படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! நன்றி தி இந்து நாளிதழ் !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! நன்றி தி இந்து நாளிதழ் ! நான்கு நிமிடப் பாடல், நம்மையே மறக்கச் செய்யும் வல்லமை கொண்டது. ஆனால் அந்த நாலுநிமிஷப் பாடலை வைத்தே, ‘இது யாருக்காகப் பாடிய பாட்டு’ என்பதைச் சொல்லிவிடமுடியுமா? அப்படி எல்லோரும் சொல்லுவார்கள்... ‘இது எம்ஜிஆருக்காகப் பாடிய பாட்டு’, ‘இது சிவாஜிக்காகப் பாடிய பாட்டு’ என்று! அப்படியொரு குரலில் ஜாலம் காட்டிய மாயக்காரர் டி.எம்.செளந்தர்ராஜன். தமிழ் சினிமாவில், இவரின் குரல் செய்த சாதனைகள், மிகப்பெரிய சரித்திரம். தமிழ் சினிமாவுக்கும் மூன்றெழுத்துக்கும் என்ன ராசியோ... தொடர்போ. டி.எம்.செளந்தர்ராஜனாக வந்து, டி.எம்.எஸ். என்று பச்சைகுத்தப்பட்ட வார்த்தையானது இந்தப் பெயர். மதுரைக்காரர்தான். வேறு மொழிதான் தாய்மொழி. ஆனாலும் தமிழை இவரளவுக்கு அட்சரம் பிசகாமல் உச்சரித்தவர்களில்லை என்று இன்றைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். ‘ராதே என்னை விட்டுப் போகாதடி’ என்ற பாடல்தான் தமிழ் சினிமாவில் டி.எம்.எஸ்.சின் முதல் பாடல். படத்தின் பெயர் ‘கிருஷ்ண விஜயம்’. இதுதான் செளந்தரராஜ விஜயத்தின் தொடக்கம். அடுத்தடுத்து படங்களுக்கு பாடக் கிடைத்த வாய்ப்பை சரியாகவே பயன்படுத்திக் கொண்டார். எம்ஜிஆரின் ‘மந்திரிகுமாரி’, ‘சர்வாதிகாரி’ படங்களுக்கெல்லாம் பாடியவருக்கு சிவாஜிக்குப் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. அது எம்ஜிஆர் - சிவாஜி என்று வரத்தொடங்கிய காலம். ‘தூக்குதூக்கி’ படத்தில் ஏகப்பட்ட பாடல்கள். அதில் ஒரேயொரு பாடல்தான் டி.எம்.எஸ்.க்குக் கொடுப்பதாக இருந்தது. அரைகுறை மனதுடன் சிவாஜி உட்பட எல்லோரும் சம்மதித்தார்கள். பாடச் சொன்னார்கள். பாடினார். பாடி முடித்ததும், ‘இந்தப் படத்துல எல்லாப் பாட்டையும் இவரே பாடட்டும்’ என்று சொல்லிவிட்டார்கள். எல்லாப் பாடல்களும் செம ஹிட்டு. அநேகமாக, அதையடுத்துதான் எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் டி.எம்.எஸ். முழுவதுமாகப் பாடத் தொடங்கியது அப்போதுதான். அங்கே, எம்ஜிஆருக்கு ஒரு குரலையும் சிவாஜிக்கு ஒரு குரலையும் என வித்தியாசம் காட்டினார். அதைக் கேட்டு, எல்லோருமே பிரமித்துதான் போனார்கள். மொத்தத் திரையுலகமே வியந்து பாராட்டியது. எம்ஜிஆர், சிவாஜிக்கு மட்டுமின்றி எல்லோருக்குமான குரலாகவும் அவரின் குரல் ஒலித்தது. முத்துராமனுக்கென ஒரு ஸ்டைல், ஜெமினி கணேசனுக்கு ஒரு ஸ்டைல், எஸ்.எஸ்.ஆருக்கு ஒரு விதம், ஜெய்சங்கருக்கு ஒரு விதம். அந்தக் குரலில் என்ன மாயங்கள் இருந்தனவோ... ஜாலங்கள் காட்டினார். ‘பூம்புகார்’ படத்தில், ‘பொன்னாள் இதுபோலே வருமா’ என்றும் பாடினார். ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ என்று சாட்டையைச் சுழற்றினார். ‘நதியில் விளையாடி கொடியில் தலைசீவி’ என்று அழவைத்தார். ‘ஜவ்வாது மேடையிட்டு சக்கரையில் பந்தலிட்டு’ என்று இவர் பாட, நாமே போதையாகிக் கிறங்கினோம். ‘ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே’ என்று நம்மையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சுற்றியது அவரின் குரல். ’ஓடும் மேகங்களே’ என்று இவர் பாட, அந்த மேகங்களும் நின்று கேட்டுவிட்டுத்தான் நகரும். ‘சிந்தனை செய் மனமே’வும் ‘சுந்தரி செளந்தரி’யும் ’சின்னஞ்சிறிய வண்ணப்பறவை’யும் ‘நீயே எனக்கு என்றும் நிகரானவன்’ என்று கர்நாடக சங்கீதம் தூக்கலாக உள்ள பாடலிலும் இவரின் குரலும் கம்பீரமும் இனிமையும் பட்டொளி வீசிச் சிறகடிக்கும்! இப்படித்தான்... ‘எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்’ என்று நம்பிக்கை விதைத்தது அவரின் குரல். ‘தூங்காதே தம்பி தூங்காதே’ என்று உசுப்பிவிட்டது. ‘ஏரிக்கரையின் மேலே போறவளே...’ என்று கரைக்கும், ‘அதோ அந்தப் பறவை போல’ என்று கடலுக்கும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ என்று குதிரை வண்டியிலும் ‘பாரப்பா பழனியப்பா’ என்று மாட்டுவண்டியிலும் நம்மை ஏற்றிப் பயணிக்கவைத்த பாட்டுவண்டிக்காரர் இவர். ‘யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே’ என்ற பாட்டில் குறும்பு கொப்புளிக்கும். ‘என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு’ என்று கிராம வார்த்தைகளை நமக்குப் பரிச்சயப்படுத்தியிருப்பார். ’பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா செளக்கியமா’ என்றும் தத்துவம் போதிக்கும் அவரின் குரல் இனிமையிலும் இனிமை. 'இசை கேட்டால் புவி அசைந்தாடும்’ பாடலும் அப்படித்தான். மயக்கிவிடும் நம்மை! ’யாரடி நீ மோகினி’யில் குரலில் ஸ்டைல் காட்டியிருப்பார். ’முத்துக்களோ கண்கள்’ பாட்டு தாலாட்டும். ’நான் பேச நினைப்பதெல்லாம்’ பாடலின் நடுநடுவே, ‘ம்... ம்ம்ம்ம்.. ம்ம்ம்’ என்று சொல்லும் அழகே அழகு. ‘பாலிருக்கும் பழமிருக்கும்’ பாட்டிலும் இந்த ‘ம்ம்ம்ம்ம்’ ஜாலம் விளையாடும். ‘பூமாலையில் ஓர் மல்லிகை’ பாடலுக்கு முன்னே வருகிற ஹம்மிங்கிலும் ‘பாட்டும் நானே பாவமும் நானே’ பாட்டுக்கு முன்னே கொட்டாவி விடுவது போல், ஒரு ராகம் போடுவார். ‘முத்துகுளிக்க வாரீயளா’ என்று நாகேஷுக்கு இவர் பாடியதையும் ரசித்தார்கள். ‘நான் மலரோடு தனியாக’ என்று ஜெய்சங்கருக்குப் பாடியதையும் கொண்டாடினார்கள். அறுபதுகளில், எம்ஜிஆருக்கு இவர் பாடிய பாடல்கள்தான், இன்றைக்கும் அவர் பிறந்தநாள், நினைவுநாளிலெல்லாம் இன்றைக்கும் தெருவெங்கும் ஊரெங்கும் இவரின் ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’, ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’என்றெல்லாம் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. எம்ஜிஆர் - சிவாஜி காலத்தில் இருந்து தொடங்கி, கமல் - ரஜினி வரைக்கும் எத்தனையெத்தனையோ பாடல்கள். நடுவே, ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’, உள்ளம் உருகுதய்யா’, ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்’ , ‘முத்தைத்திரு’ என்று இவர் குரலில், பக்தியும் ஆன்மிகமும் குழைந்து மனதில் புகுந்தன. டி.எம்.எஸ். பிறந்தார் இறந்தார் என்று சாதாரணமாகச் சொல்லிவிடமுடியாது. குரல் வழியே அவர் செய்த சாதனை, இன்னும் நூறாண்டு கடந்தும் போற்றப்பட்டுக் கொண்டே இருக்கும். காற்றில் கலந்து ஜீவித்துக்கொண்டே இருக்கிறார், தன் மாயக்குரல் மூலமாக! எத்தனையெத்தனையோ பாடல்கள். நடுவே, ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’, உள்ளம் உருகுதய்யா’, ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்’ , ‘முத்தைத்திரு’ என்று இவர் குரலில், பக்தியும் ஆன்மிகமும் குழைந்து மனதில் புகுந்தன. டி.எம்.எஸ். பிறந்தார் இறந்தார் என்று சாதாரணமாகச் சொல்லிவிடமுடியாது. குரல் வழியே அவர் செய்த சாதனை, இன்னும் நூறாண்டு கடந்தும் போற்றப்பட்டுக் கொண்டே இருக்கும். காற்றில் கலந்து ஜீவித்துக்கொண்டே இருக்கிறார், தன் மாயக்குரல் மூலமாக!

கருத்துகள்