உதிராப் பூக்கள்! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : நீதியரசர் கற்பக விநாயகம், நியூடெல்லி.



உதிராப் பூக்கள்!
(தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்)

தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி !

நூல் மதிப்புரை : நீதியரசர் கற்பக விநாயகம், நியூடெல்லி.  


JUSTICE M. KARPAGA VINAYAGAM

FORMER CHIEF  JUSTICE OF JHARKHAND HIGH COURT &
FORMER   CHAIRPERSON , APPELLATE TRIBUNAL FOR ELECTRICITY
PETROLLEUM & NATURAL GAS,NEW DELHI.
SENIOR ADVOCATE
SUBREME COURT OF INDIA.
OFFICE- CUM- RESIDENCE
D-4, 3RD FLOOR ,JANNGPURA EXTN,

NEW DELHI.110014.


நூல் வெளியீடு : வானதி பதிப்பகம், தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. பேச : 044-24342810. பக்கங்கள்:64 விலை:ரூ70.


*****

      ‘உதிராப் பூக்கள் என்ற இந்த நூலில் அடங்கியுள்ள குறும்பாக்களை எழுதியவர் கவிஞர் இரா. இரவி. இதைத் தொகுத்தவர் கவிஞர் ஆத்மார்த்தி!

      கவிஞர் இரா. இரவி எழுதிய ஆயிரம் குறும்பாக்களில் நூறு குறும்பாக்களை தேர்ந்தெடுத்து ‘உதிராப் பூக்கள் என்ற தலைப்பில் இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.

      இரா. இரவி எனக்கு இந்த நூலை அனுப்பி எனது மதிப்புரையை எழுதி அனுப்பும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்! எனவே இந்த மதிப்புரையை எழுதியிருக்கிறேன்.

     ‘பூக்கள் என்ற சொல்லை பல சொற்கள் மூலமாக உச்சரிப்பதுண்டு! ‘பூக்கள் என்ற பதத்தை சிலர் ‘மலர்கள் என்று சொல்வதுண்டு; சிலர் ‘புஷ்பங்கள் என்று அழைப்பதுண்டு; சிலர் ‘பூச்சரம் என்று சொல்வார்கள்; ஆனால் இந்த நூலிற்கு ‘உதிராப் பூக்கள் என்ற புதுமையான பெயரைத் தந்திருக்கிறார்கள்.

      ‘உதிராப் பூக்கள் என்ற தலைப்பை உற்றுநோக்கும்போது, உதிர்ந்த பூக்கள் என்றால் என்ன? உதிராப் பூக்கள் என்றால் என்ன? என்ற கேள்விகளைக் கேட்கத் தோன்றுகிறது.

      பூக்களுக்குப் பல பருவங்கள் உண்டு.

      முதல் பருவம்         ‘அரும்புகள்
இரண்டாம் பருவம்    ‘மொக்குகள்

மூன்றாம் பருவம்     ‘பூக்கள்
நான்காம் பருவம்     ‘காய்கள்

ஐந்தாம் பருவம்       ‘கனிகள்

‘உதிர்ந்த பூக்கள்’ என்றால் அதற்குமேல் வளர்ச்சியில்லை.

உதிராப் பூக்கள் என்றால் அவைகள் பல பருவங்களைக் கடந்து கனிகளாக உருமாறி விடுகின்றன. அதைப் போலவே நமக்குள்ளே எழும் எண்ணப் பூக்கள், அரும்பாகி, மொக்காகி, மலராகி, காயாகி, பழமாகிக் கனிந்து நமது இதயத்தோடு ஒட்டி உறவாடி நமது எண்ணங்களோடு பதிந்து விடுகின்றன. இது ஒரு பரிணாம வளர்ச்சி! இந்தத் தலைப்பைப் பார்க்கின்ற போது எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகின்றது.

கி.வா. ஜகன்னாதன் அவர்கள் பெரிதும் புகழப்படும் ஒரு தமிழறிஞர்! அவரிடம் ஒரு நண்பர் கேட்டார்.

      “ஐயா,
      தங்களுக்கு எந்தப் பழம் பிடிக்கும்!
            தமிழ்க் கனிகள் மூன்று. மா, பலா, வாழை!
      இவைகளில் உங்களக்கு எந்தப் பழம் பிடிக்கும்?
            மாம்பழமா? பலாப்பழமா? வாழைப்பழமா?
என்று நண்பர் கேட்டார்.

      அதற்கு கி.வா.ஜா. சொன்ன பதில், இது தான்!

“இந்த மூன்று பழங்களை விட எனக்கு அதிகம் பிடித்த பழம் கொய்யாப் பழம் தான்!

நண்பர் கேட்டார், “ஐயா, அந்தப்பழத்தில் அப்படி என்ன விசேஷம்?

அதற்கு பதில் சொன்னார், கி.வா.ஜ.

“கொய்யும் பழம் என்றால் மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் பழத்தை பறிக்கக்கூடிய பழமாக இருக்கும்.

‘கொய்யாப் பழம் என்றால் பறிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் தானாகவே பழுத்து கனிந்து, அது கொய்யாமலேயே, தானே உதிர்ந்து தரையில் விழும் பழமாக இருக்கும்!.

பழங்களில் பறித்த பழங்களை விட, பழுத்துக் கனிந்து தானாக உதிர்ந்த பழங்கள் தான் இனிமையாக இருக்கும்.

ஆக, உதிராப் பழங்களை விட உதிர்ந்த பழங்கள் தான் சுவையாக இருக்கும். அவை தான் கொய்யாப் பழங்கள்”.

இந்தப் பதில் கி.வா.ஜ.வின் சிறப்பான விளக்கம்.

பூக்களில் உதிராப் பூக்களில் தான் அழகு உண்டு! நிறம் உண்டு! மணம் உண்டு!

அந்தப்பூக்களில் தான் சுவையுள்ள தேனும் உண்டு.

இந்த நூறு குறும்பாக்களில் எந்தக் குறும்பா, குறட்பாவைப் போல கருத்தாழமும் இனிமைத் தமிமும் அடங்கியுள்ளது என்பதைக் கண்டுபிடிப்பது ஒரு சிரமம் தான்!

இருந்தாலும் சில குறும்பாக்களை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

(1)  வணங்கத்தக்கவர்கள் நால்வர்! 

1. மாதா, 2. பிதா, 3. குரு, 4. தெய்வம்.

மாதா கைகாட்டுவது தான் பிதா!
பிதா கைகாட்டுவது தான் குரு!
குரு கைகாட்டுவது தான் தெய்வம்!

ஆனால், ‘மாதா’ தான் தெய்வம், ‘தெய்வம் தான் மாதா! என்று சொல்கிறார் கவிஞர், காரணம் : மாதாவிடம் மட்டுமே கருவறை உள்ளது. இதைக் கருத்தாக வைத்து கவிஞர் சொல்கிற குறும்பா இதுதான்.

“கருவறை உள்ள
      நடமாடும் கடவுள்
      தாய்!

தாயின் சிறப்பை எடுத்துக்காட்டும் அருமையான குறும்பா இது!

(2)  வீணையை மீட்டத் தெரிந்தவருக்குத் தான் அல்லது வீணை எழுப்பும் இனிமையான இசையை இரசிக்கத் தெரிந்தவருக்குத் தான் வீணையின் பெருமையும் அருமையும் தெரியும்! இதன் பெருமையை அறியாதவர்கள் இது ஒரு பழுத்த விறகுக்கட்டை என்று சொல்வார்கள். அதற்கான ‘குறும்பா இது தான்.

“வீணையும் விறகு தான்
      அருமை
      அறியாதவனிடம்
!”

மக்களே போல கயவர் என்பதைப் போல ‘சருக் எனத் தைக்கும் சுருக்கம் தான் இப் பா!

(3)  செடிகளோடு சேர்ந்து குலுங்குவது தான் மலர்களுக்கு அழகு!
அதைப் பறித்து விட்டால் செடிக்கு ஏது அழகு?
மலரோடு சேர்த்த செடிகளைத் தான் இரசிக்க முடியும்!
மலர்களைப் பறித்துவிட்டால் செடிகளுக்கும் அழகில்லை! மலர்களுக்கும் அழகில்லை!

இந்தக் கருத்து அமைந்த குறும்பா இதுதான்!

“இருப்பதில் தவறில்லை!
பறிப்பதில் தவறு
மலர்கள்!

செடிகளை விதவைகளாக்கிப் பார்த்திருக்கிறார் கவிஞர்.

(4)  சோலைகளில் ஓங்கி வளர்கிற கரும்புக்கு மட்டும் தான் ஒரு சிறப்பு உண்டு! கரும்பில் காணப்படுகிற ஒவ்வொரு கணுவுக்கும் ஒரு வளைவு உண்டு. அதைப் பார்க்கும்போது கருவுற்ற பெண்களுக்கு அடுக்கடுக்காக வளையல்களைப் பூட்டி வளைகாப்பு விழா நடத்தியதைப் போல ஒரு தோற்றம் நினைவுக்கு வருகிறது!.

இதற்கான ‘குறும்பா இது தான்!

“மாட்டியது யாரோ
      இத்தனை வளையல்கள்?
      கரும்புக்கு!

கர்ப்பவதியை கரும்புக்கு ஒப்பிடுகிற குறும்பா இது!

(5)  நெற்குதிருக்குள் ஆயிரம் ஆயிரமாக நெற்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும்! அந்தக் குதிரில் ஒரு அந்துக்குச்சியை உள்ளே நுழைய விட்டுவிட்டால் அத்துணை நெற்களும் கெட்டுப்போகும். அதே போன்று மனிதர்களின் தூய்மையான உள்ளங்களில் மதவெறியைப் புக விட்டுவிட்டால் அவர்களின் உள்ளம் முழுமையாகக் கெட்டுப்போகும்.

அதற்கான ‘குறும்பா இது தான்!

      “ஆயிரம் நெல்லுக்கு
      ஒரு அந்துப்பூச்சி
      மதவெறி

நெறி வேண்டும், மதவெறி வேண்டாம் என்று உணர்த்துகிற எச்சரிக்கைக் குறும்பா இது!

(6)  ஒரு சோதிடனின் கூண்டுக்கிளி காலமெல்லாம் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கிறது! சோதிடம் பார்ப்பதற்காக சோதிடனிடம் ஒருவன் வந்தால், அப்போது தான் சோதிடன் கூண்டைத் திறப்பான். சோதிடன் கிளிக்குத் தரும் ‘பரோல் அது! கிளி தத்தித் தத்தி வெளியே வந்து குவித்து வைக்கப்பட்டிருக்கும் சீட்டுக்களில் ஒன்றை எடுத்துக் கொடுத்துவிட்டு பவ்வியமாக, திரும்ப கூண்டுக்குள் சென்று பணிவாக ஒதுங்கி உட்கார்ந்து கொள்ளும். அது தான் சோதிடக் கிளியின் பழக்கம்! அதற்கு சிறகுகள் இருந்தாலும் கிளி அவைகளைப் பயன்படுத்துவதே இல்லை!

அது சொல்கிற பாடம் : உங்கள் உடலில் அமைந்துள்ள ஒவ்வொரு அங்கத்தையும் பயன்படுத்துங்கள். பலருக்கும் உதவுங்கள். இல்லாவிட்டால் அந்த அங்கங்களை மறந்துவிட்டு என்னைப் போல கூண்டுக்கிளியாக மாறி விடுவீர்கள். இது எச்சரிக்கை! இதை நினைவுபடுத்துவது தான் இந்தக் குறும்பா!

“மறந்து விட்டது
      சிறகுகள் இருப்பதை!
      “சோதிடக்கிளி

      ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒரு பயன்பாடு உண்டு! அதை மறந்து நடைப்பிணமாக வாழ வேண்டாம் என்பதை உணர்த்துகின்ற ‘குறும்பா இது!

(7)  மதங்களின் தோற்றத்திற்குக் காரணம், மக்களை நெறிப்படுத்தி ஒழுக்கமான வாழ்க்கை வாழச் செய்வது தான்! ஆனால் இன்றோ, ஒவ்வொரு மதமும் மக்களுக்கு வெறியூட்டி அவர்களை மதங்கொண்டவர்களாக மாற்றி அவர்களை அழிவுச் சக்திகளாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது! அதற்கான ‘குறும்பா இது தான்!

“அன்று நெறி!
இன்று வெறி!!
மதங்கள்!!!

மதம் வேண்டும்! ஆனால் மதவெறி கூடாது என்பதைச் சுட்டிக்கட்டும் குறும்பா இது!

(8)  செடிகளில் கொத்துக் கொத்தாகப் பூத்து குலுங்கிக் குலுங்கி நாட்டியமாடுகின்ற அழகிய மலர்கள்! அய்யோ! பாவம்! அதற்கு நிறம் உண்டு. ஆனால், மணம் இல்லை, ஏன்? அதற்கான குறும்பா இது தான்!

“அழகிய மலர்கள்
வாசமில்லை
காகிதப் பூ

போலிச் செடிகள் உண்மையான செடிகளை விட மின்னுகின்றன. மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதை உணர்த்துகிறது இந்தக் குறும்பா!

(9)  மழை பெய்யும்போது நனையாமல் இருப்பதற்காக மனிதர்களாகிய நாம் குடைபிடித்துக் கொள்கிறோம்!  ஆனால் பறவைகள் நம்மைவிட புத்திசாலிகள். அவைகள் நனையாமல் இருப்பதற்காக மழை பெய்யும்போது மேகத்திற்கு மேலே பறக்கிறது. மேகத்தில் கீழே பறந்தால் தானே அவைகள் நனைய வேண்டியிருக்கும்! இதற்கான ‘குறும்பா இது தான்!

“மேகத்திற்கு மேல்
பறந்த பறவை
நனைவதில்லை!

பறவைகளுக்கு குடைகள் தேவையில்லை என்பதை உணர்த்தும் குறும்பா இது!

(10)           விமானமும் ஒரு பறவை தான். இந்தப் பறவைக்கு மட்டும் தான் இரும்புச் சிறகுகள் உண்டு. இருந்தாலும் இவ்வகைப் பறவைகள் வேடந்தாங்கலுக்குச் செல்வதில்லை. இரும்புகளைத் தூக்கிக் கொண்டு வெளிநாடுகளுக்குக் செல்கின்றன. அதற்கான ‘குறும்பா இது தான்!

“வேடந்தாங்கல் செல்லாத
இரும்புப் பறவை
விமானம்!

      இரும்புச் சிறகுகளைத் தாங்கிக் கொண்டு நம்மையும் தூக்கிக் கொண்டு வெளிநாடுகளில் இறக்கிவிடும் அற்புதப் பறவை இது!

(11)           இந்நூலின் தலைப்பு ‘உதிராப் பூக்கள் என்பது. இதன் உட்பொருள் பூக்கள் அரும்பாகும்; அரும்புகள் மொக்காகும்; மொக்கு பூக்களாகும்; பூக்கள் காய்களாகும்; காய்கள் கனிகள் ஆகும். இது பரிணாம வளர்ச்சி. ஆனால் இந்தக் குறும்பாக்களை எழுதிய கவிஞர் உதிரும் பூக்களுக்குக் கூட ஒரு அடர்ந்த பண்பு உண்டு என்று காட்டுகிறார். இதை உணர்த்தும் குறும்பா இது தான்.

“வளர்த்த மண்ணுக்கு
மரத்தின் நன்றி
உதிரும் பூ

தனது பரிணாம வளர்ச்சியைக் கூட தியாகம் செய்துவிட்டு பூமிக்குப் பூசை செய்யும் பூக்களாக நன்றியைக் காட்டும் குறும்பா இது!

(12)           இக்கவிஞர் ஒரு குறும்பாவில் தாயை கருவறை உள்ள தெய்வத்தோடு ஒப்பிட்டிருக்கிறார்! ஆனால் இந்தக் குறும்பாவில் தாயை உருகி உருகி ஒளி காட்டும் மெழுகுக்கு ஒப்பிட்டிருக்கிறார். அந்தக் குறும்பா இது தான்!

“உயிரின் அழகு
உருகும் மெழுகு
அன்னை

இப்படிப்பட்ட குறும்பாக்களில் நூறைத் தேர்ந்தெடுத்து இந்த நூலுக்கு அழகு சேர்த்திருக்கிறார் கவிஞர் ஆத்மார்த்தி!

      ஒவ்வொரு குறும்பாவும் வெறும் ‘பா அல்ல! உள்ளங்களை ஒழுங்குபடுத்தும் ‘அமுதசுரபி’!

            இவைகளை விவரிக்கும்போது, என்னைக் கவர்ந்த ஒரு உரைநடைக் கவிதை எனக்கு நினைவுக்கு வருகிறது! இது தான் அந்தக் கவிதை!

      கற்கள் ஒழுங்குபடுத்தப்படும் போது
            அவை சிலை ஆகிறது!
      
சொற்கள் ஒழுங்குபடுத்தப்படும் போது
            அது 
கவிதை ஆகிறது!
      
கோடுகள் ஒழுங்குபடுத்தப்படும் போது
            அது 
ஓவியம் ஆகிறது!
      
உடல் அசைவுகள் ஒழுங்குபடுத்தப்படும் போது
            அது 
நாட்டியம் ஆகிறது!
      
சப்தம் ஒழுங்குபடுத்தப்படும் போது
            அது 
சங்கீதம் ஆகிறது!
      
சாதனைகள் ஒழுங்குபடுத்தப்படும் போது
            ஆது 
சரித்திரம் ஆகிறது!
      
மலர்கள் ஒழுங்குபடுத்தப்படும் போது
            அது 
மாலை ஆகிறது!
      
மனம் ஒழுங்குபடுத்தப்படும் போது
            அது 
புனிதம் ஆகிறது!
      
மனிதன் ஒழுங்குபடுத்தப்படும் போது
            அவன் 
தெய்வம் ஆகிறான்!

ஆகவே இக்கவிதை உணர்த்துகின்ற பாடம் என்னவென்றால் மனிதர்களின் உள்ளங்களை நெறிப்படுத்தக்கூடிய அல்லது ஒழுங்குபடுத்தக்கூடிய நூல்களைப் படைத்து விட்டால் அந்த படைப்பாளி இறைவனுக்குச் சமம் ஆகி விடுகிறார்!

அந்த வகையில் இரா.இரவி முத்து முத்தான குறும்பாக்களை படைத்து அளித்திருக்கிறார்!

அவரின் படைப்புப் பணிகள் தொடரட்டும்
      இன்னும் ஆயிரம் ஆயிரம் நூல்களை எழுதிக் குவிக்கட்டும்!

வாழ்க அவரது சமுதாயப் பணி!
      வளர்க அவரது புகழ்!

நன்றி!



--


.



 

கருத்துகள்