படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! நான் ரசித்த கண்ணதாசன் கவியரசர் கண்ணதாசன் ஒரு கவிதைக் கடல். அந்தக் கடலின் வனப்பைக் கரையிலிருந்து பார்த்துப் பிரமிக்கும் ஒரு சிறு துளி நான். கண்ணதாசனின் பாடல்கள் என்னும் அழகிய வனத்தினுள் என்னை நான் வேண் டுமென்றே தொலைத்து மகிழும் கணங்கள் பல. அவற்றில் சிலவற்றை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எழுந்த ஆசையினால் முகிழ்த்த படைப்பு இது. வீரஅபிமன்யு என்னும் படத்தில் ஏ.வி.எம் ராஜன், காஞ்சனா நடிப்பில் இன்னிசைக் குரலோன் சிறீனிவாஸ் அவர்களும், இசைக்குயில் சுசிலா அவர்களும் இணைந்து பாடிய கவியரசரின் வரிகளை நான் கண்மூடிக் கேட்டு ரசிக்கும் கணங்கள் பல. தமிழை அவர் கையாண்டிருக்கும் விதம், ஒவ்வொரு வரிக்கும் அவர் கொடுத்திருக்கும் விதம், விதமான அர்த்தங்கள். ஒரு காதலனும் காதலியும் கணவன், மனைவியாகித் தமது காதலைச் சொல்லும் கண்ணியமான நாகரீகம் அதற்கு எமது கவியரசரின் கற்பனையில் உதித்த சொல்வளம். அப்பப்பா !அடுக்கிக் கொண்டே போகலாம். பாடலைப் பார்ப்போமா ? பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் அன்று உனைத்தேன் எனநான் நினைத்தேன் அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன் காதல் என்பது இனிப்பல்லவா ? அதுவும் கண்களால் சம்பாஷித்து, இதயங்கள் இடம்மாறிக் கொள்ளும் அந்த இனிமையான நிகழ்வைத் தேனுக்கு ஒப்பிடுவது நியாயம் தானே ! அதிலும் எமது கவியரசரின் தேன் கூட்டில் இருந்து வந்த தேன் எத்தனை வகைப்பட்டவை ? பார்த்த்"தேன்", ரசித்"தேன்" பக்கத்தில் அழைத்"தேன்" அன்று உனைத்"தேன்" என நான் நினைத்"தேன்" அந்த மலைத்"தேன்" இதுவென மலைத்"தேன்" மலயிலிருந்து பெறப்படும் அந்த விஷேசமான தேனுக்கு ஒப்பான இனிமையை இதயத்தில் தோற்றுவிப்பதைப் போலிருக்கிறது என அக்கணவன் மலைத்தானாம். "மலைத்தேன்" என்னும் அந்த இனிய சொல்லை எத்தனை லாவகமாகப் பயன்படுத்தியிருக்கிறார் இந்தக் கவிராயர். காதலின் அந்த இனிமையான உறவுகளுக்கு அவன் உளங்கவர்ந்த அந்தக் காதலி என்ன சொல்கிறாளாம் பாருங்கள், அவன் பார்வை இவள் மீது வீச இவளும் கூட ஒரு கணம் மின்னல் என அவனைப் பார்த்து விட்டுத் தரையைப் பார்த்துச் சிரித்திருப்பாள் போலும். அது மட்டுமா? உள்ளத்தை அவனிடம் கொள்ளை கொடுத்து விட்டு அவனுக்கு அருகில் வரத் துடித்தாளாம் .... காதல் உணர்வை இத்தனை துல்லியமாக கவியரசர் உருவகப்படுத்தியிருக்கிறார் பாருங்கள். காதலை "மலைத்தேனுக்கு" ஒப்பிட்டு" மலைத்து நின்ற அக்காதலனையே "மலைத்தேனாக" எண்ணி மலைத்து விட்டாளாம் போங்கள் ! பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன் அன்று உனைத்தேன் எனநான் நினைத்தேன் அந்த மலைத்தேன் இவரென மலைத்தேன் பார்த்"தேன்" சிரித்"தேன்" துடித்"தேன்" உனைத்"தேன்" நினைத்"தேன்" மலைத்"தேன்" காதலியை மனைவியாக அடைந்தவன் கொண்ட இன்பத்தின் அளவை கவியரசரை விட இனிமையாக யாரால் கூறிவிட முடியும்? கொடியில் உருவாகிய இன்பத்தேனாகிய அவள் அவன் பருகக்கூடிய குடித்தேனாம். தான் சும்மா விடுவானா? அப்படியே அத்தேனை அள்ளியெடுத்து ஒரு படி அருந்தி ஆனந்தம் அடைந்து விட்டானாம் ! அதுவும் எப்படி அருந்தினானாம்? ஒருதுளி கூடச் சிந்தி விடக்கூடாதே என்னும் பரிதவிப்புடன் அருந்திக் களித்து விட்டானாம். அந்த களிப்பு எப்படி நடந்தது? அவள் அவனது கைகளில் விழுந்து விட அவன் அவளை அணைத்து அழகினை ரசிக்கும்படி நடந்ததுவாம். எப்படியிருக்கிறது ஒரு காதல் வயப்பட்ட கணவன் மனைவியின் இன்பக் களிப்பு. அதை எப்படி விபரித்து எம்மைக் கற்பனைக் கடலில் ஆழ்த்துகிறார் எமது கவியரசர். கொடித்"தேன்" இவள்எங்கள் குடித்"தேன்" எனஒரு படித்"தேன்" பார்வையில் குடித்"தேன்" துளித்"தேன்" சிந்தாமல் களித்"தேன்..." ஒரு துளித்"தேன்" சிந்தாமல் களித்"தேன்" கைகளில் அணைத்"தேன்"... அழகினை ரசித்"தேன்" அந்த நாயகியின் பதிலென்ன கேட்போமா? பெண்மையை மலருக்கு ஒப்பிடுவதுதானே எமது இகக்கியங்களின் மகிமை, அவள் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? மலரில் இருக்கும் தேன் எவ்வளவு சுவையானது அது போல அவளும் இன்பச்சுவையுடன் கூடிய அழகினப் பெற்று வளர்ந்தாளாம். யாருக்காக வளர்ந்தாள்? அவனுக்காக மட்டுமே வளர்ந்தாள். மலர்கள் அரும்பாகி, மலர்ந்ததுவும் மண்ம் வீசுவது போல அவளும் பருவத்தில் மணந்து அவனுக்காக மண்ம் வீசும் மலரானாள். மலர்களின் வாசம் யாருக்காக? அதிலூறும் தேனைச் சுவைக்கப்போகும் வண்டுக்காக மட்டும் தானே ! காதலில் விழுந்து, காதலித்தவனையே மணாளாக அடைந்ததும் சும்மா இருப்பாளா, எடுத்தாள், கொடுத்தாள், எடுத்ததையும், கொடுத்ததையும் சுவைத்தாளாம். அடுத்த வரிதான் எமது கவியரசரின் அற்புத ஆற்றலுக்கு எடுத்துக்காட்டு. இனித்"தேன்" இல்லாதபடி கதை முடித்"தேன்". அதிலே பாருங்கள் இவரின் இவ்வரி இரண்டு அர்த்தங்கள் பெற்று மிளிர்கிறது . ஒன்று அவள் அவனுக்கு "இனித்தாளாம்" , ஒருவருமே இனிமேல் காணமுடியாத வகையில் இன்பமுற்று வகையில் இக்கதையை முடித்தாளாம். மற்றையது இனித்தேன் இல்லை முடிந்து விட்டது என்கிற வகையில் அவன் அவளைச் சுவைக்கும் படியாய் அந்நிகழ்வினை முடித்தாளாம். அப்பப்பா ! இதுதான் கண்ணதாசன், இவர்தான் தமிழ் மக்கள் வாழ்வினிலே என்றுமே காணப்பெறமுடியாத ஒரு பொக்கிஷம். மலர்த்"தேன்" போல்நானும் மலர்ந்"தேன்" உனக்கென வளர்ந்"தேன்" பருவத்தில் மணந்"தேன்" எடுத்"தேன்" கொடுத்"தேன்" சுவைத்"தேன்" இனித்"தேன்" இல்லாதபடி கதை முடித்"தேன்" அவனின் நிலை என்ன? நிலவுக்கு நிகரான சுகம் பெற நினைத்து அவன் உலகத்தையே அப்போது மறந்து விட்டான். நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைந்"தேன்" உலகத்தை நானின்று மறந்"தேன்". சரி அவளின் நிலை என்ன ? உலகத்தை மறந்து விட்டாள், உறக்கத்தை மறந்து விட்டாள். தன் கணவனுடன் ஈருடல் ஓருயிரெனக் கலந்து விட்டாள் உலகத்தை மறந்"தேன்" உறக்கத்தை மறந்"தேன்" உன்னுடன் நானொன்று கலந்"தேன்" அன்பான நெஞ்சங்களே கண்களை மூடிக் கொண்டு கவியரசரின் இப்பாடலிக் கேட்கும் போது தமிழ் என்னும் அந்த அமுத வெளத்தினுள் காதல் பாடகில் மிதக்க விட்டு எம்மை ஆனந்தத்தில் ஆழ்த்தி விடுகிறார். எமது கவியரசரின் மனக்கூட்டிலே தமிழ் என்னும் குழவிகளால் விளைந்த "தேன்"கள் எத்தனை பார்த்தீர்களா? அடுத்தொரு கவியரசரின் முத்துடன் சந்திக்கும் வரை அன்பன் சக்தி சக்திதாசன்

கருத்துகள்