புனிதம் தேடும் புதினம் நூல் ஆசிரியர் : கௌதமன் நீல்ராஜ் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

 




புனிதம் தேடும் புதினம்

 நூல் ஆசிரியர் : கௌதமன் நீல்ராஜ்

  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி  


நூல் வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
இரண்டாம் முதன்மைச் சாலை, தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600 113.
பக்கங்கள் : 110 விலை : ரூ.70.

*****
      ‘புனிதம் தேடும் புதினம்’ நூல் ஆசிரியர் கௌதமன் நீல்ராஜ் அவர்கள் மூன்றாம் பாலினமான திருநங்கையின் வாழ்க்கையை சிறுகதையாக, புதினமாக எழுதி உள்ளார். பாராட்டுகள். திருநங்கையாக மாறியவர்கள் படும் இன்னலை உடல்ரீதியாக, மனரீதியாக சமுதாயத்தால் படும் இன்னல்களை உற்றுநோக்கி உணர்ந்து வலிகளை நன்கு பதிவு செய்துள்ளார்.
      உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் ஆகியோர் அணிந்துரை நல்கி உள்ளனர். முனைவர் பெண்ணியம் செல்வகுமாரி, திருநங்கை பாரதி கண்ணம்மா, நிறங்கள் சிவா ஆகியோர் வாழ்த்துரை வழங்கி உள்ளனர்.
      சொற்கோடன் என்ற ஆண்மகன் சிறுநகை என்ற பெண்ணாக திருநங்கையாக மாறி அடையும் இன்னல்களை சிறுகதையாக வடித்துள்ளார். ஆணாகப் பிறந்தவர்கள் குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு பெண்மை குடியேறி பெண்குணம் வந்து பெண் போல வேடம் அணிவதை பெற்றோர்கள் யாருமே ஏற்றுக்கொள்வதில்லை. பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு வெளியேறி திருநங்கைகளுடன் சேர்ந்து திருநங்கையாகவே மாறி வாழ்ந்து விடுகின்றனர். அவர்களது வாழ்க்கையை, துன்பத்தை, துயரத்தை, கதையாக வடித்துள்ளார்.
      பெற்றோர்கள் பல வருடங்கள் கழித்து சொற்கோடன் என்ற மகனை சிறுநகை என்ற மகளாகவே இறுதியில் ஏற்றுக்கொள்வது நல்ல முடிவு. இக்கதையைப் படிக்கும் பெற்றோர்கள், திருநங்கையாக மாறியவர்களை வெறுத்தவர்கள், விரும்பி ஏற்றுக்கொள்வார்கள். மனிதநேயம் விதைக்கும் சிறந்த சிறுகதை.
      தமிங்கிலச் சொற்கள் இன்றி நல்ல தமிழில் தெளிந்த நீரோடை போன்ற நடையில் எழுதி உள்ளார். ஊர் பெயர்கள் கூட நல்ல தமிழில் சூட்டி உள்ளார். ஆங்கிலச் சொற்கள் கலந்து கதை எழுதும் கதையாசிரியர்கள் அனைவரும் இக்கதையினைப் படித்து திருந்தி நல்ல தமிழில் எழுதிட முன்வர வேண்டும்.
      நல்ல தமிழ்நடையில் இருப்பதாலும் மனிதநேயம் விதைப்பதாலும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமே இந்த நூலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது சிறப்பு. இயற்கை எழுதிய கவிதையில் வந்த எழுத்துப்பிழை தான் திருநங்கைகள்.  அவர்களாக வேண்டு-மென்று பெண்களாக மாறவில்லை. இயற்கை அவர்களை பெண்களாக மாற்றி விடுகிறது. அவர்களுடைய மன உணர்வையும் உடல் அமைப்பையும் சமுதாயம் புரிந்து கொண்டு மதிப்பளிக்க விழிப்புணர்வு தரும் விதமாக கதையை செதுக்கி உள்ளார். பாராட்டுகள். இப்படி ஒரு கதை இதுவரை நான் படித்ததே இல்லை. கவிதை நடையில் சில இடங்களில் கவிதைகளும் உள்ளன. குறிப்பாக பிறசொல் கலப்பின்றி நல்ல தமிழில், நல்ல நடையில் எழுதி உள்ளார். பாராட்டுகள்.
      நூலாசிரியர் தன்னுரையில் சங்க இலக்கியங்கள் காலத்திலேயே திருநங்கைகள் வாழ்ந்து உள்ளனர் என்பதற்கு சான்றாக சங்க இலக்கியங்களில் உள்ள பாடல் வரிகளை மேற்கோள் காட்டி உள்ளார். திருவாசகம், திருமந்திரம், திருக்குறள், நாலடியார் வரிகளை எடுத்து எழுதிஉள்ளார்.
      திருநங்கைகளின் வாழ்க்கையை உற்றுநோக்கி ஆராய்ந்து, அவர்கள் பலரிடம் நேர்முகம் கண்டு, இடர்பாடுகளை கேட்டறிந்து, ஆய்வுநோக்கில் ஆய்ந்து அறிந்து ஆராய்ந்து சிறுகதை எழுதி உள்ளார். மேம்போக்காக நுனிப்புல் மேயாமல், அவர்களது வாழ்வில் நடக்கும் மாற்றங்களை அறிந்து கதையாக வடித்துள்ளார்.
      இந்த நூல் படித்தால் திருநங்கைகளின் மீதான மதிப்பு சமுதாயத்தில் ஓங்கும். கேலி, கிண்டல் மறையும். அவர்களையும் சக மனுசியாக மதிக்கும் நிலை வரும். சமுதாய மாற்றத்திற்கு வழிவகுக்கும். விழிப்புணர்வு விதைக்கும் விதமாக சிறுகதை வடித்துள்ளார். அலுவலகம் என்ற சொல்லைக் கூட பயன்படுத்தாமல் ‘பணிக்கூடம்’ என்கிறார்.  பள்ளிக்கூடம் என்பது போல பணிக்கூடம் என்ற நல்ல தமிழ்ச்சொல்லை பயன்படுத்தி உள்ளார். மெக்கானிக் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு ‘பொறி அறிஞன்’ என்கிறார். புதிய சொற்களை, நல்ல சொற்களை அறிமுகம் செய்துள்ளார்.
      சிறுகதை படிக்கும்போதே நம் மனக்கண் முன்னே காட்சியாக விரிகின்றது. கதை படிப்பது போல அல்லாமல் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தரும் நல்ல எழுத்துநடை.
      திருநங்கையாக மாறியவர்கள் அவர்களாக மாறவில்லை. இயற்கை அவர்களை மாற்றி விடுகிறது. இது அவர்களுடைய குற்றமல்ல. இயற்கையின் குற்றம். எனவே அவர்களைத் தண்டிக்காதீர்கள், வெறுக்காதீர்கள், பிரியாதீர்கள், அவர்களை அவர்களாகவே ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற படிப்பினைத் தரும் நல்ல சிறுகதை.
      நிஜ வாழ்க்கையில் திருநங்கையை, பெற்றோர்கள் யாருமே ஏற்றுக்கொள்வதில்லை என்பதே நடைமுறை உண்மை. இந்நிலை மாற வேண்டும். புரிந்து கொள்ளுங்கள், அவர்களை வெறுக்காதீர்கள், புறக்கணிக்காதீர்கள், கேலி செய்யாதீர்கள், கிண்டல் செய்யாதீர்கள், துன்பம் தராதீர்கள் என பல படிப்பினை தரும் கதையாக உள்ளது.
      ஆண்மை, பெண்மையாக மாறி விடுவதால் அவர்களுக்குள் உள்ளே பெண்மை காதல் வயப்படுவதும் உண்டு என்பதையும் கதையில் சொல்லி உள்ளார். மொத்தத்தில் ‘திருநங்கைகள்’ மீது நன்மதிப்பை வரவழைத்து மனிதநேயம் காக்கும் நல்ல சிறுகதை பாராட்டுகள்.

--

கருத்துகள்