யாருமற்ற என் கனவுலகு!(துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
யாருமற்ற என் கனவுலகு!(துளிப்பாக்கள்)
நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி !
நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
நூல் வெளியீடு :
அன்பு பதிப்பகம், 50, நிலையத் தெரு, சண்முகாபுரம், புதுச்சேரி-605 009. பக்கங்கள் : 40, விலை : ரூ.30
*****ஈழத்தமிழர்கள் போலவே தமிழ்ப்பற்று மிக்கவர்கள் புதுவைத் தமிழர்கள் இலக்கிய ஈடுபாடும் மிக்கவர்கள். புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்களின் அண்ணன் புதுவை சீனு. தமிழ்மணி அவர்களின் மனைவி இராசேசுவரி இந்நூல் ஆசிரியர். குடும்பம் குடும்பமாக ஹைக்கூ கவிதைகள் துளிப்பாக்கள் எழுதி வருகின்றனர். துளிப்பா நூற்றாண்டு விழாவும் கோலாகலமாக நடத்தினார்கள். நானும் சென்று வந்தேன்.காற்று வராது
அழகுக்குத் தான்
விசிறி வாழை!உண்மை தான். பார்க்கத் தான் அழகு. மற்றபடி பயன் எதுவும் இல்லை. விசிறி வாழைக்குப் பதில் வாழையை வைத்தாலாவது பயன் உண்டு. அந்த ஆதங்கத்தை அழகாக பதிவு செய்துள்ளார். பாராட்டுகள்.பை நிறையப் பணம்
சாப்பிட அச்சம்
நெகிழியில் உணவு!சூடான உணவுப்பொருளை நெகிழியில் இட்டால் புற்றுநோய் வருகின்றது என்று அறிவுறுத்திய போதும், இன்றைக்கும் பெரிய உணவு விடுதிகளில் விலை உயர்ந்த மதிய உணவையும் பிரியாணியையும் நெகிழியில் கொண்டு செல்ல வழங்கி வரும் அவலத்தைப் பார்த்து மனம் கொதிக்கிறது. மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு வராதது கண்டு வேதனையே மிச்சமானது.குளுகுளு அறையில்
‘பிச்சை’ எடுக்கின்றனர்
கையூட்டு!கையூட்டு வாங்கிடும் அவலத்தை பிச்சை என்றும், அலுவலகத்தின் உள்ளே குளுகுளு அறையில் அமர்ந்து பிச்சை எடுக்கின்றனர் என்று சாடி உள்ளார்.நடைபெறுகிறது வணிகம்
ஓடா ஆறு
மணல் கொள்ளை!ஆற்றில் தண்ணீர் வரவில்லை என்று வருத்தம், உழவனுக்கு ஆனால் தண்ணீர் வரவில்லை என்றால் கொண்டாட்டம் மணல் கொள்ளையருக்கு. தடுக்கும் அலுவலர்களையும் கொலை செய்துவிட்டு கொள்ளையடித்து வருகின்றனர் மணல் கொள்ளையர்கள்.அப்பாவைத்
தேடும் மகன்
ஓய்வூதியம்!அப்பாவை மகன் பாசத்தால் தேடவில்லை. ஓய்வூதியத்தை பறிப்பதற்காக தேடுகிறான் என்ற நாட்டுநடப்பை துளிப்பாவால் படம்பிடித்துக் காட்டி உள்ளார், பாராட்டுகள்.இளமை அப்பா
முதுமை மகன்
கலப்பட உணவு!இன்றைய இளையதலைமுறையினர் துரித உணவு என்ற பெயரில் கலப்பட நஞ்சை வாங்கி உண்டு விரைவிலேயே முதுமை அடைந்து விடுகின்றனர். வாழ்நாளையும் இழந்து வருகின்றனர்.திசை மாறி ஓடின
மக்கள் கூட்டம்
கோயிலில் வெடிகுண்டு!எள்ளல் சுவையுடன் பகுத்தறிவு சிந்தனையை விதைத்து உள்ளார். கோயிலில் இருந்தாலும் கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இழந்து வெளியே ஓடும் பயமனிதர்களின் பயபக்தியை துளிப்பாவாக வடித்துள்ளார்.கர்நாடக இசை
தொடர்பில்லை கர்நாடகாவிற்கு
உலக முதல் இசை தமிழிசை!உலகின் முதல்மொழி தமிழ். அதுபோலவே உலகின் முதல் இசையும் தமிழ் இசை தான். அதை மறந்து கர்னாடக இசை என்று அறியாமல் உளறி வருவதற்கு கண்டனத்தை நன்கு பதிவு செய்துள்ளார்.நீரில்லாக் கிணறு
கவலையோடும்
கவலையோடும் உழவன்!முன்னொரு காலத்தில் கிணற்றில் கயிறு இல்லாமல் கையை விட்டே தண்ணீர் எடுக்கும் அளவிற்கு இருந்ததாகச் சொல்வார்கள். ஆனால் இன்றோ நிலத்தடி நீர் வற்றி கிணற்றிலும் தண்ணீர் இன்றி மண்ணே உள்ளது.ஈழம்
பாழானது
பாழாய்ப் போன பாவிகளால்!தனிக்கொடி, தனி இராணுவம், தனி வரி என வாழ்ந்த ஈழம் பாவிகளால் சிதைந்து போன சினத்தை துளிப்பாவாக வடித்தது சிறப்பு.ஆடி வெள்ளி புரட்டாசி சனி
தீபாவளி என
கொண்டாடியே ஒழிந்தான் தமிழன்!புராணப் புனுகுகளை நம்பி திருவிழாக்கள் கொண்டாடி பத்து வட்டிக்கு வாங்கி வட்டி கட்ட முடியாமல் நொடித்துப் போன குடும்பங்கள் உண்டு.தமிழ்நாட்டில்
தமிழ் பேச வெட்கம்
வெட்கம்!தமிங்கிலம் பேசாமல் நல்ல தமிழ் பேசினால் கேலியாகப் பார்க்கும் அவலம் ஒழிய வேண்டும். எனக்கு தமிழ் பேச, எழுத வராது என்று சொல்லும் இளையதலைமுறையினர் பெருகி விட்டது, வேதனை. வெட்கம்.வருமா மானம்
தவறாக ஈட்டிய
வருமானம்!கையூட்டு வாங்கி கைதாகி செய்தியாக வருகையில் மானம் போய் விடுகிறது. தந்தை செய்த தவறுக்கு குழந்தைகளும் வெட்கி தலைகுனிய வேண்டிய அவமானம்.யாருமற்ற என் கனவுலகு என்ற பெயரில் துளிப்பா விருந்து வைத்துள்ளார்கள். நல்ல சிந்தனை. சமுதாயத்தை செம்மைப்படுத்தும் விதமாக சிந்திக்க வைக்கும் சிறந்த துளிப்பாக்களைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். பாராட்டுகள். சங்ககாலத்து பெண்பா புலவர்கள் போல, பெண் கவிஞர்கள் பெருக வேண்டும். வாழ்த்துக்கள். பாராட்டுகள்
--
.
ந
கருத்துகள்
கருத்துரையிடுக