மஞ்சள் நிறத்தில் ஒரு வெட்டுக்கிளி! நூல் ஆசிரியர் : கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி





 மஞ்சள் நிறத்தில் ஒரு வெட்டுக்கிளி!


நூல் ஆசிரியர் : கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் !


  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி  


வெளியீடு : மின்னல் கலைக்கூடம், 117, எல்டாம்ஸ் சாலை, சென்னை-600 018.
 பக்கங்கள் : 64, விலை : ரூ. 50

******

நூலாசிரியர் கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் அவர்கள் பொள்ளாச்சி என்ற ஊரின் பெருமைகளில் ஒன்றானவர். பொள்ளாச்சி இளநி மட்டுமல்ல இவரது ஹைக்கூவும் இனிக்கும். கவிதை, ஹைக்கூ என எழுதும் பன்முக ஆற்றலாளர். இந்த நூல் நூலாசிரியரின் 14வது நூல். நூலின் தலைப்பே வித்தியாசமாக வைத்துள்ளார். பாராட்டுகள். 


மின்னல் கலைக்கூடம் புகைப்படங்களுடன் மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளது. அட்டைப்பட வடிவமைப்பும் அருமை. இந்த நூல் பொதிகை மின்னல் மாத இதழ் கவிதைப் போட்டியில் வென்றமைக்கு பரிசாக அனுப்பி வைத்து இருந்தார் பதிப்பாளர் கவிஞர் வசீகரன்.


கவிஞர்கள் பொன் குமார், மு.முருகேஷ் இருவரும் அணிந்துரை வழங்கி சிறப்பித்து உள்ளனர்.


கட்டிய புது சீட்டில்
மனித கரையான்கள்
எதிர்மறை நண்பர்கள்!


உண்மை தான். மனித கரையான்கள் தான் எதிர்மறை சிந்தனையாளர்கள்.  கட்டி முடித்துவிட்டு, வீட்டைப் பார்த்து விட்டு, அடுப்படி இங்கு வைத்து இருக்கலாம், படுக்கை அறை அங்கு வைத்து இருக்கலாம், வாஸ்து சரியில்லை என்று மனத்தை நோகடிக்கும் வம்பர்கள் உண்டு.


எரியும் சுடர்
      அடங்குகிறது
      பிரியும் உயிர்.


மிகச் சுருக்கமான சொற்களை வைத்தே உயிர் பிரிவதை காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர் பொள்ளாச்சி குமாரராஜன்.


மின்வெட்டு இரவு
      வெளிச்சத்தில்
      மின்மினி!


மின்வெட்டு இரவில் மின்மினிப் பூச்சி பறந்து வருவதை ரசிப்பதும் ரசனை தான். அற்ப ஆயுள் என்ற போதும் மகிழ்ச்சியோடு பறந்து மகிழ்ந்து வாழ்ந்து மடிகின்றன மின்மினிப் பூச்சிகள்.


ஆத்மதிருப்தி
      சோறு போடாத தொழில்
      இலக்கியம்!


என்ன செய்றீங்க எழுத்தாளராக உள்ளேன்! என்று சொன்னால், அப்ப சோத்துக்கு என்ன செய்றீங்க? என்று நகைச்சுவை ஒன்று சொல்வார்கள். அதுபோல எழுத்தாளர்கள் அனைவருக்கும் எழுத்தால் வருமானம் வந்து விடுவதில்லை. புகழ்பெற்ற ஒரு சிலருக்கு மட்டுமே வருமானம் வருகின்றது.


கை
      விலங்கு
      கடன்!


‘கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பார்கள். அதுபோல இந்த கொரோனா காலத்தில் வருமானம் இன்றி கடன் கட்ட முடியாமல் தவிக்கும் குடும்பங்கள் கோடி. மூன்றே சொற்களின் மூலம் கடனால் வரும் துன்பத்தை மிக நுட்பமாக உணர்த்தி உள்ளார். பாராட்டுக்கள். கடன் வாங்கினால் தூக்கமும் பறிபோய் விடும் என்பது உண்மை.


என்றும் என்னுடன்
      இயல்பாக தினம் வருவது
      பசி!


பசி பற்றி இவ்வளவு இயல்பாக, எளிமையாக சொல்லிவிட முடியாது. தினமும் வரும், வேளா வேளைக்கு வரும் பசியை நன்கு உணர்த்தி உள்ளார். பசி பற்றி ஐந்து ஹைக்கூ எழுதி உள்ளார். மரணம் பற்றியும் பல ஹைக்கூ எழுதி உள்ளார். ஓரெ பொருளில் பல் ஹைக்கூக்கள் எழுதி உள்ளார். சாதி பற்றியும் பல ஹைக்கூக்கள் எழுதி உள்ளார். ஆழ்ந்து, சிந்தித்து மிக இயல்பாக ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ளார்.


கனவு மெய்படாத
      தேசத்தில் ஏது
      சுதந்திரம்?


உண்மை தான். இளைஞர்களின் கனவு மெய்படவில்லை பல கனவுகளுடன் பட்டம் பயின்றவர்கள் வேலை கிடைக்காத காரணத்தால் கனவு நனவாகாமல் தவித்து வருகின்றனர். வேலைஇல்லாத் திண்டாட்டம் ஒழிந்தபாடில்லை. வறுமையும் நீங்கியபாடில்லை. வல்லரசாவோம் என்ற வாய்ச்சொல் வீரம் மட்டும் குறைந்தபாடில்லை.


நிமிட
      சொப்பனம்
      விபத்து!


சாலையில் வாகனத்தில் செல்லும்போது சில வினாடிகள் இமை மூடினால் நடந்து விடும் விபத்து. கவனமாக சாலையில் செல்ல வேண்டும். சில வினாடிகள் இமை மூடினால் நிரந்தரமாக இமை மூடிவிட வேண்டிய நிலையில் விபத்து நடப்பதுண்டு.


வீசிய வலைகளில்
      மீன்கள் இல்லை
      நச்சாய் கடல் நீர்!


கடலையும் நச்சாக்கி விட்டார்கள், மீனவன் வலை விரித்தால், மீன்கள் வருவதில்லை என்று மீனவன் துயரத்தை சுற்றுச்சூழல் மாசை ஹைக்கூவாக வடித்துள்ளார்.


கோடீஸ்வரனும்
      யாசித்து நிற்கிறான்
      மழலை முத்தம்!


தாத்தா பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் பேரனிடமோ, பேத்தியிடமோ முத்தம் யாசித்தே பெற வேண்டும். தந்தாலும் தரலாம், தர மறுத்தாலும் மறுக்கலாம், குழந்தையின் மனநிலையைப் பொறுத்தது.


அப்பா இறந்தபின்
      நினைவில் ஊசலாடுகிறது
      பாடாத ரேடியோ!


வானொலி பாடாவிட்டாலும் அப்பாவின் நினைவாக அம்மாவின் நினைவாக அப்படியே வைத்து விடுவதுண்டு. இப்படி சின்னச்சின்ன விசயங்களைக் கூட உற்று நோக்கி ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ளார். இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிக்கொண்டே நூல்கள் எழுதிக்கொண்டே இருக்கும் கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் அவர்களுக்கு பாராட்டுகள்.


கருத்துகள்