ுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இறுதி ஊர்வலம்! கவிஞர் முருகு சுந்தரம்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இறுதி ஊர்வலம்! கவிஞர் முருகு சுந்தரம் 21.4.64 சென்னையிலிருந்து ஒரு கடிதம் வந்தது. சென்னையிலிருந்து என் தம்பி இளங்கோவன் எழுதியிருந்தான். மாரடைப்பினால் தாக்கப்பட்டுச் சென்னை அரசாங்க மருத்துவமனையில் பாவேந்தர் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அன்று இரவு சென்னை செல்வதற்கு வேண்டிய முயற்சிகளில் நான் ஈடுபட்டேன். எதற்கும் மாலைச் செய்தித் தாளைப் பார்த்து விடலாம் என்று எண்ணினேன். சேலம் மாலைமுரசில் பாவேந்தர் இறப்பைப் பற்றிய செய்தி கொட்டையெழுத்தில் அவர் படத்தோடு போடப்பட்டிருந்தது. அடக்கம் செய்வதற்காக அன்று மாலை அவர் சடலம் ‌புதுச்சேரிக்குக் கொண்டு செல்லப்படும் என்ற செய்தியும் வெளியாகியிருந்தது. உடனே கடலூர் மார்க்கமாகச் செல்லும் புகைவண்டியில் ஏறிப் புதுவை புறப்பட்டேன். அடுத்த நாள் காலை எட்டு மணியளவில் புதுவையை அடைந்தேன். புதுவை நகரமே வெள்ளக்காடாக இருந்தது. பெருமாள் கோயில் தெருவில் எள் விழ இடமில்லை. பாவேந்தர் வீடு தொட்டிக்கட்டு வீடு. நடுவில் இருந்த தொட்டியில் தென்வடலாகப் பாவேந்தர் படுக்க வைக்கப்பட்டிருந்தார். அவரைச் சுற்றி மாலைகளும் மலர் வளையங்களுமே தென்பட்டன. மக்கள் கூட்டம் ஓயாமல் உள்ளே வருவதும் போவதுமாக இருந்தது. பாவேந்தரின் மனைவியாரும் மக்களும் காலடியில் அமர்ந்து அவர் பாதத்தை கண்ணீரால் நனைத்துக் கொண்டிருந்தனர். நடிகர் எம்.ஆர்.ராதா உள்ளே வந்து பாவேந்தருக்கு மாலையணிவித்துத் தம் இறுதி வணக்கத்தைச் செலுத்திக் கொண்டிருந்தார். பாவேந்தர் மகன் கோபதி அருகிலிருந்த சுவரில் தலையை மோதிய வண்ணம் "பாவிகளா! சினிமா ஆசையைக் காட்டி எங்கப்பாவை கொன்னுட்டீங்களே!" என்று கதறிக் கொண்டிருந்தார். கவிஞர் பொன்னடி அருகிலிருந்து கோபதிக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். தமிழ்நாடு- புதுவை மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகளும் , கவிஞர்களும் , புலவர்களும் பெருமாள் கோயில் தெருவெங்கும் நின்று கொண்டிருந்தனர் ‌. பாவேந்தரின் இறுதி ஊர்வலம் அவர் வீட்டிலிருந்து காலை பத்து மணிக்குத் துவங்கியது. மகாகவி பாரதி திருவல்லிக்கேணியில் இறந்தபோது அவரை அடக்கம் செய்வதற்காகப் புறப்பட்ட ஊர்வலத்தில் முப்பது பேர் தாம் கலந்து கொண்டதாக ஓர் அன்பர் செய்தித்தாளில் ஒருமுறை வருந்தி எழுதிக் கண்ணீர் வடித்திருந்தார். ஆனால், பாவேந்தரது இறுதிப் பயணத்தில் 10,000 பேர் கலந்து கொண்டார்கள். ஊர்வலம் ஒரு மைல் தூரம் இருந்தது. பாவேந்தரின் எழுத்துச் சாட்டைக்கு அடிக்கடி இலக்கான புதுவை முதலமைச்சர் குபேர் வழியில் பாவேந்தருக்கு மாலையிட்டு வணங்கினார். வேறு இரண்டு புதுவை அமைச்சர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். கூட்டம் நடுப்பகல் 12 மணிக்கு மயானத்தை அடைந்தது. எந்தச் சடங்குகளும் இல்லாமல் பாவேந்தர் அடக்கம் செய்யப்பட்டார். பாவேந்தர் அடக்கம் செய்யப்பட்டபோது கவிஞர் பொன்னடியான் கையில் ஒரு பெரிய மாலையுடன் நின்று கொண்டிருந்தார். பாவேந்தர் சடலம் குழியில் இறக்கப்பட்ட போது மிகவும் கவனமாகக் கையிலிருந்த மாலையைப் புதைகுழியில் போட்டார். நான் அருகில் நெருங்கிக் கேள்விக்குறியோடு அவரைப் பார்த்தேன். "பாவேந்தரின் அன்புக்குரிய ஓர் அம்மையார் சென்னையில் இம்மாலையை என் கையில் கொடுத்து மறக்காமல் அவர் உடலோடு இதையும் சேர்த்துப் புதைக்குமாறு வேண்டிக் கொண்டார்" என்று கூறினார் பொன்னடி. பாவேந்தர் அடக்கம் செய்யப்பட்டதும் அம்மயானத்திலேயே ஓர் இரங்கற் கூட்டமும் நடைபெற்றது. யாரோ ஓர் புதுவைப் பிரமுகர் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். திருவாளர்கள் ம.பொ.சி., ஈ.வெ.கி.சம்பத், கவி கா.மு.செரீப், இரா.நெடுஞ்செழியன், மு.கருணாநிதி, என்.வி.நடராசன், கண்ணதாசன், சுப்பையா (பொதுவுடைமைக் கட்சித் தலைவர்), குத்தூசி குருசாமி ஆகியோர் பேசினர். அவ்வை திரு.டி.கே.சண்முகம் 'துன்பம் நேர்கையில் , 'உலகப்பன்' ஆகிய பாவேந்தர் பாடல்களைப் பாடினார். பாவேந்தரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய மயிலை லோகநாதன் என்ற தி.க. நண்பர் மாரடைப்பால் உயிர் துறந்தார். ( குறிப்பு; கவிஞர் முருகு சுந்தரம் பாவேந்தர் பாரதிதாசன் மீது மிகுந்த பற்று கொண்டவர். சென்னையில் தமது இறுதிக்காலத்தில் பாரதிதாசன் வாழ்ந்து வந்த போது அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பை பெற்றார். அவரோடு நடத்திய உரையாடல்களை நாட்குறிப்பு ஒன்றில் எழுதி வந்தார். இதனைத் தொகுத்து 1979இல் ' பாவேந்தர் நினைவுகள்' என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். பின்னர் பாரதிதாசனோடு பழகிய ஆளுமைகளை நேரில் சந்தித்து, அவர்களிடமிருந்து கட்டுரைகளைப் பெற்று, அவற்றை "அரும்புகள் மொட்டுகள் மலர்கள்" பெயரில் வெளியிட்டார். பின்னர் 'குயில் கூவிக் கொண்டிருக்கும்', 'புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்' ஆகிய இரண்டு நூல்களை வெளியிட்டார். 1991இல் பாரதிதாசன் நூற்றாண்டை முன்னிட்டு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் கவிஞர் முருகு சுந்தரம் பெயரில் வெளி வந்த நான்கு நூல்களையும் ஒன்றாகத் தொகுத்து "பாவேந்தர் ஒரு பல்கலைக் கழகம்" என்ற பெயரில் வெளியிட்டது. Tamilthesiyan.wordpress.com

கருத்துகள்