பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள்! நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள்! நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! கவிஅரசன் பதிப்பகம், 31, சாய் நகர் இணைப்பு, சின்மயா நகர், சென்னை-92. பக்கங்கள் : 752, விலை : ரூ.999. மின்னஞ்சல்: vavamusethuraman35@gmail.com ***** ‘கவிக்கோ‘’’ என்றால் அப்துல் ரகுமான், ‘பெருங்கவிக்கோ‘’’ என்றால் வா.மு. சேதுராமன் என்பது நாடறிந்த உண்மை. பெருங்கவிக்கோ அவர்களுக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் உள்பட உலகளாவிய தொடர்பும் நட்பும் உள்ளவர். அவர் பலருக்கும் மடல் எழுதி இருந்தாலும் பலர் அவருக்கு எழுதிய மடலை, வாழ்த்தை, பாராட்டை தொகுத்து நூலாக்கி உள்ளார். 40ஆம் அகவையில் ஆரம்பித்து 86ஆம் அகவை வரை ஒவ்வொரு வருடமும் நூல் எழுதி வெளியிட்டு வருகிறார். 86ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் வெளியிடப்பட்டது இந்நூல். ‘ஒளி காட்டும் தமிழன்’ என்ற தலைப்பிலான முத்தமிழ் அறிஞர் கலைஞரின் கவிதையில் தொடங்கி கவிமாமணி தமிழழகன் கவிதையில் முடிகிறது. படிக்க படிக்க வியப்பு பிரமிப்பு. இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை இனிவரும் உலகம் நம்ப மறுக்கும் என்று காந்தியடிகளுக்குச் சொன்னது பெருங்கவிக்கோ அவர்களுக்கும் பொருந்தும். பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், உலகத் தமிழர்கள் யாவரும் அய்யாவிற்கு எழுதிய மடலில் அய்யாவின் சிறப்பை, ஆளுமையை, கவியாற்றலை, மரபு ஈடுபாட்டை தெள்ளத்தெளிவாக விளக்கி உள்ளார். புதுக்கவிதைத் தந்தை ந. பிச்சமூர்த்தி அவர்கள் பெருங்கவிக்கோ பற்றி வடித்த கருத்து இதோ! “பெருங்கவிக்கோவின் புலமை போற்றத்தக்கது! பெருங்கவிக்கோ பாடல்களைப் படிப்பவர்கள் தம்மையும் அறியாமல் ஆவேசம் எழுவதை உணர்வார்கள். அவ்வளவு சக்திமிக்க பாடல்கள். பாடல்களில் காணும் வண்ணஜாலங்களும், சந்த இனிமையும், புலமையும் போற்றத்தக்கவை” சேதுகாப்பியம் எனும் காப்பியம் 12 காண்டங்கள் வந்து விட்டன. கம்ப இராமாயண பாடல்களையும் எண்ணிக்கையில் மிஞ்சும்வண்ணம் அதிக பாடல்களை மரபில் எழுதி குவித்து வருகிறார் பெருங்கவிக்கோ. வருடாவருடம் தமிழுக்காக 29 ஆண்டுகளாக தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வருகிறார். எழுதுவதோடு மட்டும் நின்றுவிடாமல் தமிழுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தும் வருகிறார். தமிழ்ப்பணி மாத இதழில் தலையங்கமும் கவிதைகளும் எழுதி வருகிறார். கலைஞர், பேராசிரியர், அன்பழகன், சிலம்புச்செல்வர் ம.பொ.சி., திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தளபதி மு.க. ஸ்டாலின், முனைவர் கோ. விசுவநாதன், பேரறிஞர் ப. மருதநாயகம், தமிழண்ணல், குன்றக்குடி அடிகளார், பேராசிரியர் சி. இலக்குவனார், கவிஞர் வா.செ. குழந்தைசாமி ஆகியோரின் பாராட்டு மடல்கள் நூலில் உள்ளன. கவியருவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதை வரிகளில் இருந்து சிறு துளிகள் உங்கள் பார்வைக்கு, இதோ. எதார்த்தமான பதார்த்தம் – இவனிடம் வஞ்சகம் எதுவும் நெஞ்சினில் இல்லை. ஏழடி உயரம் வளர்ந்த குழந்தை எண்பது வயது மழலை வளரும் அன்புக்கு அப்போதும் உடந்தை. முத்துவிழா நாயகனை முத்தமிட்டு என் சொற்கள் வாழ்த்தும் இன்னும் வயதுகள் வளர வாழ்வுவளரட்டும் இன்னும் வாழ்வு வளர்த் தமிழ்ப்பணிகள் வளரட்டும்! எண்பது வயது முத்து விழாவில் பாடிய கவிதை, அவர் பாடியது போல பெருங்கவிக்கோ வாழ்வு வளர அவரது தமிழ்ப்பணியும் தமிழ்ததொண்டும் வளர்ந்து வருகின்றன. பெருங்கவிக்கோவின் மூத்தமகன் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் அவர்கள் முதுநிலை வணிகவியல் M.Com., பட்டதாரி. அவர் வங்கிப்பணி எல்லாம் வேண்டாமென்று உதறிவிட்டு தந்தையின் வழியில் தமிழ்ப்பணி மாத இதழை ஏற்று நடத்தி வருகிறார். இப்படி ஒரு பிள்ளை வாய்த்தது பெருங்கவிக்கோ அவர்களுக்கு வரம் என்றே சொல்ல வேண்டும். இக்காலத்தில் இப்படி ஒரு மகன் கிடைப்பது அரிது. அவரது வாழ்த்தும் நூலில் உள்ளது. கணிஞர் வா.மு.சே. கவிஅரசன், இவரும் பெருங்கவிக்கோ வா.மு.சே. அவர்களின் இளையமகன். பன்னாட்டு தமிழுறவு மன்ற மாநாட்டை அமெரிக்காவில் நடத்திய செயல்வீரர். அவரது வாழ்த்தும் நூலில் உள்ளது.பெருங்கவிக்கோவின் அன்புமகள் இளமுனைவர் வா.மு.சே.பூங்கொடி மதியழகன் அம்மாவின் ஆளுமைகள் வாழ்த்தும் உள்ளது. பச்சையப்பன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் முனைவர் வா.மு.சே. ஆண்டவர், ஹைக்கூ ஆய்வாளர் பச்சையப்ப முதலியார் நூலைத் தொடுத்தவர் பெருங்கவிக்கோவின் இளைய மகன். அவரது வணக்க உரையும் உள்ளது. பொறிஞர் தமிழ்மணிகண்டன் கவிதை சிறப்பு. திருமுருக கிருபானந்த வாரியார் வழங்கிய வாழ்த்துக் கவிதையும் உள்ளது. சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா. ஆண்டியப்பன் மடல் உள்ளது. அ.கி. பரந்தாமனார் கவிதை உள்ளது. பேராசிரியர் க. இராமசாமி, காந்திய அறிஞர் முனைவர் அ.பிச்சை, மூதறிஞர் ஔவை நடரசான், எளிமையின் சின்னம் எழுத்தாளர் வல்லிக்கண்ணன், முன்னாள் அமைச்சர் தமிழ்க்குடிமகன், சுந்தர இராமசாமி, கு.வெ.கி. ஆசான், பூவண்ணன், பாரதி சுராஜ், கலைமாமணி விக்ரமன், மேலாண்மை பொன்னுச்சாமி, இலண்டன் இ.கே. இராஜகோபால், பி.கே.சாமி, கவிக்கோ ஞானச்செல்வன், மாட்சிமிகு சை.வை. சிட்டிபாபு, டாக்டர் விஜி சந்தோசம், புலவர் அறிவுடை நம்பி, புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன், கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன், மார்சல் முருகன் இப்படி பலரும் பெருங்கவிக்கோ அவர்களுக்கு எழுதிய மடலும்,பாராட்டும்.வாழ்த்தும். கவிதைகளும் நூலில் உள்ளன. பல்சுவை விருந்தாக உள்ளது. 730ஆம் பக்கம் எனது மடலும் இடம்பெற்றுள்ளது. எனக்குப் பெருமை சேர்த்து உள்ளார்கள். சாதனை மனிதர் பெருங்கவிக்கோ அவர்களின் வாழ்நாள் சாதனை கடல் அளவு என்றாலும் இந்த நூல் கடுகளவு சாதனைகளை படம்பிடித்துக் காட்டி உள்ளது. பெருங்கவிக்கோ அவர்களால் தமிழன்னை பெருமை கொள்கிறாள்.

கருத்துகள்