துளிப்பாவில் குறும்பாவில் வாழ்கிறார் மித்ரா அம்மா!
கவிஞர் இரா. இரவி.
அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு புகழ் சேர்த்தாய்
அம்மா என்றே அனைவரும் அழைத்தனர் உன்னை!
உண்ணாமலை என்பது உனது இயற்பெயர்
உன்னை மித்ரா என்றே உலகம் அறியும்
உழவர் குடும்பத்தில் பிறந்து பேராசிரியராக உயர்ந்தாய்!
ஹைக்கூ கவிதைகளை ஆய்வு செய்து முனைவரானாய்
ஹைக்கூ உலகில் தனி முத்திரை பதித்து வென்றாய்!
வளரும் கவிஞர்களை தாயுள்ளத்துடன் வளர்த்துவிட்டாய்
வருடாவருடம் விருதுகள் வழங்கி பாராட்டி மகிழ்ந்தாய்!
இள முனைவர்கள், முனைவரகள் உருவாக்கி மகிழ்ந்தாய்!
முப்பத்தி மூன்று கவிதை நூல்களை எழுதினாய்
முத்தான ஆறு ஆய்வு நூல்களையும் வடித்தாய்!
ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழிபெயர்ப்பானது உனது ஹைக்கூக்கள்
அனைவரின் பாராட்டைப் பெற்றது உனது படைப்பு!
வெற்றி பெண்மணி சிறந்த பெண்மணி விருதுகள் பெற்றாய்
வலம் வந்தாய் சிங்கப் பெண்ணாக அறச் சீற்றத்துடன்!
ஹைக்கூ விருதை எனக்கும் திருச்சியில் வழங்கினாய்
ஹைக்கூ இரவி என்று அழைத்து நூல்களுக்கு மதிப்புரைகள் தந்தாய்!
ஹைக்கூ உலகில் மகாராணியாகவே வலம் வந்தாய்
ஹைக்கூ உலகில் உன்னிடம் வெற்றிடமானது வேதனை
சராசரி வாழ்வு வாழாமல் சாதனை வாழ்வு வாழ்ந்தாய்
சங்கநாதம் முழங்கி ஹைக்கூ கவிதைகள் வளர்த்தாய்!
உடலால் உலகை விட்டு மறைந்து விட்ட போதிலும்
உன்னத ‘ஹைக்கூ’ கவிதைகளில் என்றும் வாழ்வாய் அம்மா.
கருத்துகள்
கருத்துரையிடுக