பெருங்கவிக்கோ ! கவிஞர் இரா. இரவி !





 பெருங்கவிக்கோ !  கவிஞர் இரா. இரவி !


கவிக்கோ என்றாலே அப்துல் ரகுமான் என்பது எல்லோருக்கும் விளங்கும். அதுபோல ‘பெருங்கவிக்கோ’ என்றாலே வா.மு. சேதுராமன் என்பதும் எல்லோருக்கும் விளங்கும்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களிடம், அரசியலில் இருந்து ஓய்வு பெற்றால் என்ன செய்வீர்கள்? என்ற ஒரு கேள்வி எழுப்பினார்கள். அதற்கு கலைஞர், பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்கள் முன்னே அமர்ந்து விடுவேன் என்று பதில் தந்தார். அந்த அளவிற்கு மிகச்சிறந்த ஆளுமையாளர் பெருங்கவிக்கோ.

மனைவி இறந்தவுடன் மறுமணம் செய்து கொள்ளும் ஆணாதிக்க சமூகத்தில், மனைவி சேதுமதிக்காக கோயில் கட்டி, நினைவு நாள் அன்று அக்கோயில் சென்று தமிழறிஞர்களுக்கு, தமிழ்தொண்டர்-களுக்கு பொற்கிழி வழங்கி அந்த ஊர் மக்களுக்கு அன்னதானமும் வருடாவருடம் தவறாமல் வழங்கி வருகிறார். அந்த நாளில் அவரது மூத்தமகன் வா.மு.சே.திருவள்ளுவர் (தமிழ்ப்பணி ஆசிரியர்), இளைய மகன் வா.மு.சே. ஆண்டவர் (பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர்) உடன் வருகைதந்து வருடாவருடம் அம்மாவை வணங்கி வருகின்றனர். கவியரசன் அமெரிக்காவில் இருப்பதால் இந்த வருடம் வரவில்லை. இந்த வருடம் எனக்கும், மதுரை நேதாஜி வே. சுவாமிநாதன் அவர்களுக்கும் பொற்கிழி வழங்கினார். இதற்கு முந்தைய ஆண்டுகளிலும் நான் சென்று கவிதை பாடி இருக்கிறேன். இந்த ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் அவர்களும் வருகை தந்து சிறப்புரையாற்றினார். பெருங்கவிக்கோ அவர்களின் மலேசியா தமிழ்த்தொண்டை நினைவுகூர்ந்து பாராட்டினார்.

தமிழ்ப்பணி இதழில் தான் இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலகளாவிய அளவில் நடத்திய கவிதைப் போட்டிகளின் அறிவிப்பு பிரசுரமானது. அதனைப் படித்து விட்டு கவிதைகள் அனுப்பி நானும் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் குறளடியான் போன்ற கவிஞர்கள் பரிசு பெற்றோம். இரண்டு முறை நடத்த கவிதைப் போட்டியிலும் நான் பரிசு பெற்றேன்.

இந்தப் போட்டியில் வென்றதன் காரணமாக இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் பொன் பாலசுந்தரம் ஐ.தி. சம்பந்தன் போன்றவர்களின் நட்பு கிடைத்து குடும்ப நண்பர்கள் ஆகிவிட்டோம். பெருங்கவிகோ இலண்டன் வந்து இருந்தபோது பொன் பாலசுந்தரம் அய்யா கலாநிதி பட்டம் பெற்றவர். தன் கரங்களால் மீன் குழம்பு சமைத்து பரிமாறியதை மிகவும் பெருமையாகவும் மகிழ்வாகவும் குறிப்பிட்டார்கள். பொதுவாக பெருங்கவிக்கோ எந்தவித பணமும் இல்லாமல் எந்த வெளிநாட்டிற்கும் சர்வ சாதாரணமாக சென்று வருவார். காரணம் உலகத்தமிழர் யாவருமே பெருங்கவிக்கோ அவர்களை நன்கு அறிவார்கள்.

இலங்கைத் தமிழர்களுக்காக பலரும் குரல் கொடுத்தாலும் ஆதிமுதல் தொடர்ந்து உரக்கக் குரல் கொடுத்து தமிழ்ப்பணியில் தகவல்களை பிரசுரம் செய்து தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்களின் மீது அளவற்ற பாசம் நேசம் அன்பு கொண்டவர் பெருங்கவிக்கோ.

சேதுகாப்பியம் என்று தொடர்ந்து எழுதி வருகிறார். அனைத்தும் மரபுக்கவிதைகள். கம்ப இராமாயணத்தை மிஞ்சும் வண்ணம் அதைவிட கூடுதலான வரிகளில் காப்பியங்கள் எழுதி வருகிறார். வாழும் தமிழ் அறிஞர்களில் பெருங்கவிக்கோ அவர்களுக்கு நிகரான வேறு அறிஞர், கவிஞர் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு கவியாற்றல் மிக்கவர் பெருங்கவிக்கோ.

பெருங்கவிக்கோ அவர்களின் கனவு இலட்சியம் நோபல் பரிசு. கவிதைக்கான நோபல் பரிசு பெறும் முழுத்தகுதியும் திறமையும் ஆற்றலும் பெருங்கவிக்கோ அவர்களுக்கு நிரம்ப உண்டு. அவரது இலட்சியம் நிறைவேறும். நிச்சயம் நோபல் பரிசு அவருக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அவரது சேதுகாப்பியம் நூல் மதிப்புரை எழுதி இணையங்களில் பதிவுசெய்து உலகம் முழுவதும் பலரும் படித்து பாராட்டி உள்ளனர்.

தமிழ்ப்பணி இதழில் மரபுக் கவிதைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். ஆசிரியர் தலையங்கம் மூலம் தமிழுக்காக, தமிழருக்காக, தமிழ்நாட்டிற்காக தொடர்ந்து உரிமை முழக்கம் செய்து வருகிறார். வருடா வருடம் தமிழை முன்நிறுத்தி, தமிழா சாதியை மற, மதத்தை மற, அரசியலை மற, தமிழை நினை, தமிழால் ஒன்றுபடுவோம் என்று குரல் எழுப்பி நடைப்பயணம், ஊர்திப்பயணம் செய்து வருகிறார்.

வருடாவருடம் ஊர்திப்பயணம் வரும்போது மதுரையில் வரவேற்பு வழங்குவது வழக்கம். மதுரைக்கு வரும்போது காலேஜ் ஹவுஸ் விடுதியில் தான் பெருங்கவிக்கோ தங்குவார். திருக்குறள் செம்மல் மணிமொழியனார் அவர்கள், பெருங்கவிக்கோவிடம் தங்கும் கட்டனம் வாங்கியதே இல்லை. அவரைப் போலவே நல்ல உள்ளம் கொண்ட அவரது புதல்வர் கார்த்திகேயன் மணிமொழியனும் தங்கும் கட்டணம் வாங்குவது இல்லை.

பெருங்கவிக்கோ மதுரைக்கு வந்துவிட்டாலே நான், அருட்தந்தை ஞான ஆனந்தராஜ், மதுரை நேதாஜி சுவாமிநாதன், அசோக்ராஜ் என அனைவரும் சென்று சந்தித்து தமிழ் உரையாடுவது வழக்கமாக வைத்துள்ளோம். பெருங்கவிக்கோ வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பது நமக்குப் பெருமை. வாழும் காலத்திலேயே அவருக்கு நோபல் பரிசு கிட்ட வாழ்த்துக்கள்.

கருத்துகள்