உதிராப் பூக்கள் ! (கவிஞர் இரா.இரவியின் தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : “தமிழ்ச்செம்மல்” சு. இலக்குமணசுவாமி, அரசு விருதாளர், திருநகர், மதுரை-5.

 






உதிராப் பூக்கள் !

(கவிஞர் இரா.இரவியின் தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்)

தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி !

நூல் மதிப்புரை : “தமிழ்ச்செம்மல்” சு. இலக்குமணசுவாமி,

                அரசு விருதாளர், திருநகர், மதுரை-5. 


நூல் வெளியீடு : வானதி பதிப்பகம், தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. பேச : 044-24342810. பக்கங்கள்:64 விலை:ரூ70.


*****

      இரவி என்றால் சூரியன் என்ற பொருள் உண்டு. எப்படி சூரியனின் ஒளிக்கதிர்கள் உலகெங்கும் பவனிவந்து ஒளிக்கற்றைகளை வீசி, வெளிச்சம் காட்டுகிறதோ, அதே போல், துளிப்பா (ஹைக்கூ) மூலம் தன் திறமைகளை வெளிச்சத்தைப் பரப்பியுள்ளார். நிலையான சூரியன் ஒளி போல, கவி உலகில் நிலையான நற்பெயரில் உலா வந்து கொண்டு இருக்கின்றார்.

      சொல்ல வேண்டிய கருத்துக்களை தன் பா மூலம் மூன்றே வரிகளில் கூறி, தன்னுடைய ஆற்றலைப் பேராற்றலாக முத்திரைப் பெற்றுள்ளார்.

      தமது கருத்தின் நிலைப்பாட்டைத் தராசுதட்டின் முள் போல, கவியை வடித்துள்ளார். உண்மையில், இவரை உளமாராப் பாராட்டியே, இவரை மகிழ்விக்க வேண்டும்.

      “கருவறை உள்ள

      நடமாடும் கடவுள்

      தாய்”.

      தாயின் பெருமையையும், தாய்மையையும் சுட்டிக் காட்டுவதில் தன் சுட்டுவிரலாகத் திகழ்கிறார், மிக மிக அருமை ...

      “பொம்மை உடைந்தபோது

      மனசும் உடைகிறது

      குழந்தைக்கு”.

      குழந்தை வயதிலேயே உருவாகிறது “மனவலி” என்பதைத் தெளிவுடன் கூறிய பாங்கு மிகவும் பாராட்டுக்குரியது.

      “பலர் வியர்வை

      சிலருக்குப் பன்னீர்

      லாட்டரி”.

      சுரண்டலாய ஆதாயம் பெறும் அரசியலையும், அரசியல்வாதி-யையும்  நாசுக்காகக் கூறியிருப்பது மிக அருமை.

      “விதைத்த நிலத்தில்

      பாய்ச்சிய நீரில்

      பாலிதீன் பைகள்”.

மாசுக் கட்டுப்பாட்டை சீர்குலைக்கும், திருந்தாத ஜென்மங்கட்கு சரியான சாட்டையடி தந்திருக்கிறார், கவிஞர்.

      திறமையெனும் களம் புகுந்து, கவிகளால் தளம் பதிக்கும் தம்பி இரா. இரவியை வாழ்த்துவதில் பெருமை.

இடம் : திருநகர்

நாள்  : 09-11-2020

கருத்துகள்