லியிருக்கிறேன் . நிறைய மாணவர்கள் ஆர்வமாக தான் படித்த , கேட்ட , பாதித்த விஷயங்களை நோட்டில் எழுதிவந்து காட்டுகிறார்கள் . அதைப் பாராட்டும்போது அவர்கள் அடையும் சந்தோஷம் அளவில்லாதது . ஆசிரியர் என்பவர் வெறும் பாடம் நடத்தும் மனிதரில்லை ; அது மகத்தான உறவு என்பதை உணர்ந்து கொண்டேன் ” என்றார். இதுதான் நண்பர்களே , ஒரு புத்தகம் ஆசிரியர் மனதில் உருவாக்கும் மகத்தான மாற்றம்...!

கருத்துகள்