இவர்தான் கோவில்பட்டி கொண்டைய ராஜூ

 









இவர்தான் கோவில்பட்டி 

கொண்டைய ராஜூ

அந்தக் காலத்தில் புகழ் பெற்ற ஓவியர். இவர் வரைந்த படங்கள்தான் சிவகாசி காலண்டர்களில் அச்சிடப்பட்டன

 சங்கரன்கோவில் நகர்மன்ற இலச்சினையை வரைந்த வரும் இவர்தான். அதற்காக என் தந்தை

அவ்வப்போது இவர் ஓவியக்கூடத்திற்குச் செல்வார்.

அப்போது நானும் உடன் சென்று 

இவரைப் பார்த்து இருக்கின்றேன்.

இவரைப் பற்றி ரெங்கையா முருகன் என்பவர் எழுதிய பதிவு 

தமிழ்ச் சொற்களைத் தனித்தனியாக முழுமையாக எழுதி  இருக்கின்றேன்.

வடமொழிச் சொற்களை நீக்கி இருக்கின்றேன்.

எனவே படிக்க எளிமையாக இருக்கும்.

படியுங்கள் 

உங்கள் கருத்துகளை எழுதுங்கள்...

ரெங்கையா முருகன் பதிவு

திருத்தங்களுடன்..

கடவுள் படங்கள் காலண்டர் வரைந்த பிதாமகன் ஓவியர் கொண்டையராஜு ஆய்வுக்கு வழிகாட்டியவர்கள் 

(இன்று ஓவியர் கொண்டையராஜூ 

பிறந்த நாள்  07/11/1898)

கடந்த 2004 ம் ஆண்டு 

உலகப் புகழ் பெற்ற கலை விமர்சகர் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலையின் கலை இலக்கியத் துறையின் மேனாள் தலைவருமான பேரா.  ஜியோந்திர ஜெயின் அவர்களுடன் இணைந்து சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை பயணம் மேற்கொள்வதற்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது. 

பயணத்திற்கு இடையே காலண்டர் ஓவியங்கள் குறித்தான பேச்சு அடிபட்டது. 

அவர், நீ எந்த ஊர்? என வினவினார்.

 காலண்டர் ஓவியங்களுக்குப் பெயர் பெற்ற சிவகாசி அருகில் என்றேன். 

ஓவியர் கொண்டையராஜூ குறித்து ஏதாவது தெரியுமா என்றார். 

தெரியாது என்றேன்.

பின்பு ஓவியர் கொண்டையராஜு குறித்து விரிவாக என்னிடம் பேசினார். 

அவர் கொடுத்த விளக்கம் என்னை காலண்டர் ஓவியங்கள் குறித்த ஆராய்ச்சிக்கு வித்திட்டது. 

மேலும் புகழ்பெற்ற கலை விமர்சகர் ஜியோந்திர ஜெயின் மாறுபட்ட முறையில் ஓவியங்களின் பார்வையை அணுகியவர். 

எல்லோரும் ஓவியத்தைக் குறித்துப் பேசுகையில் 

ஓவியர்களை முன்னிலைப்படுத்தி அணுகும் முறையைக் குறிப்பிடுவார். 

நம் ஊர் கலை விமர்சகர் திரு. இந்திரன் அவர்கள் 

ஜெயினை நேர்காணல் கண்டு 

தீராநதியில் வெளிவந்துள்ளது.

ஓவியர்களின் மூலமாக அவர்களது படைப்புகளை அணுக

 “அதர் மாஸ்டர்ஸ்” என்றபுத்தகம்

தனிப்பட்ட கலைஞர்கள்

 மிகச் சிறந்த படைப்பாளர்களின் பங்களிப்புகளை இனம் கண்டு எழுதி வெளிவந்த மிகச் சிறந்த நூல். 

இது போன்ற நூல்களின் வருகைக்குப்   பின்பு,

ஓவியங்கள் வரைந்த கலைஞர்களுக்கு தனிப்பட்ட அடையாளம் உருவாக காரணமாக இருந்தது.

இந்த நோக்கில்தான்

 கொண்டைய ராஜு என்ற தனிப்பட்ட கலைஞரின் ஓவியப் பாணி குறித்தான ஆய்வுகளுக்கு உந்தப்பட்டேன்.

ஓவியர் கொண்டையராஜூவை 

முதன் முதலில் ஆய்வு செய்து வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் கனடாவில் இந்தியப் பண்பாடு  குறித்த கல்வியை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருபவரும், 

சிவகாசி காலண்டர் ஓவியங்களைச் சேகரித்து கனடா தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வருபவருமான மானுடவியல் ஆய்வு அறிஞர் ஸ்டீபன் எஸ். இங்க்லீஸ். 

இவருடைய

“ Suitable for Framing: The work of Modern Master” என்ற ஆய்வுக் கட்டுரை 

கொண்டையராஜூ என்ற ஓவியரை மேற்கத்திய ஆய்வு உலகுக்கு அறிமுகப் படுத்தியது.

இங்க்லீஸ் எழுதிய கட்டுரையைப் படிக்க நேர்கையில் 

எனக்கு நெருக்கமான உறவினர்

ஓவியர் கொண்டையராஜூ மாணவர் என்பது தெரிய வந்தது. 

இங்க்லீஸ் அவர்கள் குறிப்பிடுகையில் “கோவில்பட்டி மாரீஸ் (கொண்டைய ராஜுவின் ஒரு மாணவரானஓவியர் டி.எஸ். சுப்பையா அவர்களின் மகன் மாரீஸ்வரன்) சிவகாசி காலண்டர் ஓவியங்களின் வரலாற்றை ஓவிய அமைப்பு, வண்ணம் ஆகியவற்றைக் கொண்டு சரியாக அடையாளப் படுத்துபவர் என்று காலச்சுவடு   நேர்காணலில குறிப்பிடுகின்றார்.

இந்த கொண்டையராஜூ ஓவிய பாணி ஆராய்ச்சியில் என்னை முழுமையாக வழிநடத்திச் சென்றவர் 

அண்ணன் ஓவியர் மாரீஸ். 

சிவகாசி காலண்டர் ஓவியங்கள் அமைப்பு, நேர்த்தி, வண்ணங்களின் செயல்பாடு, ஓவியங்கள் உருவாக்கும் முறை, ஓவியர்களுக்கும், அச்சக உரிமையாளர்களுக்குமான உறவு, ஓவியர்களுக்கும் விற்பனையாளர்களுக்குமான உறவு, 

வணிக நிறுவனங்களின் காலண்டர்கள், ஓவியர்களின் காப்பு உரிமை  போன்ற தரவுகளை  

மிகத் துல்லியமாக சொல்லிக் கொடுத்து வழிகாட்டியவர் கோவில்பட்டி

 மாரீஸ் அண்ணன். 

அதோடு நில்லாமல் ஸ்டீபன் எஸ். இங்க்லீஸ் உடன் தொடர்பை எனக்கு ஏற்படுத்தி 

அவரை நேர்காணல் காணச் சொல்லி வழி ஏற்படுத்தி தந்தவரும் மாரீஸ் அவர்கள். 

எனது கொண்டையராஜூ குறித்தான ஆய்வுக்கு 

கொண்டையராஜூ சீடர்களின் வழித்தோன்றல்கள் இடையே சுமார் 20 மணி நேர நீண்ட நேர்காணல்கள், 

50க்கும் மேற்பட்ட கொண்டையராஜூ மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் அனைத்தும் கொடுத்தார்.

 ( சிறப்பு நேர்காணல்கள்: 

மாரீஸ், டி.எஸ்.மீனாட்சி சுந்தரம் பிள்ளை,(ஓவியர் கொண்டைய ராஜூவின் மாணவர், நாடக கலைஞர், மதுரை திருநகரில் வசிப்பவர்) 

ஓவியர் பாலாஜி சீனிவாசன், ஓவியர் மருது, ஓவியர் பூபதி, ( ஓவியர் கொண்டையராஜூவை இறுதிக் காலத்தில் கவனித்துக் கொண்டவர்)

திரு. சோமசுந்தரம் (கொண்டையராஜுவின் முதன்மை மாணவர் மு.ராமலிங்கம் மகன்), ஸ்டீபன் எஸ். இங்க்லீஸ் ஆகியோர்). 

இந்த நேர்காணல்களில் சிலவற்றை மிக்சிகன் பல்கலைப் பேராசிரியர் 

திரு. சுவர்ணவேல் அவர்கள் உதவியுடனும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 

வெவ்வேறு காலகட்டங்களில் கொண்டையராஜூ ஓவியப்பாணி குறித்து தினமணி தீபாவளி மலர், கலைமகள் தீபாவளி மலர், தி இந்து, உயிர் எழுத்து போன்ற இதழ்களில் கட்டுரை எழுதியுள்ளேன். 

கனடா நாட்டுப் பல்கலை பேராசிரியர் ரவி வைத்தீஸ்வரன் மற்றும் ரா.ஸ்தானிஸ்லாஸ் இணைந்து தொகுத்த நூலில் 

கடவுள் காலண்டரும் சமூக வரலாறும் என்ற ஒரு நீண்ட ஆய்வுக் கட்டுரை வரைந்துள்ளேன். 

இருந்தாலும் ஒரு ஆய்வுப் புத்தகமாக எழுதி வெளியிடும் சூழலில்தான்

 கடந்த 2015 ம் ஆண்டு சென்னையைச் சீரழித்த மழை வெள்ளத்தில் ஓவியர் கொண்டையராஜூ குறித்தான அனைத்துத் தரவுகளான கையெழுத்துப் படிகள், 

ஒலிப் பேழைகள், கொண்டையராஜூ சீடர்களின் அருமையான வண்ணக் கடவுள் ஓவியங்கள், நேர்காணலின் பெயர்ப்பு எழுத்து வடிவங்கள் அனைத்தும் வெள்ளப் பெருக்கில் சுருண்டு போய் அழிந்து போய்விட்டது. 

தற்பொழுது மீண்டும் அந்த ஆளுமைகளைச் சந்தித்து நேர்காணல் எடுப்பது என்னைப் பொறுத்தமட்டில் இயலாத ஒன்று விட்டது. 

இருந்தாலும் நினைவுகள் ஊடாக அனைத்து நேர்காணலின் செய்திகளை உண்மைத் தன்மையுடன் மீட்டு வருகின்றேன். 

கோவில்பட்டி மாரீஸ் அண்ணனின் அயராத முயற்சி என்னை வழிநடத்திவிடும் என்ற தன்னம்பிக்கையில் 

ஓவியர் கொண்டையராஜூ ஆய்வுப்பணி சென்று கொண்டு இருக்கின்றது. 

இந்தியாவில் விம்கோ கம்பெனி மூலமாக சிவகாசிக்கு தீப்பெட்டி தொழில் நுட்பம் வருகின்றது. 

தீப்பெட்டி தொழிற்சாலைக்காக லேபிள் செய்வதற்கு அச்சுப்பொறிகள் தேவைப்பட்டன. 

அவை, தீப்பெட்டிக்குத் தேவையான லேபிளை சில மணி நேரங்களில் அச்சடித்து விடுகின்றது. 

மீதி நேரங்களில் அந்தப் பொறிக்கு வேலை இல்லாமல் இருக்கின்றது. 

 வேலை கொடுக்கவும், தொடர்ந்து இயக்குவதற்கும் என்ன வழி என்று யோசித்த வேளையில் பிறந்ததுதான் வணிக விளம்பரங்களுக்கான காலண்டர் படங்கள்.

நாடகக் கம்பெனியில் திரைச்சீலைகள் வரைந்து கொண்டு இருந்தார் கொண்டையராஜூ.

சினிமா வருகைக்குப் பின்பு நாடகக் கம்பெனி நொடிக்கின்றது. 

நாடகக் குழு கலைக்கப்பட்டு 

1942 வாக்கில் தனது சீடர்களுடன் கோவில்பட்டிக்கு வருகை தந்து 

தேவி ஆர்ட் ஸ்டுடியோ நிறுவி 

போட்டோ ஸ்டுடியோவுக்குத் தேவையான பேக்ரவுண்ட் டிசைன் வரைந்தார். 

இந்தியா முழுமையும் சென்று அடைந்தது.

 காலண்டர்களுக்குத் தேவையான கடவுள் ஓவியங்களை 

பம்பாய் சென்று ஓவியர்களைக் கண்டு வரைந்து வந்தனர். 

இச் சமயத்தில் ஓவியர் கொண்டையராஜூ வரைந்த சக்தி படத்தை 

சிவகாசியில் அச்சிடச் சென்ற இடத்தில் அப்படத்தை வரைந்தவர் யார் என விசாரித்தனர். 

பின்பு சிவகாசி அச்சக முதலாளி 

ஓவியர் கொண்டையராஜூவைச் சந்தித்து விருதுநகர் அம்பாள் காபிக்காக முதல் காலண்டர் படம் வரைந்தார். 

அப்படத்தை வரைந்தவர் கொண்டையராஜூவின் முதன்மைச் சீடர் மு.ராமலிங்கம். 

கொண்டையராஜூ சீடர்களான ஓவியர்கள் கடவுள் சார்ந்த காலண்டர் படங்களுக்கு வட்டார தெய்வத்தை முன்னிறுத்தினர்.

 மதுரை மீனாட்சியம்மன், 

காஞ்சி காமாட்சியம்மன், ஆண்டாள், பழனி முருகன், கன்யாகுமரி பகவதி போன்ற படங்களை வரைந்து அளித்தனர்.

 தனக்கென ஒரு பாணியை  உருவாக்கிக் கொண்டனர். 

ரவிவர்மாவின் சாயல்களாகத் தொடங்கிய காலண்டர் படங்கள் 

சிவகாசியின் தேவையை நிறைவு செய்தன. 

பொதுவாக மூன்று வண்ணங்கள் 

நீலம், மயில் கழுத்து நீலம், மெஜந்தா ஆகிய வர்ணங்கள் தாங்கிய படங்கள் வரைந்தனர். 

மேலும் அந்த வட்டாரத்துக்கு உரிய நடப்பைப் பொறுத்து

 வண்ணங்கள் தீர்மானிக்கப்பட்டன.

மீதி..ஶ்ரீ.

விரைவில் வெளியாகவிருக்கும் எனது ஓவியர் கொண்டையராஜூ பாணி 

கடவுள் காலண்டர் புத்தகத்தில் ……..

படம் 

ஸ்டீபன் இங்க்லீஸ் உடன் ரெங்கையா முருகன்

வாட்ஸ் அப் பதிவு

அருணகிரி

9444393903

கருத்துகள்