உதிராப் பூக்கள் ! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை :கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.

உதிராப் பூக்கள் ! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். நூல் வெளியீடு : வானதி பதிப்பகம், தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. பேச : 044-24342810. பக்கங்கள்:64 விலை:ரூ70. ***** தேர்ந்தெடுத்த கவிதைகளே நூலாக வந்திருப்பதால் இதற்கு உதிராப்பூக்கள் என்ற தலைப்பும் பொருத்தமானதே. காரணம் இந்த பூக்கள் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., நாடறிந்த கவிஞர்கள் மு. முருகேஷ் மற்றும் கவிதையைத் தொகுத்த ரசனையின் நாயகனாக விளங்கும் கவிஞர் ஆத்மார்த்தி ஆகிய மூவருமே வாழ்த்துரை, தொகுப்புரை, அணிந்துரை என்ற பலமான உரம் போட்டுத் துளிர்விட்ட செடியை வளர்த்திருக்கிறார்கள். எனவே இதில் விளைந்த பூக்கள் துளிராது. வேடந்தாங்கல் செல்லாத இரும்புப் பறவை விமானம்! கவிஞர் இரா.இரவி அவர்கள் சுற்றுலாத் துறையில் பண்புரிவது பற்றி இந்தக் கவிதை வரிகளே விளக்கி விட்டது. பேருந்துச் சாலையில் பரிசல் பயணம் அடைமழை! இதைப் படித்தவுடன் வெள்ளத்தில் சிக்கித் தவித்த சென்னை மக்கள் நினைவுக்கு வந்துவிடும். பரிதிக்கும் தென்றலுக்கும் சன்னல் ஒன்றுதான்! என்ற இந்தக் கவிதை வரிகள் இதே பூமியில் ஏழையும், பணக்காரனும் வசிப்பதைப் பற்றி கூறுவதுபோல் எனக்குத் தோன்றியது. கருவறை உள்ள நடமாடும் கடவுள் தாய்! நாம் கருவறைக்குச் சென்று கடவுளைத் தரிசிக்கின்றோம். ஆனால் ஒரு கருவறையைத் தாங்கி நடமாடும் கடவுளாக நமக்கு தாய் இருக்கிறாள் என்ற வரிகள் மிகவும் அருமை! ஒரு கவிஞரை, சாதாரண வாசகன் பாராட்டினால், வளர்ந்து கொண்டிருக்கிறார் என்று பொருள். வெற்றி பெற்ற ஆளுமைகள் பாராட்டினால், வளர்ந்து விட்டார் என்று பொருள். பிற கவிஞரெல்லாம் பாராட்டினால், வளர்ந்து உச்சம் தொட்டுவிட்டார் என்று பொருள். கவிஞர் ஆத்மார்த்தி அவர்கள், இரா. இரவியின் குடம் குடமாக இருக்கும் கவிதைகளின் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து குடத்திற்கு முன்பாக ‘ம’கரத்தைச் சேர்த்து ‘ம’குடமாக மாற்றியிருக்கிறார். இந்நூல் அனைவராலும் நேசிக்கப்படும், வாசிக்கப்படும்.

கருத்துகள்