நீரில் நிழலாய் மரம்! நூல் ஆசிரியர் : ‘தச்சன்’ இரா. நாகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !





 நீரில் நிழலாய் மரம்!


நூல் ஆசிரியர் : ‘தச்சன்’ இரா. நாகராஜன் !


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


தச்சன் வெளியீடு, 430, டி.என்.எச்.பி. 4வது பிளாக், முகப்பேர் மேற்கு, சென்னை-600 037. பக்கங்கள் : 64, விலை : ரூ.30.


*****

நூலாசிரியர் தச்சன் கவிஞர் இரா. நாகராஜன் ஹைக்கூ கவிதைகளை பல்வேறு இதழ்களில் படித்து வியந்தது உண்டு. நூலாகப் பார்த்ததில் மகிழ்ச்சி. கவிதை உறவு விழாவில் இந்நூலை வழங்கினார் நூலாசிரியர். யார் அணிந்துரை கேட்டாலும், தட்டாமல் தந்து உதவும் இனியவர் நண்பர் கவிஞர் மு. முருகேஷ் இந்நூலிற்கும் அணிந்துரையை அழகுரையாக வழங்கி உள்ளார்.

கையடக்க நூலாக மிக நேர்த்தியாக அச்சிட்டு உள்ளனர், பாராட்டுகள்.

உடலெங்கும்

     வண்ணக் கோலங்கள்

     வண்ணத்துப்பூச்சி!

வண்ணத்துப்பூச்சியைப் பாடாத ஹைக்கூ கவிஞரே இல்லை. எல்லோரும் பாடினாலும் ஒவ்வொரு ஹைக்கூவிலும் ஒவ்வொரு விதமாக மிளிர்கின்றது வண்ணத்துப் பூச்சி.

வளர்ந்தது

     வெட்ட வெட்ட

     ‘சாதி’ மரம்

சாதி ஒழிய வேண்டுமென்று போராடிய தலைவர்களை எல்லாம் சாதிச் சங்கங்கள் சாதி வளையத்திற்குள் அடைத்து விட்டனர். ஒழிய வேண்டிய சாதி, ஒழியாமல் வளர்ந்து கொண்டு இருப்பதைப் பார்த்து நொந்து எழுதிய ஹைக்கூ நன்று.

தங்கத்தின் விலையென

     கூடிக்கொண்டே போகிறது

     முதிர்கன்னியின் வயது

தங்கத்தின் விலையும் பெட்ரோல் விலையும் கூடிக் கொண்டே போகின்றது. வாய்ச்சொல் வீரர்களால் விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தங்கத்தின் விலை ஏற ஏற ஏழைப்பெண்ணின் திருமணமும் தள்ளிக் கொண்டே போவதால் வயதும் கூடிக்கொண்டே இருக்கின்றது. தங்கத்தின் மீதான மோகத்தை மக்கள் குறைக்க வேண்டும். அப்போது தான் தங்கத்தை விரும்பாத நல்ல சமுதாயம் பிறக்கும். அனைவரும் தங்கத்தை வெறுக்கும் நிலை வரவேண்டும் என்பதே என் ஆசை.

மலர்கிறேன்

     நித்தம்

     அவள் புன்னகையில்!

காதலைப் பாடாத கவிஞன் இல்லை. காதலைப் பாடாதவன் கவிஞனே இல்லை. ‘தச்சன்’ இரா. நாகராஜனும் காதலைப் பாடி உள்ளார். காதலியின் புன்னகையால் மலரும் மலராக காதலனைக் குறிப்பிடுவது வித்தியாசமான உவமை.

வெட்டு குத்து

     சேதப்பட்டது

     மனித நேயம்!

கணினி யுகத்திலும் காட்டுமிராண்டிகளைப் போல சாதிச் சண்டையிட்டு மோதிக் கொள்ளும் செய்தியைப் படித்து மனம் வேதனை அடைகிறது. சக மனிதனை மனிதனாக மதித்து நடந்தால் வெட்டு, குத்து, சாதி சண்டை வர வாய்ப்பு இருக்காது. ‘சாதி, மதங்களை விட மனிதநேயம் மேன்மை’ என்பதை மனிதர்கள் உணர வேண்டும்.

நிச்சயமாய் உண்டு

     இலவச சிற்றுண்டி

     பெண் பார்க்கும் படலம்!

பெண் பார்க்க வருகிறோம் என்ற பெயரில் ஒரு கூட்டம் வந்து, இலவசமாக சிற்றுண்டி உண்டு செல்லும் வழக்கம் தற்போது குறைந்து விட்டது என்றாலும் இன்னும் இருக்கிறது. இப்பழக்கமும் ஒழிய வேண்டும். பெண்வீட்டாரை சங்கடப்படுத்தும் பழக்கம் கைவிட வேண்டும். பெண்ணை ஏற்கனவே பார்த்து இருப்பார்கள். முடிப்பதாக இருந்தால் தான் செல்ல வேண்டும். பார்த்துவிட்டு வேண்டாம் என்று சொல்லி வேதனைப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

வேரின் அருமை

     எங்கே புரிய போகிறது?

     இலைகளுக்கு!

பெற்றோரின் அருமை பிள்ளைகளுக்குப் புரியவில்லை என்றும் பொருள் கொள்ளலாம். ஒரு ஹைக்கூ பல பொருள் தரும், அது தான் ஹைக்கூவின் சிறப்பு.

மரங்களை அழிக்காதீர்

     இருப்பிடமின்றித்

     தவிக்கும் பறவைகள்!

சாலைகள் விரிவாக்கம் என்ற பெயரில் வளர்ந்த பெரிய மரங்களை எல்லாம் வெட்டி வீழ்த்தி வருகின்றனர். ஒன்றை வெட்டினால் பத்தை நடுங்கள் என்று நீதிமன்றம் சொன்னது. ஆனால் பத்து மரங்களை வெட்டினாலும் ஒரு மரமும் நடுவதே இல்லை. பறவைகள் தவிப்பது மட்டுமல்ல. மழையும் பொய்த்து விடும் என்பதை உணர வேண்டும்.

சிதறிய குச்சிகள்

     ஒன்றுபட்டன

     பறவைகளின் கூடு!

தூக்கணாங்குருவி கூடு பார்த்தவர்களுக்குத் தெரியும். குப்பையில் கிடக்கும் குச்சிகளை வைத்தே மிக நேர்த்தியாக கூடு கட்டி விடும். நூலாசிரியரும் பறவையின் கூட்டை உற்று நோக்கி வடித்த ஹைக்கூ நன்று. பாராட்டுகள்.

யார் மீது ஆசை

     புற்கள் மீது

     பருக்களாகப் பனித்துளிகள்!

புற்களின் மீதுள்ள அழகிய பனித்துளிகளை பருக்களாக கற்பனை செய்த கற்பனை அழகு. புல்லையும் பனித்துளிகளையும் மனக்கண்ணில் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர் கவிஞர் தச்சன் இரா. நாகராஜன்.

உயிர் போன பின்பு

     சங்கீதமிசைக்கிறது

     மூங்கில்!

மரமாக இருந்த மூங்கில் வெட்டப்பட்டு சூடு வைக்கப்பட்டு துளையிடப்பட்டு புல்லாங்குழல் ஆனதும் இனிய இசையை வழங்குவது போல மனிதர்களும் துன்பத்திற்கு வருந்தாமல் பொறுமை காத்தால் இன்பம் பிறக்கும் என்ற குறியீடாகவும் இந்த ஹைக்கூவை பொருள் கொள்ள முடியும்.

பூக்களை

நசுக்காதீர்கள்

நர்சரி குழந்தைகள்!

உளவியல் மருத்துவர்கள் ஐந்து வயது வரை குழந்தைகளை வீட்டில் வைத்து வளர்ப்பதே சிறப்பு என்கின்றனர். ஆனால் நாட்டு நடப்போ இரண்டு வயது குழந்தையைக் கூட பள்ளிக்கு அனுப்பி விடுகிறார்கள். பூக்களை அல்ல மொட்டுக்களையே நசுக்கி விடுகின்றனர் பெற்றோர்கள்.

ஆசை

     தேங்காய் துண்டு மீது

     அகப்பட்ட எலி!

‘ஆசையே அழிவிற்கு காரணம்’ என்ற புத்தரின் போதனை முற்றிலும் உண்மை. ஆசையால் தான் பலர் அழிந்து வருகின்றனர்.  தூண்டில் புழுவிற்கு ஆசைப்பட்டு மீன் மாட்டுவது போல தேங்காய் துண்டுக்கு ஆசைப்பட்டு கூண்டில் மாட்டிய எலியின் வாழ்வும் முடிந்து விடுகிறது.

சிந்தனையை விதைக்கும் ஹைக்கூ கவிதைகள் நூல் முழுவதும் நிரம்பி உள்ளன. பதச்சோறாக சில மட்டும் மேற்கோள் காட்டி உள்ளேன். ‘தச்சன்’ என்ற இதழ் தொடங்கி நடத்திய ஆசிரியர், பெயரோடு ‘தச்சன்’ என்று சேர்த்துக் கொண்டார் கவிஞர் இரா.நாகராஜன். தச்சன் மரத்தை செதுக்குவது போல சொற்களைச் செதுக்கி அழகிய ஹைக்கூ வீடு செய்துள்ளார். பாராட்டுகள்.

கருத்துகள்