மின்னல் முகவரி நூல் ஆசிரியர் : கவிஞர் சு. சேகர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

மின்னல் முகவரி நூல் ஆசிரியர் : கவிஞர் சு. சேகர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி நூல் வெளியீடு : அன்புநிலா பதிப்பகம், 3, பழைய பள்ளிக்கூட வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி – 604 408. பக்கங்கள் : 80. விலை : ரூ.50. ***** மின்னல் முகவரி நூலின் பெயரே வித்தியாசமாக உள்ளது. மூன்றாவது வரியில் ஒரு மின்னல் வெட்டு தான் ஹைக்கூ. முனைவர் செ.சி.இரத்தினகுமார், முனைவர் அ.கலைநேசன், முனைவர் கோ.கிருஷ்ணன், முனைவர் க.சேகர், முனைவர் சி.புகழேந்தி, முனைவர் வே.பாலாஜி, முனைவர் வெ. நிர்மலா, உதவிப்பேராசிரியர் இ. இரஃபிக், முனைவர் கி. நடராஜன், இனிய நண்பார் கவிஞர் மு.முருகேஷ் ஆகியோர் அணிந்துரையும் வாழ்த்துரையும் வழங்கி உள்ளனர். வரவேற்பு தோரணங்களாக வரவேற்கின்றன. இந்நூல் ஆசிரியர் கவிஞர் சு. சேகர், அம்மாவிற்கு காணிக்கையாக்கி உள்ளார். பாராட்டுகள். புளிக்காத வரை இனிப்பாகவே காதல்! காதல் இனிப்பானது தான். ஆனால் ஊடல் வந்து பிரிவு வந்து கசக்காத வரை காதல், இனிமை என்பதை அழகாக உணர்ந்து எழுதி உள்ளார். தொலைக்காட்சித் தொடரில் தொலைந்து போனார்கள் குடும்பப் பெண்கள்! போலித்தனமான நாடகங்களை உண்மை என நம்பி அதற்கு அடிமையாகி அதனுள் மூழ்கி விடும் அவலம் நாட்டில் அரங்கேறி வருவது உண்மை தான். அதனை அறிந்து வடித்த ஹைக்கூ நன்று. அசிங்கமாக கலந்து கொண்டார்கள் அழகிப் போட்டிக்கு! உண்மை தான். எது உண்மை அழகு என்பது புரியாமல் ஆபாசத்தை அரங்கேற்றி அழகிப் போட்டி நடத்தி வருபவர்களுக்கு கண்டனத்தை நன்கு பதிவு செய்துள்ளார். ஏழைகளால் வாசிக்க முடியவில்லை விலைவாசி! விலைவாசி ஏறிக்கொண்டே செல்கின்றது. ஆனால் வருமானமோ குறைந்து கொண்டே வருகின்றது. ஏழைகள் வாழ வழியின்றி இன்னலில் தவித்து வருகின்றனர். விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டிய ஆள்வோர் கைகட்டி வேடிக்கைப் பார்ப்பது வேதனை. கல்லுக்கும் இறக்கை முளைத்தது கலவரத்தில்! கலவரங்களில் கற்கள் முக்கிய அங்கம் வகித்து பறந்து பறந்து சேதப்படுத்துவதைப் பார்த்து இறக்கை முளைக்கின்றது. கற்களுக்கு என்று எள்ளல் சுவையுடன் வடித்த ஹைக்கூ நன்று. இனிப்பும் கசப்பும் வாழ்க்கை வேப்பமரத்தில் தேன்கூடு! இன்பமும் துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. மேடு பள்ளம் நிறைந்தது தான் வாழ்க்கைப் பயணம்! கசக்கும் வேப்பமரத்தில் இனிக்கும் தேனை சேகரிக்கும் தேன்கூட்டைக் காட்டி உணர்த்தியது சிறப்பு. வெற்றி தோல்வி தெரியாமல் ஓட்டம் கடிகார முள்! கடிகார முள் சோர்வு அடைவதில்லை. ஓய்வெடுப்பதில்லை. விரக்தி கொள்வதில்லை. கவலையின்று தன் கடமையை சரிவர செய்திடும் கடிகார முள் மனநிலையை மனிதர்கள் பெற்றால் வாழ்க்கை இனிக்கும், சிறக்கும் என்பது உண்மை. எத்தனையோ செதுக்கியும் இன்னும் சிலையாகாமல் கல் மனசு! அம்மா, அப்பா குடிக்காதே என்றும், உடல்நலத்திற்கு கேடு என்றும், திறமையை வீணடிக்கும் என்றும் அறிவுரை தொடர்ந்து நல்கிய போதும் செவிமடுக்காமல் தொடர்ந்து குடித்து, உடல்நலக்கேடு விளைவித்துக்கொள்ளும் இளைஞனை நினைவூட்டியது இந்த ஹைக்கூ. அழுகை கேட்டு சிரித்தார்கள் சுகப்பிரசவம்! குழந்தை பிறந்ததும் அழுகைச் சத்தம் கேட்டதும் எல்லோரும் மகிழ்ச்சியில் சிரிப்பார்கள். அந்த நேரம் மட்டும் குழந்தையின் அழுகையை எல்லோரும் விரும்புவார்கள். அழாவிட்டால் அடித்து அழ வைப்பார்கள். பிறந்தவுடன் அழ வேண்டும் என்பது வாழ்வியல் நியதி. ஹைக்கூ நன்று. சுகப்பிரசவம் என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி நிலவுவது உண்மையே. கோயில் திருவிழாவிற்குப் பூச்சூடிப் பொட்டு வைத்து விடும் வெள்ளாடு! இந்த ஹைக்கூ படித்தவுடன் என் நினைவிற்கு வந்தது வாக்காளன் தான். ‘’எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’’ வாக்களியுங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடி வாக்குகள் வாங்கி, வாங்கியவர் மன்னராகி விடுவார். வாக்களித்தவர்கள் மக்கள், மாக்கள் ஆகிவிடுவர். வெறும் கையோடு அம்மா மகளுக்கு வளைகாப்பு! ஏழை மட்டும் நடுத்தரக் குடும்பங்களில் மகளுக்கு வளைகாப்பு என்றவுடன் வரும் செலவுகளை சமாளிக்க அம்மா தன் வளையல்களை விற்றோ அல்லது அடகு வைத்தோ விழா நடத்த வேண்டிய நிலை தான் இன்று. மூங்கில் காட்டுக்குள் முகவரியைத் தேடி காற்று! ஜப்பானிய ஹைக்கூவைப் போல இயற்கையை பாடி காற்றையும் மூங்கிலையும் மனக்கண்ணில் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார் நூல் ஆசிரியர் கவிஞர் சு. சேகர், பாராட்டுகள். பல்வேறு சிந்தனைகளை மின்னல் வெட்டாக வெட்டி, மின்னல் முகவரி தந்துள்ளார், பாராட்டுகள். வாழ்த்துகள், தொடர்ந்து எழுதுங்கள். இந்த நல்ல நூலை எனக்கு பரிசளித்த கருவூலத்துறை பொதுமேலாளர் முனைவர் முத்துப்பாண்டியன் அவர்களுக்கு நன்றி. -- .

கருத்துகள்