உன்னை அறிந்தால்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இஆப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

 


உன்னை அறிந்தால்!


நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இஆப.நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


நூல் வெளியீடு : கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராயர் நகர், சென்னை-600 017. பேச : 044-24314347 பக்கங்கள்: 240, விலை: ரூ.200.
*****


நாடறிந்த நல்ல பேச்சாளர், எழுத்தாளர், சிந்தனையாளர், முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. அவர்களின் ‘உன்னை அறிந்தால்’ நூல். நாம் நம்மை அறிய உதவிடும் நூல். முத்தான பத்து தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. பல்வேறு இடங்களில் ஆற்றிய உரையும் தொகுப்பும், எழுதிய கட்டுரைகளின் தொகுப்பும் நூலாகி உள்ளது. சிலரது உரையை நூலாக்க முடியாது. அப்படியே ஆக்கினால் பேச்சுநடையில் சிறப்பாக இருக்காது. ஆனால் முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்களின் உரையோ தெளிந்த நீரோடை போன்று நூலாக்கும் நடையிலேயே உரையும் இருக்கும். அதனால் தான் உரை நூலாகிய போதும் சிறப்பாகவே உள்ளது.


10 தலைப்புகளில் சிறிய பத்து நூலாகவும் வந்துள்ளன. விருப்பம் உள்ளவர்கள் கையடக்க சிறிய நூல்களையும் வாங்கிப் படிக்கலாம். முதல் தலைப்பு “மனத்தில் உறுதி வேண்டும்” தலைப்பு. மகாகவி பாரதியை நினைவூட்டும் விதமாக உள்ளது. நூலிலிருந்து பதச்சோறாக சில : “மனம் என்பது நாம் அறியக்கூடிய கூறுகளின் தொகுப்பு. உள்ளுணர்வு, கற்பனை, புலனுணர்வு, சிந்தனை, மதிப்பீடு, மொழி, நினைவாற்றல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒன்றையே மனம் என்று அழைக்கின்றோம். நம்மிடமிருந்து உள்ளுணர்வை உருவி விட்டால் என்ன நடக்கிறது என்பதே நமக்குத் தெரியாது. எந்தப் பிரக்ஞயும் இல்லாமால் இருப்போம்”.


‘மனம்’ என்றால் என்ன என்பது பற்றி ரத்தினச் சுருக்கமாக நம் மனம் புரிந்து கொள்ளும்வகையில் மிக நுட்பமாக விளக்கி உள்ளார். பல மேற்கோள்கள், சின்னக் கதைகள் என விளக்கி எழுதி, வாழ்வியல் கருத்துக்களை பயனுள்ள நெறியான நல்வாழ்க்கை வாழ்ந்திட உதவிடும் வண்ணம் பல அரிய கருத்துக்களை நூலில் விதைத்து உள்ளார். மன உறுதியுடன் நெறியான ஒழுக்கமான பண்பாடான பயனுள்ள வாழ்க்கை வாழ வழிகள் சொல்லும் சிறந்த நூல்.


தேசப்பிதா காந்தியடிகள் தொடரியில் எப்போதும் மூன்றாம் வகுப்பிலேயே பயணம் செய்வது வழக்கம். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, நான்காம் வகுப்பு என்று ஒன்று இல்லை, இருந்தால் அதிலேயே பயணம் செய்வேன் என்றார். இப்படி ஒருமுறை பயணிக்கும் போது காந்தியடிகள் எதிரே இருந்தவர், தொடரியின் உள்ளே எச்சில் துப்புகின்றார், உடன் காந்தியடிகள் துணியால் துடைக்கிறார். மீண்டும் துப்புகின்றார், காந்தியடிகள் மீண்டும் துடைக்கிறார். எச்சில் துப்பியவருக்கு, துடைப்பது காந்தியடிகள் என்பது தெரியாது. அவரை வரவேற்க வந்த கூட்டத்தைப் பார்த்து, காந்தி என்பதை அறிந்து, மன்னிப்பு கேட்கிறான். பொதுச் சொத்தை புண்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என்று காந்தியடிகள் அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்வு நூலில் உள்ளது. இதுபோன்று பல நிகழ்வுகள் நூலில் உள்ளன.


‘இலக்கும் நோக்கமும்’ கட்டுரையில் இலக்கு என்பது அப்போதைய குறியீடு. நோக்கம் என்பது நீண்டகாலக் குறியீடு என்று இரண்டுக்கும் உள்ள வேறுபாடு விளக்கி உள்ளார். பணத்தை நோக்கமாக நினைப்பது கூட தவறில்லை. ஆனால் அப்படி வரும் பணத்தை பொதுநலத்திற்கு பயன்படுத்திட, பிறருக்கு உதவிட, சேவைகள் செய்திட நோக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். எள்ளல் சுவையுடன் பல தகவல்கள் உள்ளன. அவற்றில் ஒன்று இதோ.


புதிதில்லியில் ஒரு தேநீர்க் கடைக்காரர் கடை முன்பு பலகை ஒன்றை வைத்திருக்கிறாராம். அதில் “காஷ்மீர் பிரச்சனை தீரும் வரை கடன் தருவதற்கில்லை என்று எழுதி வைத்திருக்கிறாராம். அவருக்குத்தான் அந்தப் பிரச்சனை அவ்வளவு சீக்கிரம் தீராது என்று எத்தனை நம்பிக்கை”. உண்மை தான் காஷ்மீர் பிரச்சனை இன்று வரை தீராமலே உள்ளது. கடன் இல்லை என்பதை நேரடியாக எழுதாமல், புத்தியோடு இப்படி எழுதி சிரிக்கவும் வைத்துள்ள தேநீர் கடைக்காரரை பாராட்டத்தான் வேண்டும். இதனை நூலில் எழுதியுள்ள நூலாசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்களையும் பாராட்ட வேண்டும்.


ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கூறிய கருத்தும் நூலில் உள்ளது.


ஒரு வாரத்திற்கு முன்பு ஒருவர் நம்மிடம் கோபமாக நடந்து கொண்டிருந்தால் இன்று சந்திக்கும்போது அவர் கோபப்பட்ட பின்னணியையே மனதில் வைத்தே அவரிடம் பழகுகிறோம். நம் கடந்த காலத்தைக் கையிலேந்திக் கொண்டு சந்திக்கிறோம். உண்மை தான், இந்த இயல்பு மாற வேண்டும். உளவியல் கருத்துக்கள் வாழ்க்கைக்கு பயன்படும் கருத்துக்கள் சுரங்கம் போன்று நூலில் நிரம்பி உள்ளன.


“சாதுவே உருவாக இருந்த கண்ணகி தவறு செய்யாத கணவன் தண்டனை பெற்றதும் வீறு கொண்டு எழுந்து அரண்மனையில் நீதிகேட்ட சம்பவம் இந்த நான்காம் பகுதியைச் சார்ந்தது”.


இப்படி தமிழ் இலக்கியம், மேலை நாட்டு இலக்கியம் என நூல் முழுவதும் மேற்கோள் காட்டி உள்ளார். இராமாயணத்தில் வரும் நல்ல பல கருத்துக்களையும் நிகழ்வுகளுடன் விளக்கி உள்ளார். ‘நல்லதொரு குடும்பம்’ என்ற கட்டுரையில் கூட்டுக்குடும்பத்தின் பயன், தனிக்குடும்பத்தின் பயன், இன்னல் என எல்லாம் விளக்கி உள்ளார். இணையருக்குள் அன்று இருந்த புரிதல், இன்று இல்லாததால் விவாகரத்து, மணவிலக்கு பெருகி வருவதையும் சுட்டி உள்ளார். குடும்பம் ஒரு பல்கலைக்கழகம், குடும்பத்தை புரிதலுடன் எப்படி வாழ வேண்டும் என்பதை பல்வேறு நிகழ்வுகளை எடுத்து இயம்பி விளக்கி உள்ளார்கள். இந்நூல் புரிந்து படித்தால் குடும்பத்திற்குள் குழப்பம் வராது. விட்டுக் கொடுத்தல், புரிந்து வாழ்தல் என வாழ்வியல் கருத்துக்களை திறம்பட எடுத்து இயம்பி உள்ளார். மிகவும் பயன் தரும் வாழ்விற்கு பயன்படும் நூல்.


“குடும்பம் செம்மையாக அமைகிற மனிதன் உலகத்தில் எந்தப் போராட்டத்தையும் வெற்றிகரமாக எதிர்கொள்கிறான். மாபெரும் மனிதர்கள் மனைவியும், கணவனும் குடும்பமும் கொடுத்த ஊக்கத்தினால் தான் உயர்ந்திருக்கிறார்கள்”. குடும்பம் செம்மையானால் எல்லாம் செம்மையாகும், வாழ்வு செம்மையாகும், அர்த்தப்படும் என்பதை மிகவும் அழகாக விளக்கி உள்ளார்.


‘உயர்ந்த உணவு’ கட்டுரையில் உணவின் நோக்கம், பயன் எல்லாம் நூலில் உள்ளன.


அதிகம் சாப்பிடுவது வியாதி, குறைவாகச் சாப்பிடுவது பலவீனம். சரியான அளவில் சாப்பிடுவதே ஆரோக்கியம். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பார்கள். அளவோடு உண்ணுங்கள், வளமாக நோயின்றி வாழுங்கள் என்று உணவு பற்றியும் விரிவாக விளக்கி உள்ளார்.


“ஓசைமயமான உலகம்” கட்டுரையில் இரைச்சல் மிகுந்த உலகில் சில நிமிடங்களாவது அமைதியாக இருப்ப்து நலம் என்பதை விளக்கி உள்ளார். காடுகளுக்கு சென்று காட்டில் உள்ள பறவைகளின் பாடலை ரசிக்கலாம். மலர் தோட்ட அமைதியை உருவாக்க வேண்டுமே தவிர, மயான அமைதியை அல்ல” என்கிறார்.


“சடங்கான சடங்குகள்” கட்டுரையில் சடங்குகளை வகைப்படுத்தி உள்ளார். மரபு ரீதியான வழிமுறைகளை பொருள் பொதிந்து ஏற்படுத்தினார்கள். அதனால் அவற்றை அப்படியே நடத்தாமல் புரிந்து நடத்தல் நலம் என்கிறார். குளியல் எப்படி நடத்த வேண்டும் என்பதையும் எழுதி உள்ளார். நகங்களை சுத்தம் செய்தல், முடி திருத்தல், இப்படி வாழ்வில் நடக்கக்கூடிய சின்னச்சின்ன விசயங்களை எல்லாம் உற்றுநோக்கி நன்மை எவை, தீமை எவை என விளக்கி உள்ளார். சிலையாக நம்மை நாமே செதுக்கிக் கொள்ள உதவிடும் நூல் இது. நம்மை நாம் அறிந்து நம்மை நாமே செம்மைப்படுத்திக் கொண்டு மண்ணில் நல்லவண்ணம் வாழ்வாங்கு வழிகள் சொல்லியுள்ள வளமான நூல். வாங்கி வாசியுங்கள்

கருத்துகள்